Ind Vs Eng test: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம், Surjeet Yadav/Getty Images
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸை 205 ரன்களுக்கு நிறைவு செய்தது.
இந்தியா தன் முதல் இன்னிங்ஸை 365 ரன்களுக்கு நிறைவு செய்து 160 ரன்கள் முன்னிலை வகித்தது.
ஒர் அசாத்தியமான ஸ்கோரை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கே தன் இரண்டாவதில் இன்னிங்ஸில் சுருண்டது. எனவே இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யாமலேயே 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தன் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தியா தரப்பில் அக்ஸர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் விரல்களுக்கிடையிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகள் சிக்கிக் கொண்டன என்பதற்கு சாட்சியாக அமைந்தது இன்றைய போட்டி.
இந்த டெஸ்ட் தொடரை 3-க்கு 1 என்கிற கணக்கில் வென்று இருக்கிறது இந்தியா.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திரமோதி மைதானத்தில் நடந்தது.
டாஸை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஜானி பெய்ர்ஸ்டோவ் (28 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (55 ரன்கள்), ஓலி போப் (29 ரன்கள்), டான் லாரன்ஸ் (46 ரன்கள்) எடுத்தனர். பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் முதல் நாளுக்குள்ளேயே இங்கிலாந்து தன் 10 விக்கெட்டையும் இழந்துவிட்டது. . ஒட்டுமொத்தமாக 75.5 ஓவரில் 205 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து.
சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அதிகம் இல்லாத அக்ஸர் படேல் வெறும் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் க்ராலி மற்றும் டாம் சிப்லி, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய டான் லாரன்ஸின் விக்கெட்டுகள் அடக்கம். இந்தியா சார்பில் அதிக ஓவர்களை வீசிய பந்துவீச்சாளரும் அக்ஸர் படேல் தான். 26 ஓவர்களை வீசி அதில் 7 ஓவர்களை மெய்டன் செய்து இருக்கிறார்.
அனுபவமிக்க ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், மொஹம்மத் சிராஜ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் மட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள். மீண்டும் இந்திய சுழலுக்கு பலியாகி இருக்கிறது இங்கிலாந்து.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 114.4 ஓவருக்கு 365 ரன்களைக் குவித்தது. 160 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
ரோஹித் சர்மா (49 ரன்கள்), ரிஷப் பந்த் (101 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (96 ரன்கள் விக்கெட்டை இழக்கவில்லை), அக்ஸர் படேல் (43 ரன்களை) விளாசி இந்தியா அதிக ரன்கள் முன்னிலை பெறுவதை உறுதி செய்தார்கள்.
இந்த இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் தன் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் நிதானமாக 174 பந்துகளை எதிர்கொண்டு 96 ரன்களைக் குவித்தது இந்தியா 160 ரன்கள் முன்னிலை பெற அதிகம் உதவியது.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள், ஜாக் லீச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த முறை இங்கிலாந்தின் சுழற்பந்து பெரிதாக எடுபடவில்லை என்பது இந்த விக்கெட் பட்டியலைப் பார்த்தாலே தெரிகிறது.
பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது விக்கெட் ஏதும் இழக்காமல் 3 ஓவர் முடிவில் ஆறு ரன்களை அடித்திருந்த நிலையில் 135 ரன்களுக்கே தன் இரண்டாவதில் இன்னிங்ஸில் சுருண்டது. இதன்மூலம் இந்தியா அபார வெற்றி பெற்றது.
பிற செய்திகள்:
- திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா! அழுத்தம் கொடுத்தது யார்?
- தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்பியே இருக்கின்றன?
- ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












