டோக்யோ ஒலிம்பிக்கில் பிகினி அணிய மறுத்த ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள்: காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உடலை வளைத்து ஆடும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் பெண்களின் உடலை பாலியல் ரீதியில் காட்டும் கண்காட்சியாக மாறிவிட்டது என்று கலகக் குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள்.
ஜிம்னாஸ்டிக் போட்டிகள் தங்களது திறனைக் காட்டுவதற்காகத்தானே தவிர தங்களது உடல் வனப்பைக் காட்டுவதற்கு அல்ல என்று தீர்க்கமாக முடிவெடுத்த அவர்கள் முதல் கட்டமாக தங்களது உடை மூலமாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இடுப்புக்குக் கீழே கால் பகுதியை முழுமையாக மூடும் வகையிலான ஆடையை அணிந்தபடியே அவர்கள் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே இது தொடர்பான முடிவை அவர்கள் எடுத்திருந்தனர். பயிற்சிப் போட்டிகளின்போதே இந்த உடைகளை அவர்கள் அணியத் தொடங்கிவிட்டனர்.
ஒலிம்பிக் போட்டியில் உடலை முழுமையாக மறைக்கும் ஆடையை ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் அணிந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
விதிமுறைகள் என்ன?
ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் பிகினி கட் எனப்படும் இடுப்புக்கீழே உள்ள பகுதி தெரியும்படியான ஆடைகளை அணிவது வழக்கம்.
சில போட்டிகளில் மத மற்றும் மரபுக் காரணங்களுக்காக உடைகளில் சில மாற்றங்களைச் செய்து வீராங்கனைகள் பங்கேற்றிருக்கிறார்கள். இதற்கு சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆயினும் முழு உடலையும் மறைக்கும் ஆடையை ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் பொதுவாகத் தேர்வு செய்வது இல்லை.
ஆண்கள் தங்களது விருப்பப்படி, பங்கேற்கும் போட்டிகளின் பிரிவுக்கு ஏற்றவாறு அரைக்கால் சட்டையோ, முழுக்காலையும் மறைக்கும் ஆடையோ அணிந்து கொள்கிறார்கள்.
நாடுகளின் பதக்க பட்டியல்:
Please wait..
ஜெர்மன் வீராங்கனைகளின் எதிர்ப்புக்குக் காரணம் என்ன?
பண்பாட்டுக் காரணங்களுக்காகவோ, மதக் காரணங்களுக்காகவோ ஜெர்மனி வீராங்கனைகள் தங்களது உடை தொடர்பான முடிவை எடுக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மாறாக ஜிம்னாஸ்டிக்கில் பாலியல் ரீதியிலான முறைகேடுகள் அதிகரித்திருப்பதை எதிர்க்கும் வகையிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக ஜெர்மன் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
"அசௌகரியமாக உணராமல் தங்களை அழகாக முன்வைப்பதே இதன் நோக்கம்" என்ற ஜெர்மன் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு கூறியிருந்தது.
சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பின் விதிகளின்படி பிகினி உடைக்குக் கீழே காலை முழுமையாக மறைக்கும் ஆடையும் அதே நிறத்தில் இருக்க வேண்டும். ஜெர்மனி வீராங்கனைகளின் புதிய ஆடையும் அதற்கேற்றபடி வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஜெர்மனி பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியில் சாரா வோஸ், பாவ்லின், எலிசெப்த் சீட்ஸ், கிம் பூய் ஆகிய நால்வர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் நால்வரும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான முழு உடலையும் மறைக்கும் ஆடையை அணிந்திருந்தனர்.
ஆடை தொடர்பாக முன்னரே அணியில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் இறுதியில் முழு உடலையும் மறைக்கும் ஆடையை அணிய முடிவெடுத்ததாகவும் அணியில் இடம்பெற்றிருந்த சாரா வோஸ் கூறினார்.
"பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடையை அணிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பல்வேறு பாலியல் முறைகேடுகள் தொடர்பான சம்பவங்கள் அம்பலமாகின. இதனால் வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்புக்காக புதிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
உலகை உலுக்கிய பாலியல் முறைகேடு காரணமா?
அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தி 2016-ஆம் ஆண்டு அம்பலமானது. சிறுமிகள் உள்ளிட்ட முன்னூறுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பட மூலாதாரம், Getty Images
பயிற்சியாளர்கள், பயிற்சிக்கூட உரிமையாளர்கள், மருத்துவர்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருந்தது அம்பலமானது.
குறிப்பாக நீண்ட காலமாக அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்த லேரி நாசர் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்திருந்தார் என்பது உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னணி வீராங்கனையான சிமோன் பைல்ஸ் உள்ளிட்டோர் நாசர் மீது புகார் அளித்தனர். தன்மீதான குற்றச்சாட்டுகளை நாசர் ஒப்புக் கொண்டார். விளையாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய பாலியல் மோசடியாக இது கருதப்படுகிறது.
இந்த முறைகேடுகள் அம்பலமான பிறகு நடக்கும் முதல் ஒலிம்பிக் போட்டி இது என்பதால், ஜெர்மனி வீராங்கனைகளின் ஆடைத் தேர்வுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது.
மற்ற அணியினர் கூறுவது என்ன?
ஜெர்மனி வீராங்கனைகள் முழுக் காலும் தெரியும் வகையிலான பிகினி உடையை நிராகரித்துவிட்டு, புதிய உடையைத் தேர்வு செய்தது பல தரப்பிலும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
ஜெர்மனி வீராங்கனைகளின் முடிவு பாராட்டுக்குரியது என்று நார்வே நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஜூலி எரிக்சன் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளும் ஜெர்மனி வீராங்கனைகளின் உடைத் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். "தங்களதுக்கு வசதியான ஆடையை அணியும் அவர்களது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்" என்று முன்னணி வீராங்கனையான சிமோன் பைல்ஸ் கூறியுள்ளார்.
எனினும் தமக்கு பிகினி கட் உடையே வசதியானது என்றும், முழுக் காலையும் மறைக்கும் உடை தன்னை இன்னும் குள்ளமாகக் காட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வேறு விளையாட்டில் ஆடை விவாதமாகியுள்ளதா?
ஒலிம்பிக்கில் மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச அரங்கிலும் வீராங்கனைகள் அணியும் ஆடைகள் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன.
கடந்த வாரம் நார்வே நாட்டு பெண்கள் கடற்கரை கைப்பந்து அணி வீராங்கனைகள் பிகினி உடை அணியாததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஸ்பெயின் அணியுடன் நடந்த போட்டி ஒன்றில் பிகினி உடைக்குப் பதிலாக அரைக்கால் சட்டை அணிந்து அவர்கள் ஆடினர். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று கூறிய ஐரோப்பிய கைப்பந்துக் கழகம், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
கடற்கரை கைப்பந்து விதிகளின்படி வீராங்கனைகள் 10 சென்டி மீட்டர் அகலம் கொண்ட பிகினி உடையை அணிய வேண்டும். இந்த விதிமுறை தெரிந்திருந்தும், அபராதம் விதிக்கப்படலாம் எனறு அறிந்துமே மாற்று ஆடையே நார்வே வீராங்கனைகள் அணிந்தனர்.
ஏற்கெனவே இந்த விளையாட்டில் பல ஆண்டுகளாத் தொடரும் விவாதத்தை இந்தச் நிகழ்வு தீவிரமாக்கியது. நார்வே நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் அபராதம் விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் பாப் நட்சத்திரமான பிங், வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கட்டுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்தார்.
"கவர்ச்சியான" ஆடை அணிந்ததாக கூறியதால் கோபமடைந்த வீராங்கனை
வீராங்கனைகள் தங்களுடைய ஆடைகளை தாங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற விவாதத்தை தீவிரப்படுத்தும் மற்றொரு நிகழ்வு மாற்றுத்திறன் விளையாட்டுப் போட்டிகளிலும் நடந்திருக்கிறது.
"உகந்த ஆடை" அணிந்து வரும்படி தம்மை போட்டி நடத்தும் அதிகாரி ஒருவர் அறிவுறுத்தியதாக இங்கிலீஷ் சாம்பியன்ஷிப் பாரா தடகளப் போட்டிகளில் பங்கேற்ற ஓட்டப் பந்தய, நீளம் தாணஅடும் வீராங்கனை ஓலிவியா ப்ரீன் கூறினார்.
பிரிட்டனில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் அடுத்த மாதம் டோக்யோவில் நடக்க இருக்கும் பாராலிம்பிக் போட்டிகளிலும் இவர் பங்கேற்க இருக்கிறார்.
தாம் அணிந்திருந்த ஆடை உடல் அதிகமாகத் தெரியும்படி உள்ளதாக அந்த அதிகாரி கூறியதாகவும், "நான் என்ன அணிய வேண்டும் என யாரும் வலியுறுத்தக் கூடாது" என்றும் ப்ரீன் கூறினார்.
'டோக்யோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. ஆனால் அவர்களது ஆடை எதிர்ப்பு அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது.
ஒலிம்பிக் அட்டவணை:
பிற செய்திகள்:
- தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?
- டோக்யோ ஒலிம்பிக்: தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை
- ராஜ் குந்த்ராவை திட்டித்தீர்த்த ஷில்பா ஷெட்டி: நிர்வாண காட்சி விதிகள் பற்றி போலீஸ் விசாரணை
- உலகின் வயிற்றில் புளியைக் கரைக்கப் போகும் ஐபிசிசி அறிக்கை: எழுதும் பணி தொடங்கியது
- திமுகவுக்கு பாஜக பகையா நட்பா? அதிர்வலையை ஏற்படுத்தும் சீமானின் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












