அம்மா கிளினிக்குகள் எப்படி செயல்படுகின்றன? தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துமா?

பிபிசி

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், ஆறு. மெய்யம்மை
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம், எப்படி செயல்படுகிறது?நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது?

இது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடிய திட்டமா? அல்லது தேர்தலை மனதில் வைத்து அவசர கதியில் தொடங்கப்பட்ட திட்டமா? மருத்துவர்களும், நோயாளிகளும் என்ன சொல்கிறார்கள்?

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்த திட்டம் இங்கு தொடங்கப்பட்டது. அதற்குள் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால், மக்களிடம் இந்த திட்டம் இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை.

இந்த நிலையில், இது மக்கள் நிதியை விரயமாக்கும் திட்டம் எனவும், தேர்தலை மனதில் கொண்டு அவசரமாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதே நேரம், மருத்துவ வசதிகள் சென்று சேராத சில மலைப்பகுதிகளில் இந்த திட்டம் பயனளிக்கும் என்றும் ஒரு அதிகாரி தெரிவிக்கிறார்.

மருத்துவ கிளினிக்

பட மூலாதாரம், ANI

இந்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் 2,000 கிளினிக்குகள் திறக்கப்பட்டு மருத்துவர், செவிலியர், மருத்துவமனை உதவியாளர் உட்பட மொத்தம் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பை அரசு அறிவித்திருந்தது. இதற்காக எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்களை மாதம் ரூ. 60,000 தொகுப்பு ஊதியத்தில் வேலையில் அமர்த்தப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 200 அம்மா கிளினிக்குகளும் அதற்கு அடுத்தபடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் 107 கிளினிக்குகளும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் 79 கிளினிக்குகளும், மதுரை மாவட்டத்தில் 50 கிளினிக்குகள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,000 அம்மா கிளினிக்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டு தேர்தல் அறிவிப்பு வரும் வரை பல்வேறு பகுதிகளில் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

"இதுவரை மாநிலத்தில் 1,947 கிளினிக்குகள் திறக்கப்பட்ட நிலையில், அவற்றில் 1,800 மருத்துவர்கள், தற்காலிக முறையில் 1,700 சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்," என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

செவிலியர்களை நியமிப்பதற்கு நீதிமன்ற ஆணைக்காக காத்திருப்பதாகவும் அதனால் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் செவிலியர்கள் சிலரை அம்மா கிளினிக்குகளுக்கு மாற்றியிருப்பதாகவும் அவர் கூறினார்.

கருவிகள் இருக்கின்றனவா?

கொரோனா காய்ச்சல் பரவும் காலத்தில் இத்திட்டத்திற்கு, ஆட்சியாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

மதுரையில் பிபிசி தமிழ் பார்வையிட்ட சில கிளினிக்குகளில் மருந்துகள் மட்டுமே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆக்சிஜன் ஏற்பு அளவைக் காட்டும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர், ரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி, சர்க்கரை அளவை கண்டுபிடிக்கும் சாதனங்கள் போன்ற இன்றியமையாத மருத்துவ கருவிகள் இல்லை. நோயாளிகள் வருகையும் பெரிதாக இல்லை.

(இவற்றில் பல்ஸ் ஆக்சிமீட்டர் என்பது கொரோனா தொற்றியவர்களுக்கு நோயின் தீவிரத் தன்மையைக் கண்காணிப்பதற்கான மிக இன்றியமையாத கருவி. சுமார் ஓராயிரம் விலையில் மருந்துக் கடைகளிலேயே கிடைப்பது. தனி நபர்களே கொரோனோ காலத்தில் இதனை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்று சில மருத்துவர்கள் பரிந்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது).

எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள்?

மதுரை மாவட்டத்தில் விரகனூர் டீச்சர்ஸ் காலனியில் ஒரு மாதமாக செயல்படும் கிளினிக்கிற்கு கடந்த செவ்வாய்கிழமை வரை 14 நோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக வந்துள்ளனர். அந்த கட்டடத்தில் இயங்கி வந்த நூலகம் இப்போது மினி கிளினிக்காக ஆக மாற்றப்பட்டிருக்கிறது.

TWITTER EDAPPADI PALANISWAMI

பட மூலாதாரம், TWITTER EDAPPADI PALANISWAMI

இதேபோல் கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் நெல்பேட்டையிலும் நோயாளிகளின் வருகை மிக குறைவாகவே இருந்தது. மதுரை மாநகராட்சி அங்கே இருந்த சமுதாய கூடத்தை அம்மா கிளினிக் ஆக மாற்றியுள்ளது. அருகே வசிக்கும் சீனி சர்வுதீன் எனும் தொழிலாளி, "மாத்திரைகள் மட்டுமே கொடுக்கின்றனர், மற்ற பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. அப்படியிருக்கையில் இந்த கிளினிக்குகளால் என்ன பயன்?" என்று கேட்கிறார்.

மதுரை சௌராஷ்டிராபுரத்தில் உள்ள கிளினிக்கை பிபிசி தமிழ் பார்வையிட்டபோது, ஒரு நோயாளி மட்டுமே இருந்தார். கொரொனா தடுப்பூசி போடுவதற்காக வந்த மற்றொருவரை மறுநாள் காலையில் வருமாறு அறிவுறுத்தினர் அங்குள்ள ஊழியர்கள். ஆனால், தினமும் சராசரியாக குறைந்தது 50 நோயாளிகளாவது வருவதாக கூறுகிறார், அங்கே பணியாற்றும் மருத்துவர் விக்ரம்.

இந்த ஏரியாவில் சிறிய துணிக்கடை ஒன்றை நடத்துபவர் கூறும்போது, "ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிளினிக்குகளில் மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் எப்போதும் போல் அண்ணா நகரில் இருக்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றே ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை பெறுகின்றனர்," என்றார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னையில் இத்திட்டத்தின் திறப்பு விழாவின்போது கொடுத்த ஒரு பேட்டியில், "இதன் மூலம் உலகளாவிய சுகாதார சேவையை வீட்டிற்கே கொண்டு செல்கிறோம்," என்றார்.

மருந்தகங்கள் போல செயல்படுவதாக குற்றச்சாட்டு

அடிப்படை சோதனைக் கருவிகள் அனைத்து கிளினிக்குகளிலும் உள்ளன என்றும் ரத்தப் பரிசோதனை போன்ற அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு அருகே சுகாதார மையங்களுக்கு செல்லலாம் என்றும் கூறினார்.

ஆனால், இந்த கிளினிக்குகள் அனைத்தும் மருந்தகங்கள் போல மட்டுமே செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கே.செந்தில்.

காணொளிக் குறிப்பு, தமிழக அரசின் அம்மா மினி கிளீனிக் எப்படி இயங்குகிறது?

"ஏற்கெனவே இருக்கும் மருத்துவ திட்டங்களுக்கு புதிதாக மருத்துவர் பணியிடங்களை உருவாக்கி அனுமதி கொடுப்பது தான் பயனுள்ளதாக இருக்குமே தவிர இந்தப் புதிய திட்டத்தில் தொகுப்பூதியத்தில் மருத்துவர்களையும் பணியாளர்களையும் அமர்த்தியிருப்பது ஒரு வீணான செயல். ஒரு நூறு மீட்டர் தூரத்தில் துணை சுகாதார நிலையமோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையமோ இருக்கிறபோது அம்மா கிளினிக்குகளால் என்ன பயன்? இது நிதியை விரயமாக்கும் திட்டம். அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் குறைந்தது 500 பணியிடங்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன. அதில் கவனம் செலுத்தி இந்த நிதியை அதற்கு பயன்படுத்தினால் மக்களுக்கு பயனளிக்கும். இது தவிர நடைமுறைச் சிக்கல்களும் உள்ளது. மருத்துவர்களோ மற்ற பணியாளர்களோ விடுப்பில் சென்றால் அவர்களுக்கு மாற்று என்ன? அம்மா கிளினிக்குகள் வெறுமனே மருந்தகமாக மட்டுமே செயல்படுகின்றன," என்று அவர் கூறினார்.

மற்ற அரசு மருத்துவமனைகளைப் போல இல்லாமல் அம்மா மினி கிளினிக்குகளுக்கு அரசு சனிக்கிழமை விடுமுறை அளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், "முதலமைச்சரின் அம்மா கிளினிக் திட்டம் மனித ஆற்றலை விரயமாக்கும் திட்டம். ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல இங்கே சிகிச்சைகள் கொடுக்கப்படுவதில்லை. ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இது ஒரு நிலையான திட்டம் இல்லை. இதற்கு அரசு நிதி ஒப்புதல் மார்ச் 2021 வரைதான் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அதிக நோயாளிகள் வருவதாக இருந்தால் அங்கே மற்றுமொரு சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டியது தானே. மேலும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரிக்கப்பட்டு பேணப்படுகின்றன. அந்த நோயாளிகள் இந்த கிளினிக்குக்கு சென்று மருந்து வாங்கிக் கொள்ளும்பட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரவு சேகரிப்பு பாதிக்கப்படும். தொடர் கண்காணிப்பும் கடினமாகும். இத்திட்டம் முழுக்க முழுக்க அதிமுகவின் வாக்கு வங்கி அரசியலுக்காக அவசரகதியில் கொண்டுவரப்பட்ட திட்டமின்றி வேறு இல்லை," என்று கூறினார்.

பொது சுகாதாரக் கட்டமைப்பில் இதன் இடம் என்ன?

செங்கல்பட்டில் உள்ள அரசு சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, "இத்திட்டம் நல்ல திட்டமே. ஏனெனில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூட இல்லாத இடங்களில் குறிப்பாக கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் இதுபோன்ற சேவை அமலாக்கத்தின் மூலம், போலி மருத்துவர்களிடம் மக்கள் செல்வதை தடுக்க முடியும். எனினும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அம்மா உணவகங்களை போல இதற்கு பெரிய வரவேற்பு இல்லாதது உண்மையே," என்றார்.

இந்த திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை என்ற பொது சுகாதாரக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தோன்றவில்லை.

ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய அந்த சுகாதாரத் துறை அதிகாரி, இந்த அம்மா கிளினிக்குகள், துணை சுகாதார மையங்களுக்கும் மேலே, அதே நேரம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கீழே வைத்துப் பார்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இது பற்றி மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்டபோது இத்திட்டத்தை பற்றி தற்போதைய நிலையில் பேசுவது, தேர்தல் நடத்தை விதி மீறலாகலாம் எனவும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே இந்நேரத்தில் பேச முடியும் என்றும் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோரை பலமுறை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: