Ind Vs Eng test: இங்கிலாந்தை திணறடித்த இந்தியா - தொடர் வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Surjeet Yadav/Getty images
- எழுதியவர், எம். பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. 3-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை வென்றதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிறது விராட் அண்ட் கோ. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 365 ரன்கள் எடுக்க, அஷ்வின் - அக்ஷர் படேல் சுழல் கூட்டணிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் 135 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்திருக்கிறது.
வாரி வழங்கிய பெஸ்
294 என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோரோடு ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல் இருவரும் அற்புதமாக ஆட்டத்தைக் கட்டமைத்தார்கள். நேற்று செய்த அதே தவறை இன்றும் செய்தது இங்கிலாந்து. ரன்களை வாரி வழங்கிய டாம் பெஸ், முதல் ஸ்பெல்லையே வீசவந்தார். இன்றும் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், இப்போதும் ஜேக் லீச்சைப் பயன்படுத்தத் தயங்கினார் ரூட். விளைவாக, வழக்கம்போல் மோசமான பந்துகளை, ஃபுல் டாஸ்ளை வீசித்தொடங்கினார் பெஸ். இரண்டு பேட்ஸ்மேன்களுக்கும் ரன் சேர்ப்பது மிகவும் எளிதானது.
ஆண்டர்சனோடு, ஸ்டோக்ஸ் ஆட்டத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் பெஸ் வீசவந்தது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது பந்தையே பௌண்டரிக்கு அனுப்பிவைத்தார் அக்ஷர் படேல். தொடர்ந்து ஃபுல் லென்த்தில், அடிப்பதற்கு ஏதுவாகவே வீசிக்கொண்டிருந்தார் பெஸ். அவர் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்து அப்படியே வீச, பௌலரின் தலைக்கு மேலே சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் வாஷிங்டன். அற்புதமான ஷாட்! அடுத்த பந்து, வழக்கமான ஒரு ஃபுல் டாஸ். கவர் திசையில் மிக அற்புதமாக பௌண்டரி அடித்தார் வாஷிங்டன்.
"நான் இங்கிலாந்து ஆடுகளங்களில் பெஸ் பந்துவீசையதைப் பார்த்தேன். அந்த ஆடுகளங்களிலேயே பந்தை சிறப்பாகச் சுழலச் செய்தார். அப்படியிருக்கையில் சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில் மிகச் சிறப்பாகச் செயல்படுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால், பெரும் ஏமாற்றமளித்திருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார் கவாஸ்கர்.
கவாஸ்கர் சொன்னதுபோல், பெஸ் அற்புதமான ஸ்பின்னர். ஆனால், லைன் & லென்த்தை சீராகக் கடைபிடிக்க முடியாததால் ரன்களை வாரிவழங்கிக்கொண்டிருக்கிறார். இன்று வீசிய முதலிரண்டு ஓவர்களில் பெஸ் 15 ரன்களை வாரி வழங்கியதால், வேறு வழியில்லாமல் ஜேக் லீச்சை அறிமுகம் செய்தார் ரூட். இரண்டு பௌண்டரிகள் அடித்து அவரை வரவேற்றார் அக்ஷர் படேல். லீச் வீசிய மூன்றாவது ஓவரில் சிக்ஸரும் அடித்தார். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் எளிதாக ரன் வந்துகொண்டிருந்தது.

பட மூலாதாரம், Surjeet Yadav/Getty images
ஒருபக்கம் ஆண்டர்சன் மிகச் சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்தார். இன்று ஸ்விங்குக்கு பெரிதாக ஒத்துழைக்காத ஆடுகளத்திலும் முடிந்தவரை பந்தை ஸ்விங் செய்தார். ஸ்விங் ஆகாதபோது ஆங்கிள்களை மாற்றி பேட்ஸ்மேன்களுக்கு சவாலளித்தார். நேற்று இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் செஷனை எப்படி எதிர்கொண்டார்களோ அதுபோலத்தான் இன்றும் அக்ஷர் - வாஷிங்டன் ஜோடி எதிர்கொண்டது. வேகப்பந்துவீச்சில் விக்கெட் விழாமல் சமாளித்து, சுழலில் ரன் சேர்த்தனர். ஆனால், களைத்துப்போன இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களால் தொடர்ந்து அதே வீரியத்தில் பந்துவீச முடியவில்லை.
முடிவுக்குக் கொண்டுவந்த ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ் - ஜோ ரூட் ஸ்பெல் தொடங்கிய பிறகுதான் ரன்ரேட் கொஞ்சம் குறையத் தொடங்கியது. ஸ்டோக்ஸ் பௌன்சர்களால் மிரட்ட, ரூட் லைன் & லென்த்தை சிறப்பாகத் தொடர பௌண்டரிகள் குறையத் தொடங்கின. அதனால், சிங்கிள்களில் கவனம் செலுத்தியது அந்தக் கூட்டணி. கடைசியில் அதுவே அவர்களுக்குப் பிரச்னையாகவும் அமைந்தது. தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு அவசரப்பட்ட அக்ஷர் படேல், 47 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அப்போது 96 ரன்கள் எடுத்திருந்தார் வாஷிங்டன் சுந்தர். அடுத்த ஓவரை வீசவந்தார் ஸ்டோக்ஸ். ஆனால், நான் ஸ்டிரைக்கர் எண்டில் நின்றிருந்தார் வாஷிங்டன். மற்ற வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்திருந்தால் சதம் அடித்திருப்பார். ஆனால், 4 பந்துகளில் இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ் இருவரையும் ஸ்டோக்ஸ் வெளியேற்ற, இந்தியா ஆல் அவுட் ஆனது. 365 ரன்கள் எடுத்ததன் மூலம், 160 ரன்கள் முன்னிலை பெற்றது.
அஷ்வின் - அக்ஷர் கூட்டணியிடம் பணிந்த இங்கிலாந்து
இங்கிலாந்தின் பேட்டிங்கைப் பொறுத்தவரை புதிதாக சொல்வதற்கு எதுவுமே இல்லை. கடந்த 3 போட்டிகளில் என்ன தவறுகளெல்லாம் செய்தார்களோ அதையே மீண்டும் செய்தார்கள். பந்தின் சுழலைக் கணிக்காமல் மோசமான ஷாட்கள் ஆட முயன்று வரிசையாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பலவீனத்தை அறிந்த இந்திய கேப்டன் விராட் கோலி அஷ்வின், அக்ஷர் படேல் இருவரையும் மட்டும் பயன்படுத்தினார்.
இருவரும் மிகவும் 'டைட்'டான லைனில் பந்துவீசியதால் ஆரம்பத்திலிருந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். ஐந்தாவது ஓவரிலேயே ஜேக் கிராளி, ஜானி பேர்ஸ்டோ இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றினார் அஷ்வின். இந்தத் தொடர் முழுவதும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்படி ஆட்டமிழந்தார்களோ அப்படியே ஆட்டமிழந்தார் கிராளி. சுழலாத பந்தைக் கணிக்க முடியாமல், எட்ஜாகி ஸ்லிப்பில் கேட்சானார்.
ஆனால், அடுத்து வந்த பேர்ஸ்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அஷ்வின். பந்தை நன்றாக 'ஃப்ளைட்' செய்து, சுழலவும் வைத்தார். எதிர்பாராத பேர்ஸ்டோ லெக் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அதேபோல், அக்ஷரின் பந்துவீச்சில் சுழலால் ஏமாந்து வெளியேறினார்கள் சிப்லி, ஸ்டோக்ஸ் இருவரும். இப்படி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இந்த இரண்டு ஸ்பின்னர்களையும் சமாளிக்க முடியாமல் வெளியேறிக்கொண்டே இருந்தார்கள். கேப்டன் ஜோ ரூட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். ஆனால், அவராலும் அஷ்வினின் அட்டகாச சுழலை சமாளிக்க முடியவில்லை.
இறுதிகட்டத்தில் டேன் லாரன்ஸ் மட்டும் ஸ்பின்னர்கள் இருவரையும் சிறப்பாகக் கையாண்டார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதை மட்டும் குறியாக வைத்துக்கொள்ளாமல், ரன் சேர்ப்பதும் முக்கியம் என்பதை உணர்ந்து விளையாடினார். ஆனால், அவருக்குத் துணையாக வேறு எந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனும் களத்தில் நிற்கவில்லை. கடைசி விக்கெட்டாக அவரும் வெளியேறும்போது, இங்கிலாந்து வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஷ்வின், அக்ஷர் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு 189 ரன்களும் அடித்த ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். "கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக நாங்கள் சார்ந்திருக்கக்கூடிய வீரராக அஷ்வின் விளங்கிவருகிறார்" என்று அவரைப் பாராட்டினார் கேப்டன் விராட் கோலி.
ஆட்டத்தை மாற்றிய பந்த்
நேற்று இரண்டாவது செஷன் முடியும்போது, இங்கிலாந்து வீரர்கள் இந்தப் போட்டியில் வென்றுவிடலாம் என்ற கனவோடு இருந்திருப்பார்கள். இந்தியா நான்காவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யவேண்டிய நிலையில், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுவிட்டால், நிச்சயம் போட்டியை வென்றிருக்கலாம். ஆனால், ரிசப் பந்த் அதை மாற்றிவிட்டார். தன் அற்புதமான இன்னிங்ஸால் ஆட்டத்தை முழுமையாக இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றினார் அவர்.
"கடந்த சில ஆண்டுகளாக பந்த் இந்திய அணிக்குச் செய்துகொண்டிருக்கும் பங்களிப்பு அளப்பரியது" என்றார் அஷ்வின். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஸ்கோர் செய்யத் தடுமாறியபோது, தன் இயற்கையான ஆட்டத்தால் எதிரணியை முழுமையாக அடிபணியவைத்தார் அந்த இளம் வீரர். குறிப்பாக நேற்று மூன்றாவது செஷனில் அவரின் அதிரடி ஆட்டம் இந்நாள் முன்னாள் வீரர்களிலிருந்து ரசிகர்கள் வரை அனைவரையும் பிரம்மிக்கச் செய்தது.

பட மூலாதாரம், Surjeet Yadav/Getty images
தொடரை மாற்றிய இரண்டாவது டெஸ்ட்
இந்திய அணியின் இந்தத் தொடர் வெற்றிக்கு, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது மிகப்பெரிய காரணம். முதல் போட்டியில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இந்திய அணிக்கு, மனதளவில் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது அந்தப் போட்டிதான். அதுமட்டுமல்லாமல், அந்த வெற்றி சாத்தியப்படவில்லையெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்புமே கைவிட்டுப்போயிருக்கும். ஆனால், அந்த வெற்றி அதை மாற்றியமைத்தது.
"இரண்டாவது போட்டியின் வெற்றிதான் எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. முதல் போட்டியில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. டாஸ் முக்கியம் அங்கம் வகித்திருந்தது. எங்கள் பௌலர்களால் அந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்தவே முடியவில்லை. அதிலிருந்து மீண்டு, இரண்டாவது போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது" என்று கூறிய கோலி, இரண்டாவது டெஸ்டில் ரோஹித் அடித்த மிகமுக்கிய சதத்தையும் குறிப்பிட்டார். பேட்டிங் செய்யவே கடினமாக இருந்த ஆடுகளத்தில் 161 ரன்கள் குவித்தார் ரோஹித் ஷர்மா.
அந்த இன்னிங்ஸிலிருந்தே இங்கிலாந்தின் சரிவு ஆரம்பித்தது. இந்தியாவை 300 ரன்களுக்கு மேல் அடிக்கவிட்ட இங்கிலாந்து, இந்திய சுழலில் தடுமாறியது. அதன்பிறகு, ரொடேஷன், அணித் தேர்வு பிரச்னை என தடுமாறத் தொடங்கியது ரூட்டின் அணி.
இங்கிலாந்து தவறவிட்டதும், இந்தியா பற்றிக்கொண்டதும்
"கடந்த 3 போட்டிகளுமே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இந்தியா மிகச் சிறப்பாக விளையாடியது. எல்லா விதத்திலும் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முன்னேற்றமடையவேண்டும். முக்கியமான நேரங்களில் இந்திய அணி வாய்ப்புகளை சரியாகப் பற்றிக்கொண்டது. நாங்கள் அதைத் தவறவிட்டோம். ரிசப் பன்ட் இன்னிங்ஸ் அதில் முக்கியமானது" என்று போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் கூறினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
ஒரு முன்னணி அணியின் சிறப்பே இப்படி முக்கியமான தருணத்தில் போட்டியைத் தங்கள் பக்கம் கொண்டுவருவதுதான். ஆஸ்திரேலியாவில் இருந்து அதை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது இந்தியா. முதல் நாளின் இரண்டாவது செஷனில் கம்பேக் கொடுத்து இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது, நேற்று ரிசப் பன்ட் - வாஷிங்டன் பார்ட்னர்ஷிப் அமைத்தது என மிகச் சிறப்பாகச் செயல்பட்டது இந்தியா. அதனால், இந்தப் போட்டியையும் தொடரையும் வென்றிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












