கேரளா: பினராயி விஜயன் "ஜெயலலிதா பாணி தேர்தல்" வெற்றியை பெறுவாரா?

பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி

தமிழகத்தில் 2016இல் ஜெயலலிதாவுக்கு அமைந்ததை போல, கேரளாவில் இந்த முறை முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தைப் போல - ஓரளவுக்கு கர்நாடகாவைப் போல - கேரளாவிலும் அடுத்தடுத்த தேர்தல்களில் மாற்றுக் கட்சிகள் அல்லது மாற்றுக் கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் வெற்றி வாய்ப்பை அளித்து வந்துள்ளனர்.

அங்கு ஒரு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது வழக்கம்.

தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சியைப் பிடித்து வந்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுழற்சியை ஜெயலலிதா உடைத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். இப்போது கேரளாவில் உள்ள உணர்வுகள், அப்போது தமிழகத்தில் இருக்கவில்லை.

கேரளாவில் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சித் தேர்தல்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்த பெரும்பான்மை வெற்றிகள், கேரளாவில் ஆளும் கூட்டணிக்கு சாதகமான சூழல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பெரும்பாலும் சில மாத இடைவெளியில் வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைவது வழக்கம்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைமை உடனடியாக செயல்பட்டு, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுத்தியது. ஆனாலும் தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாகும் என மிகுந்த நம்பிக்கையுடன் இடதுசாரிகள் காணப்படுகிறார்கள்.

``இந்த முறை எங்கள் அரசு ஆட்சியில் தொடருவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆட்சிக்கு எதிரான அலை என எதுவும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே இதற்கான அத்தாட்சி'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், ஆளும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஏ. விஜயராகவன், பிபிசி இந்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நம்பிக்கைக்கான காரணம்

``அரசின் செயல்பாட்டின் அடிப்படையில் இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டத்தால் 60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். பெருந்தொற்று காலத்திலும் 88 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்று பாதித்த நோயாளிகளுக்கு இப்போதும் இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமையைக் கையாள அரசு மருத்துவமனைகளில் எல்லா வசதிகளும் உள்ளன'' என்று முன்னாள் எம்.பி ராஜேஷ், பிபிசி இந்தி பிரிவிடம் கூறியுள்ளார்.

பெருந்தொற்று அல்லது வெள்ள பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளை வைத்து மட்டும் அரசின் செயல்பாட்டை மதிப்பிட்டு விடக்கூடாது என்றும், கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையிலும் இதைக் காணலாம் என்றும் ராஜேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான பேராசிரியர் எம்.ஏ. பேபி போன்ற மற்ற தலைவர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் வல்லவராக காங்கிரஸ் கட்சியினரால் அறியப்படுபவர்.

அவர் நம்மிடம், ``இடதுசாரிகள் கூட்டணி கேரளாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களின் விளம்பரமும் அதே மாதிரி உள்ளன. ஆட்சியில் சிறப்பானவை என்று கூறுவதற்கான எந்த அம்சமும் கிடையாது'' என்று தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய முதல்வரின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த மூத்த அரசியல் விமர்சகரான பி.ஆர்.பி. பாஸ்கர், ``முந்தைய எல்.டி.எப் அரசுகளுடன் ஒப்பிடும்போது, வெற்றிகரமான முதல்வராக, நற்பெயர் பெற்ற முதல்வராக பினராயி விஜயன் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிறருடன் தொடர்பு கொள்ளும் திறனும், நெருக்கடியான சூழல்களில் அவர் தினமும் அளிக்கும் ஆலோசனைகளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன'' என்று கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் கேரள காங்கிரஸ் (மணி) பெற்ற வெற்றி, இந்தக் கூட்டணிக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்துள்ளன. கட்சியின் நிறுவனரான மறைந்த கே.எம். மணியின் மகன் ஜோஷ் கே. மணி இப்போது அந்தக் கட்சியின் தலைவராக இருக்கிறார். கட்சிக்குள் ஏற்பட்ட மோதலில், தனக்கு எதிராக இருந்தவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததால், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அவர் விலகி, இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தார்.

அவர் கூட்டணி மாறியதால் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில் (கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழை உள்ளிட்டவை) பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்களின் ஆதரவு இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்தது.

இவ்வளவு ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியால் செய்ய முடியாமல் போன விஷயத்தை ஜோஸ் மணி மூலம் அக்கட்சியினரால் செய்ய முடிந்துள்ளது. கட்சியின் செயலாளராக முன்னர் இருந்தபோது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் ஆதரவைப் பெற்று, கட்சியின் பலத்தை அதிகரிப்பதில் முதல்வர் பினராயி விஜயன் கவனம் செலுத்தினார். இந்தக் கூட்டணியில் ஜோஸ் மணி சேர்ந்திருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

மறக்க முடியாதவை

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான தோல்வி, குறிப்பாக கட்சியின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் கிடைத்த தோல்வி, காங்கிரஸ் மேலிட தலைமையை திகைக்க வைத்தது.

தாரிக் அன்வர் தலைமையிலான குழு கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கட்சித் தலைவர்களுக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

சோனியாவின் தலையீடு காரணமாக, உம்மன் சாண்டி மீண்டும் தீவிர அரசியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். உடல் நலக் குறைவால் ஒதுங்கி இருந்த உம்மன் சாண்டி, இப்போது, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில காங்கிரஸ் தலைவர் முலப்பல்லி ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து முக்கிய பங்காற்றி வருகிறார்.

கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் செல்வாக்கு நீண்டகாலம் நிலைக்காது என்று உம்மன் சாண்டி கூறுகிறார்.

``கே.எம். மணிக்கு எதிராக பொய்ப் புகார்களை எழுப்பி மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்தியதை கே.எம். மணியின் அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இதனால் மார்க்சிஸ்ட் கட்சி பயன் பெற முடியாது'' என்கிறார் அவர்.

``கேரள காங்கிரஸ் (மணி) கட்சியின் விலகலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில்தான் உம்மன் சாண்டி களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்று பாஸ்கர் கூறியுள்ளார்.

உம்மன் சாண்டியால் பெரிய சவால் எதுவும் ஏற்பட்டுவிடாது என்று இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கருதுகின்றனர்.

``காங்கிரஸ் கட்சிக்குள் தலைமை இடத்துக்கான போட்டி உள்ளது'' என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாதவிலக்கு பருவத்தில் இருக்கும் பெண்களும் சுவாமி அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு எதிராக பிரச்னை எழுப்ப காங்கிரஸ் முயற்சித்தால் அது பலன் தராது, அது இப்போதைய பிரச்னையாக இல்லை என்று அந்தத் தலைவர்கள் கூறுகின்றனர்.

``ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத ஒரு முஸ்லிம் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்னையில் செயல்பட்டதை இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வெளிப்படுத்தியதால் சபரிமலை பிரச்னை பெரிதானது'' என்று, தன் பெயரை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி ஓர் ``உற்சாகத்தை'' அவர்களுக்கு தந்திருக்கிறது என்பதை பலரும் ஒப்புக்கொள்கின்றனர். கோவிட் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் ரேஷன் பொருட்களையும், சுகாதார வசதிகளையும் வீடுகள் அளவில் கொண்டு சேர்த்த களப் பணியாளர்களின் செயல்பாடுகளால் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி சாத்தியமானது.

பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

``இப்போது கிடைத்துள்ள உற்சாகம், சட்டமன்ற தேர்தல் வெற்றி வரை நீடிக்குமா என்பதை இப்போது கூறிவிட முடியாது. இப்போது இரண்டு அணிகள் மோதுவதாக மட்டும் தேர்தல் இருக்காது என்பது மட்டும் நிச்சயமான விஷயம். பாஜக அதிக இடங்களைப் பிடிக்காது என்றாலும், குறைந்தது 2 டஜன் தொகுதிகளில் தேர்தல் முடிவை மாற்றக் கூடிய கட்சியாக இருக்கும்'' என்று அரசியல் விமர்சகர் ஜோஷப் மாத்யூ பிபிசி இந்தி பிரிவிடம் தெரிவித்தார்.

நூறாண்டுகளுக்கு மேல் நீடிக்கும் கேரள மலன்கரா பழமைவாத தேவாலயம் மற்றும் ஜேக்கோபைட் சிரியன் கிறிஸ்தவ தேவாலய பிரச்சினையை மாத்யூ சுட்டிக்காட்டுகிறார். இரு பிரிவினரும் சர்ச்சையை தீர்த்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உதவிடவில்லை.

பிரதமர் நரேந்திர மோதியின் தலையீடும் இதுவரை இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவிடவில்லை. ஆனால், இதை முன்வைத்து சில கிறிஸ்தவர்களின் ஆதரவை பெற பாஜக முயற்சிக்கும் என்ற வாய்ப்பை யாரும் மறுக்க முடியாது.

``அது பிரதான பிரச்னை அல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உள்பட்டு கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். நடைமுறை சாத்தியமான ஒரு திட்டம் உருவாக்கப்படும். இப்போதைக்கு, அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை நிலைய உறுப்பினர் பி. ராஜீவ் பிபிசி இந்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய ஜனநாயக கூட்டணி என இரண்டு அணிகளுக்குமே செல்வாக்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள சிறு பிரிவு வாக்காளர்கள் தான் இதில் ஏதாவது ஓர் அணிக்கு வெற்றியை உறுதி செய்பவர்களாக இருக்கின்றனர்.

``இப்போதைக்கு எந்த வாய்ப்பையும் நீங்கள் மறுத்து விட முடியாது. நெருக்கமான போட்டியாக இது இருக்கலாம்'' என்கிறார் பாஸ்கர்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: