தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகளில் சாதித்தது என்ன, சறுக்கியது எங்கே?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy FB

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இன்றோடு நான்காண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜெயலலிதா மறைவு, தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் கடந்து முதல்வர் வேட்பாளராக தேர்தல் பிரசாரத்தில் சுழன்று வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்களா?

சசிகலாவை முன்மொழிந்த ஓ.பி.எஸ்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்து வந்த நாள்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். தொடர்ந்து சட்டமன்ற அ.தி.மு.க தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து, அப்போதைய ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ராஜ்பவன் மாளிகைக்குச் சென்று சசிகலா கொடுத்தார். இதன்பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். அடுத்து வந்த நாள்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு தேர்வு செய்யப்பட்ட ஒருவர், முதலமைச்சராகப் பதவியில் அமராமல் போனதும் இதுவே முதல் முறை எனவும் கூறப்பட்டது. இதற்கு முன்னதாக சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மேற்கொண்ட தர்மயுத்தம், அம்மா ஆவியுடன் பேசியதாகக் கூறியதெல்லாம் சசிகலா தரப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தின. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்வதற்கு முன்னர், எடப்பாடி பழனிசாமியிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். `சிறையில் இருந்து வந்ததும் தன்னிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார்கள்' என சசிகலா நம்பினார். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வென்றதும் முதல்வர் நாற்காலியை நோக்கி அவர் நகர்வதையும் முதல்வர் தரப்பு உணர்ந்து கொண்டனது. விளைவு, டெல்லியின் துணையை நாடினார் எடப்பாடி பழனிசாமி.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

எடப்பாடியை பாராட்டிய பிரதமர்!

அதன் பயனாக நான்கு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துவிட்டு, முதல்வர் வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கிவிட்டார். கடந்த ஞாயிறன்று சென்னை வந்த பிரதமர் மோதி, பயிர் சாகுபடியில் தொடர்ச்சியாக முதல் இடம் பெற்றதற்கும் கடந்த ஆண்டு நீர் மேலாண்மையில் முதன்மை இடம் பிடித்ததற்காகவும் தமிழக அரசைப் பாராட்டினார். `நம்பிக்கை - நாணயம்- ஓ.பி.எஸ்' என்றெல்லாம் விளம்பரம் கொடுத்து வந்த துணை முதல்வரும், `அம்மா வழியில் அடிபிறழாமல் ஆட்சி நடத்தி வருகிறார்' எனக் கோவை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு மழை பொழிந்தார். `அண்ணன், தம்பி சண்டைதான்' என சில நாள்களுக்கு முன்னர் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், முதல்வரின் செயல்பாடுகளை ஏகமாகப் புகழ்ந்தார்.

மக்கள் தலைவரா எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy FB

சொந்தக் கட்சிக்குள்ளேயே இருந்த புகைச்சல்களை நீர்த்துப் போகச் செய்தது, 110 விதியின்கீழ் விவசாயக் கடன் ரத்து உள்பட பல்வேறு அதிரடிகளையும் முதல்வர் நிகழ்த்தி வருகிறார். `உண்மையில் இந்த ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறதா?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` எடப்பாடி பழனிசாமியின் முக்கிய பலமாக இருப்பது அவரது எளிமையான கிராமப்புறத்துக்குரிய தோற்றமும் அணுகுவதற்கு எளிமையானவராக இருப்பதும்தான். அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலரும், முதல்வர் எளிதாக அணுகக்கூடியவராக இருப்பதாக திருப்தி தெரிவிக்கின்றனர்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இது பெரிய ஆரோக்கியமான மாற்றமே. ஆனால் பழனிசாமி ஒரு மக்கள் தலைவராக இந்த நான்கு ஆண்டுகளில் மலர்ந்திருக்கிறாரா என்றால் அதில் சந்தேகமே நிலவுகிறது. மேடைப்பேச்சுகளில் தவறுகள் செய்வது, மத்திய அரசிடம் மிகவும் பணிந்துபோவது, ஆளுநரின் கை ஓங்கி இருக்க அனுமதிப்பது ஆகியவை அவரது குறைபாடுகளாகத் தென்படுகின்றன.

கட்சிக்குள் இருக்கும் பிற தலைவர்கள் அவரது முழுக் கட்டுப்பாட்டில் இல்லாதது இன்னொரு குறைபாடு. நான்காண்டுகள் ஆட்சியில் தாக்குப் பிடித்து இருப்பது என்பதை மட்டும் வைத்துப் பார்த்தால் முதலமைச்சர் தன்னளவில் வெற்றி பெற்றுள்ளார். மாநில நலன் தொடர்பான தொலைநோக்கு என்று பார்க்கையில் ஏக்கப் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க முடியவில்லை" என்கிறார்.

ஆளுநரின் நிராகரிப்பு!

`` 2019 ஆம் ஆண்டு வரையில் பெரும்பான்மை இல்லாமலேயே அ.தி.மு.க அரசு நீடித்தது. பா.ஜ.க துணையோடுதான் ஆட்சியைக் கொண்டு சென்றனர். முதல்வர் கொடுத்த அபிடவிட்டின்படியே இந்த அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான் இருந்தது. இவ்வளவு குறைவான மெஜாரிட்டிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் சென்று மனு கொடுத்தன. அந்த வகையில், ஆளுநர் அலுவலக வாயிலில் பேட்டி கொடுத்த வி.சி.க தலைவர் திருமாவளவன், `மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அரசுக்குத் தெரிவிக்கும் எண்ணம் ஆளுநருக்கு இல்லை' என்றார். ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் என்பது பெரும்பான்மை ஆதரவு. அதனை ஆளுநரே நிராகரித்தது ஏற்புடையதாக இல்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

தி.மு.கவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy FB

மேலும், `` ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலோடு 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அந்த வெற்றியே எடப்பாடியின் ஆட்சியை ஸ்திரப்படுத்தியது. ஆட்சிக்கு எதிராக எவ்வளவோ பேசிய தி.மு.க, இந்தத் தேர்தலில் ஏன் வெற்றி பெற முடியவில்லை? அவர்கள் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றிருந்தால் சட்டப்பூர்வமாகவே இந்த ஆட்சியை அகற்றியிருக்கலாம். அடித்தட்டில் இருந்தே மேலே வந்த அரசியல்வாதியாக எடப்பாடி இருக்கிறார். அதனால் வாக்குகளை எப்படிப் பெறுவது என்பது அவருக்குத் தெரியும்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` தற்போதைய நிலையில் அரசின் கஜானா என்பது சுத்தமாகக் காலியாகிவிட்டது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக மாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஓய்வூதியப் பலன்கள் கொடுப்பதற்கு வழியில்லை. அடுத்து வரக்கூடிய ஆட்சிக்கு கஜானாவில் எதுவும் இருக்கப் போவதில்லை. நன்கு திட்டமிடப்படாத திட்டங்களே இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றன. பொங்கல் பரிசு 2,500 ரூபாயைக் கொடுத்தனர். இதர திட்டங்களுக்காக உள்ள நிதியில் இருந்தே இதற்கான பணம் ஒதுக்கப்பட்டது. அடுத்ததாக, தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. தமிழ்நாடு இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்" என்கிறார் கவலையுடன்.

குடிமராமத்து நாயகனா?

தொடர்ந்து பேசிய ஷ்யாம், ``அ.தி.மு.க அரசு நான்கு வருட காலம் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம். காவிரி டெல்டாவைப் பாதுகாக்கும் சட்டம், 7.5 சதவிகித ஒதுக்கீடு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வில் முன்னுரிமை உள்ளிட்டவை பாராட்டப்படக் கூடிய விஷயங்கள். அதேநேரம், நீர் மேலாண்மையில் இந்த அரசு சிறப்பாகச் செயல்பட்டதாகப் பிரதமர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்குத் தெரிந்தே 3,4 தடுப்பணைகளுக்கு மேல் உடைந்துவிட்டது. `குடிமராமத்து நாயகர்' என முதல்வரை அழைக்கின்றனர். ஆனால், கட்டுமானப் பொருள்களில் தரமில்லாமல் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தடுப்பணையின் நோக்கம் என்பதே நீரைத் தடுப்பதுதான். அதன் நோக்கமே அடிபட்டுவிட்டது. எல்லாவற்றிலும் ஊழல் என்பது முக்கியமாக உள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

நெல் கொள்முதல் மையங்களில் இருந்து பணம் வருவதே பெரும்பாடாக உள்ளது. கடந்த 15 நாள்களாக விவசாயிகளுக்குப் பணமே வரவில்லை. பெரிய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2, 3 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் கடன் வாங்கித்தான் அறுவடை செய்துள்ளனர். மேலும், பயிர்க்கடனை சாதாரண விவசாயிகள் வாங்குவதற்கு வாய்ப்பில்லை. இங்கு 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளுக்குத்தான் மரியாதை அதிகம். பத்து வருடங்களாக அ.தி.மு.க ஆட்சி நடப்பதால் அவர்கள்தான் கூட்டுறவு சங்கங்களில் பொறுப்பில் இருக்கிறார்கள்.

டெண்டர்கள் எல்லாம் யாருக்கு?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy FB

கூட்டுறவு சங்கங்களில் 99,000 ரூபாய் வரையில் கடன் பெறலாம். ஒரு லட்சத்துக்கு மேல் வாங்கினால் பத்திரம் கொடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் ஒரே குடும்பத்தில் 7 முதல் 8 லட்ச ரூபாய் வரையில் கடன் தள்ளுபடி ஆகியிருக்கும். இதில் கொடுமை என்னவென்றால், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுகிறவர்கள், அதனைக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கும் வேலைகளையும் செய்துள்ளனர். பணம் வாங்கியவருக்கு அந்தக் கடன் தள்ளுபடி ஆகிவிட்டது. ஆனால் வட்டிக்கு வாங்கியவர்கள் தொடர்ந்து செலுத்தும் நிலை உள்ளது" என்கிறார்.

``20,500 கோப்புகளில் கையொப்பமிட்டது சாதனை இல்லையா?" என்றோம்.

``ஆமாம். கோப்புகளில் கையொப்பமிடுவது துரிதமாக நடக்கிறது. டெண்டர் வந்தால் மட்டும் வேகமாக கையொப்பமிடுகின்றனர். முதல்வர் கையொப்பமிட்ட 20,500 கோப்புகளை ஆராய்ந்து பார்த்தால் இப்படித்தான் இருக்கும். நெடுஞ்சாலை டெண்டர்கள் எல்லாம் உடனுக்குடன் கிளியர் ஆகிவிடுகின்றன. `என் சம்பந்தி தொழில் செய்யக் கூடாதா?' என முதல்வர் கேட்கிறார். `டெண்டரில் யார் பங்கேற்க வேண்டும்' என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. அதையெல்லாம் அவர் கவனிக்கிறாரா எனத் தெரியவில்லை. இந்த ஆட்சி ஓடும் வரையில் ஓடும். இந்தத் தேர்தலில் 30 இடங்களில் வென்றாலே எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிவிடும்" என்கிறார் ஷ்யாம்.

பிளஸ்.. மைனஸ்!

``தொடர் மழை, குளங்கள் நிரம்பியது போன்றவை பாசிட்டிவ்வான அம்சங்கள். மத்திய அரசுக்கு இணங்கிப் போகிற அரசாக இருப்பதால் நீட், புதிய கல்விக் கொள்கை, எழுவர் விடுதலை போன்றவற்றில் இந்த அரசால் எதையும் செய்ய முடியவில்லை. மத்திய அரசின் நிலைப்பாடுகளை எதிர்ப்பதில், ஜெயலலிதா அளவுக்கு அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது மிகப் பெரிய மைனஸ்.

வறட்சி, பஞ்சம் போன்றவை இல்லாததால், ஆட்சிக்கு பெரிதாக எதிர்ப்பு இல்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆளும்கட்சிக்கான எதிர்ப்பு இருந்தாலும் அது வெளிப்படையாகத் தெரியவில்லை. எம்.எல்.ஏ-க்களை சரியாக வைத்துக் கொள்வார் என்பதால்தான், அவரிடம் சசிகலா அதிகாரத்தை ஒப்படைத்தார். 18 எம்.எல்.ஏக்கள் போன பிறகும் ஆட்சியைத் தக்கவைத்ததெல்லாம் பெரிய பிளஸ்" என பிபிசி தமிழிடம் விவரித்தார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.

குறை சொல்ல முடியாத அரசு!

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy FB

``முதல்வர் செயல்பாடுகள் மீதான அதிருப்தி சரிதானா?" என அ.தி.மு.கவின் வழிகாட்டுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜே.சி.டி.பிரபாகரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` அப்படியில்லை. முதல்வரும் துணை முதல்வரும் இந்த ஆட்சியைச் சிறப்பாகக் கொண்டு செல்கின்றனர். அம்மா இறந்தபோது மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக எல்லோரும் கூறினார்கள். `இந்த அரசு ஒரு மாதம்கூட தாக்குப் பிடிக்காது, எளிதில் ஆட்சி மாற்றம் ஏற்படும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். ஊடகங்களும் அப்படியே எழுதின. நிதானமாகக் காய்களை நகர்த்தி அம்மாவின் ஆட்சியைத் தக்கவைத்தார்" என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், `` 2023-ல் முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை ஆக்குவேன் என முதல்வராக இருந்த அம்மா சொன்னார். அதை 2021 ஆம் ஆண்டிலேயே சாதித்த பெருமை முதல்வரையும் துணை முதல்வரையுமே சாரும். மத்திய அரசின் விருதுகளைப் பெற்றிருப்பதே அதற்குச் சான்று. நீர் மேலாண்மை, மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மருத்துவக் கல்லூரிகள், காவிரி, பெரியாறு அணை பிரச்னையைத் தீர்த்து வைத்தது, கொரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டது, 2000 மினி கிளினிக்குகள் என ஏராளமானவற்றை அடுக்கலாம். விவசாயக் கடன் தள்ளுபடியும் இந்த ஆட்சியின் சிறப்புக்கு ஒரு மைல் கல். சாதாரணமாக ஒரு கட்சி பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். ஆனால், குறை சொல்ல முடியாத அரசாக இந்த ஆட்சி உள்ளது" என்கிறார்.

மத்திய அரசிடம் ஏன் பணிவு?

``மத்திய அரசிடம் பணிந்து செல்வது, ஊழல் என சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறதே?" என்றோம்.

`` கச்சத்தீவு விவகாரம், காவிரி நீர் உள்ளிட்டவற்றில் தி.மு.கவின் அணுகுமுறை சரியில்லை என்கிறோம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகித்தான் அம்மா தீர்வைப் பெற்றுத் தந்தார். மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு நாம் எதையும் அடையவில்லை. மத்திய அரசிடம் அடிமையாக இருந்து ஆட்சியைத் தக்கவைக்க வேண்டிய அவசியமும் இல்லை. எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. மத்திய அரசிடம் அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு இணக்கமாகச் செயல்படுகிறோம். எம்.ஜி.ஆர், அம்மா வழியில் செல்லக் கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. எதிர்க்கட்சிகளே வியந்து பாராட்டும் அளவுக்குச் செயல்படுகிறது. எனவே, விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்கிறார்.

ஆட்சி நிர்வாகத்தில் நான்காண்டுகளை நிறைவு செய்தாலும், சட்டமன்றத் தேர்தல், கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம், உள்கட்சி விவகாரங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு வரக் கூடிய மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே அவரது ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரம் என்ன என்பதை முடிவு செய்யும்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: