இந்தியா Vs இங்கிலாந்து: விமர்சித்த எதிரணி, கோபப்பட்ட கோஹ்லி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், @imVkohli TWITTER
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற நிலையில், மைதான பிட்ச் பற்றிய இங்கிலாந்து வீரர்களின் விமர்சனத்தை இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி நிராகரித்துள்ளார்.
ஆனால், தங்களுடைய வெற்றிக்கு பிட்ச் காரணம் என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, ஆடுகளத்தில் நிலவிய சூழலை தங்களுக்கு சாதகமாக அர்ப்பணிப்புடன் இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொண்டதே வெற்றிக்குக் காரணம் என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், "இந்தியாவுக்கே இந்த வெற்றி கிடைக்க வேண்டும். எல்லா களத்திலும் அவர்கள் தோற்கடிக்கிறார்கள். எங்களுக்கும் சில படிப்பினை கிடைத்துள்ளது. இப்போது தொடர் 1க்கு 1 என சமமாகியிருக்கிறது. முதல் நாளிலேயே நாங்கள் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும்," என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதேவேளை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெபின் பீட்டர்சன் உள்ளிட்டோர், ஆரம்ப நாள் முதலே சென்னை ஆடுகளம் சரியில்லை என்று கூறினார். ஆனால், அவர்களின் விமர்சனத்தை ஏற்காத கோஹ்லி போட்டி முடிந்த கையோடு வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்துப் பேசியபோது எதிரணியினருக்கு பதில் அளித்தார்
"எங்களுடைய பவுலர்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். ஆட்டத்தின் எந்த இடத்திலும் நாங்கள் பீதியடையவில்லை. சிறப்பாக பவுலர்கள் செயல்படுவார்கள் என்பதை முன்பே அறிந்திருந்தோம்," என்றார் கோஹ்லி.
"டாஸ் ஒரு பிரச்னையே இல்லை"

பட மூலாதாரம், @imVkohli Twitter
ஒருவேளை டாஸில் இந்தியா இழந்து இரண்டாவதாக பேட்டிங் செய்திருந்தால் காற்று வேறு திசையில் இருந்திருக்கும் என்று பீட்டர்சன் குறிப்பிட்டது பற்றி மறைமுகமாகப் பேசிய கோஹ்லி, "டாஸ் எல்லாம் எங்களுக்கு பிரச்னையே இல்லை. இரண்டாவது இன்னிங்ஸை பார்த்தீர்களென்றால் எங்கள் 300 ரன்களை எடுத்திருந்தோம். அதனால் அது ஒன்றும் பிரச்னையில்லை," என்று தெரிவித்தார்.
"சொந்த மண்ணில் காலியான அரங்கில் ஆட்டத்தை எதிர்கொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. உண்மையை சொல்வதென்றால் முதல் இரண்டு நாட்களாக எங்களுக்கு போதிய உத்வேகம் கிடைக்கவில்லை என்றுதான் கூறுவேன். ஆனால், முதல் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் வேகமெடுத்தோம். இப்போது ரசிகர்கள் அரங்கில் குழுமியிருந்து பார்வையிட்டது எங்களுக்கு உற்சாகம் கொடுத்தது. அதில் ரசிகர் கூட்டத்தின் பங்கு மிகவும் அதிகம். எங்களுக்கு ரசிகர்கள் இருந்தால் போதும், உற்சாகமும் உத்வேகமும் தானாக வரும். எங்களுக்கான ஆட்டமாக இது அமைந்தது," என்றார் கோஹ்லி.
விக்கட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷ்ப் பந்த்துக்கு புகழாரம் சூட்டிய கோஹ்லி, "ஆஸ்திரேலிய பயணம் முதல் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் ரிஷப். அவரது விக்கட் கீப்பர் ஆற்றலை மேம்படுத்த தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவோம்," என்று கூறினார்.

பிற செய்திகள்:
- சென்னை டெஸ்டில் இந்தியா அபார வெற்றி - 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலா முன் உள்ள 4 வாய்ப்புகள் என்னென்ன?
- நாடாளுமன்றத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் அதிகாரி - மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய பிரதமர்
- எடப்பாடியோடு ஓ.பி.எஸ் சமாதானமா? நரேந்திர மோதி காட்டிய சமிக்ஞை என்ன?
- 5,000 ஆண்டுகள் பழமையான மதுபான ஆலை எகிப்தில் கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













