விளையாட்டுத் துறையில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக முக்கியத்துவம்: பிபிசி ஆய்வு

விளையாட்டுச் செய்திகளைப் பொருத்த வரை, விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான இடமே வழங்கப்படுகிறது என்று பிபிசி நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 2017-2020 க்கு இடையில் வெளியான இரண்டு ஆங்கில தேசிய நாளிதழ்களின் 2,000 க்கும் மேற்பட்ட பதிப்புகளில், முதல் பக்கத்தைப் பிடித்த விளையாட்டு வீராங்கனைகள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது கண்டறியப்பட்டுள்ளது
ஊடகங்களின் விளையாட்டு வீராங்கனைகளுக்கான முக்கியத்துவம்
2017 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியின் தொடக்கத்தில், 10 விளையாட்டுச் செய்திகளில் 1 மட்டுமே விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றியது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இது வெகுவாக முன்னேறியுள்ளது. ஆனால் அந்த காலகட்டத்தில் கவரேஜில் மிகுந்த ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அந்த குறிப்பிட்ட போக்குக்கான காரணங்களில் ஒன்று ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டு, டென்னிஸ் போட்டிகள் மற்றும் பூப்பந்து லீக்குகள் போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகளின் அறிவிப்பு அல்லது வழக்கமான நிகழ்வுகள் - இது அந்தக் காலகட்டத்தில் விளையாட்டு வீராங்கனைகள் குறித்த செய்திகளை அதிகரிக்கிறது.
உதாரணமாக, கோவிட் -19 பெருந்தொற்றின் பிடியில் உலகம் சிக்கிக் கொள்வதற்கு முன், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. எனவே, அதற்கான தகுதி பெற்ற வீராங்கனைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்தன.
மற்றொரு உதாரணம் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை. அதில், இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. மிகப் பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று, பேட்ஸ்வுமன் ஷஃபாலி வர்மா, போட்டி முழுவதும் அதிரடி பேட்டிங்க் மூலம் சாதனை படைத்தார். அந்த நேரத்தில், செய்தித்தாள்கள் 'யார் இந்த ஷஃபாலி வர்மா?', 'ஷஃபாலி வர்மா எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்' போன்ற தலைப்புச் செய்திகளுடன் நிறைய செய்திகள் வெளியாயின.
எந்தப் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது?

செய்தித் தாள்களில் விளையாட்டுத் துறையில் பெண்கள் என்று எடுத்துக் கொண்டால், அதிகமாக வெளியாகும் செய்திகள் டென்னிஸ் விளையாட்டு குறித்தே என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூப்பந்து, தடகளப் போட்டிகள், குத்துச்சண்டை போன்றவையும் முக்கிய இடம் பெறுகின்றன. . பி.வி.சிந்து, சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் மேரி கோம் போன்ற விளையாட்டு வீராங்கனைகள், முதல் பக்கத்திலும், விளையாட்டுப் பக்கத்திலும் இடம் பிடித்தனர் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கலப்பு போட்டிகள் அல்லது குழு விளையாட்டுக்களை விட தனிப்பட்ட வீராங்கனைகள்தான் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இந்த விஷயத்தில், கிட்டத்தட்ட 50 சதவிகிதச் செய்திகள் தனிப்பட்ட வீராங்கனைகளின் சாதனைகள் குறித்தும் 21 சதவிகிதச் செய்திகள், ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு வீரர்களைக் குறித்தும் இருப்பதாகவும் தெரிகிறது.
கவரேஜின் தரம்
பெரிய மற்றும் அதிரடியான படங்களுடன் விளையாட்டுச் செய்திகளில் ஆண்கள் விளையாட்டுப் போட்டிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், பெண்கள் தொடர்பான விளையாட்டுகள் சற்று குறைந்தே காணப்படுகின்றன. விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்படும் படங்கள் பொதுவாக சிறிய அளவிலானவையாகவே உள்ளதாகவும் சில நேரங்களில் படங்களே இல்லாமலும் இருப்பதாகவும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. மேரி கோம், பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் போன்றவர்களின் செய்திகளில் மட்டுமே படங்கள் இருந்தன. எண்ணிக்கையில், விளையாட்டு வீராங்கனைகள் குறித்த மொத்த செய்திகளில் 40 சதவிகிதம் படங்கள் இல்லாமலே வெளியாகியுள்ளன.
விளையாட்டுத் துறையில் தடம் பதிக்கும் பெண்கள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளின் தன்மையைப் புரிந்து கொள்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள், செய்தி அறிக்கைகளை செய்தி, நேர்காணல், புகைப்படம், சிறப்புச் செய்தி மற்றும் விளையாட்டு வீராங்கனைகளே எழுதிய கட்டுரைகள் என பல பிரிவுகளாக வகைப்படுத்தினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிக்கைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு நிகழ்வைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட செய்தியை மையமாகக் கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட விளையாட்டு வீரரின் சுயவிவரம் மற்றும் சிறப்பம்சங்கள் அரிதாகவே இருந்தன. எடுத்துக்காட்டாக, தேசிய, சர்வதேச அளவில், ஒரு விளையாட்டு வீராங்கனை குறித்த புகைப்படச் செய்தி என்பது, மூன்றாண்டுகளில் ஒன்பது முறையே வெளிவந்துள்ளது .

முதலிடத்தில் ஹரியாணா
விளையாட்டுத் துறையில் சாதித்த பெண்கள் குறித்த செய்திகளில் எந்தெந்த மாநிலங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன என்று ஆராய்ந்த போது, ஹரியாணா 60 முறை இத்தகைய செய்திகளில் இடம்பிடித்து முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரா 28 முறையுடன் இரண்டாம் இடத்தையும் மணிப்பூர் 20 முறை வந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. பெரும்பாலான கட்டுரைகளில், அதிகம் பிரபலம் அடையாத வீராங்கனைகள் மட்டுமே அவர்களது மாநிலங்களின் பெயர்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஏனெனில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே தேசிய வீரர்களின் பெயரும் அவர்கள் சேர்ந்த மாநிலமும் தெரியும் என்பதால் இது புரிந்துகொள்ளக்கூடியதே.
ஹரியானாவிலிருந்து வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனைகளைப் பொறுத்தவரை, அவர்கள் சார்ந்த பகுதியைக் குறிப்பிடும் வகையில், கட்டுரைகளில் 'ஜஜ்ஜர் பெண்', 'ஹரியானா குத்துச்சண்டை வீரர்', 'பிவானி பெண்' போன்ற 'அடைமொழிகள்' பயன்படுத்தப்பட்டன. 'அசாம் பெண்', 'டெல்லி பெண்', 'மகாராஷ்டிரப் பெண்' போன்ற பிற மாநிலங்களைப் பற்றியும் குறிப்புகள் வந்துள்ளன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கான அடைமொழிகள்
செய்தித்தாள்களில் விளையாட்டுத் துறை சார்ந்த பெண்களுக்காக எழுதப்பட்ட தலைப்புச் செய்திகள் மற்றும் உரைகளை ஆராய்ந்தபோது, அவர்களை விவரிக்க, சில வகையான அடைமொழிகள் பயன்படுத்தப்படுவதும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, மேரி கோமைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'மாக்னிஃபிசென்ட் மேரி', 'அயர்ன் லேடி' மற்றும் 'ஏஜ்லெஸ் மேரி' போன்ற பெயரடைகள் பயன்படுத்தப்பட்டன. 'க்வீன்' என்ற வார்த்தையும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'Glamorous Hyderbadi' 'Sweet Caroline', 'Queen Sofia', 'Canada's queen', 'Japan's swim queen', 'Badminton queens', 'Squash queen', 'Teenage shooting sensation', 'Simon Darling of Paris', 'Shooting Sensation', 'Comeback Queens', 'Track queen' போன்ற அடைச் சொற்களும் அதிகம் இடம் பிடித்துள்ளன.
விளையாட்டு வீராங்கனைகளை 'ஃபைட்டர்', 'ரேஸர்-ஷார்ப்', 'அயர்ன் லேடி', 'ஃபென்சர்' மற்றும் 'சாம்பியன்' என்ற அடைச் சொற்களால் குறிப்பிடுவது மிக அரிதாகவே இருந்துள்ளது.
வழிமுறை மற்றும் வரைமுறை
இந்தியாவின் மிகப் பெரிய / அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் இரண்டு ஆங்கில நாளிதழ்களான 'டைம்ஸ் ஆப் இந்தியா' மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஆகியவற்றின் உள்ளடக்கப் பகுப்பாய்வுதான் ஆராய்ச்சி திட்டத்திற்கான வழிமுறை. ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2020 வரை - மொத்தம் மூன்று ஆண்டுகள்.

இது, செய்தித்தாளின் டிஜிட்டல் காப்பகங்களில் கிடைத்த கோப்புகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. பகுப்பாய்வின் ஒரு பகுதியாக டெல்லி பதிப்பு ஆய்வு செய்யப்பட்டது. செய்தித்தாளின் முதல் பக்கம் மற்றும் விளையாட்டுப் பக்கம் மாதிரியின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஆனால் வேறு எந்தப் பக்கத்திலும் இது தொடர்புடைய செய்திகள் காணப்பட்டால், அவையும் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், மற்ற பக்கங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை.
மாதிரியைப் பொறுத்தவரை, விளையாட்டுச் செய்திகள் பக்கங்களில் வெளியிடப்பட்ட அனைத்துச் செய்திகளும் படங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளையாட்டுச் செய்திகள், மொத்த விளையாட்டுச் செய்திகள் மற்றும் படங்களின் எண்ணிக்கையின் ஒரு பகுதியாகும். விளையாட்டுத்துறையில் சாதித்த பெண்கள் குறித்த செய்திகள் தனியாகக் கணக்கெடுக்கப்பட்டன. விளையாட்டு வகை, வீரர்களின் எண்ணிக்கை, செய்திகளுக்கான பத்திகளின் எண்ணிக்கை, படங்களின் எண்ணிக்கை, படங்களின் அளவு, வகை, விளையாட்டு வீராங்கனைகள் சார்ந்த நாடு, மாநிலம், ஏதேனும் குறிச்சொற்கள் அல்லது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடைமொழிகள், செய்திகள், நேர்காணல், சிறப்புத் தொகுப்பு போன்ற செய்தி வகை என வெவ்வேறு மாறிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இன்டர்கோடர் நம்பகத்தன்மை சோதனைக் கட்டத்தில் மாறிகள் அடையாளம் காணப்பட்டன. முழுச் செய்திகளையும் குறியிட இரண்டு கோடர்கள் இருந்தனர். தரவு சேகரிப்பில் சீரான தன்மையைக் கொண்டுவர ஆரம்பத்தில் 15 நாட்கள் செய்தித்தாள்கள் இரண்டு குறியீட்டாளர்களால் ஒரே நேரத்தில் குறியிடப்பட்டன. இண்டர்கோடிங்கின் போது காணப்பட்ட சிக்கல்கள் குறியீட்டாளர்களிடையே விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

முழுத் தரவும் குறியீட்டாளர்களால், ஒரே மாதிரியாகக் குறியிடப்பட்டன. தரவுகளை எண்ணாகக் குறியிட, வெவ்வேறு மாறிகளுக்கு எண்களை ஒதுக்க ஒரு குறியீட்டு தாள் உருவாக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாறிகள் ஒரு சிறந்த புரிதலை உருவாக்க, ஆராய்ச்சியாளர்களால் செயல்படுத்தப்பட்டன. விளையாட்டு நிகழ்வு, வீராங்கனைகள் குறித்த செய்தித் தொகுப்பு அல்லது நேர்காணல் என எந்த வகையான செய்தியையும் பிளேஸ்லைன்/ பைலைன் (இடத்தயும் நேரத்தையும் குறிப்பிடுவன) ஆகியவற்றுடன் வரையறுக்க விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டன.
(பெண்கள் தொடர்பான செய்திகள் மட்டுமே) மொத்தம் 3563 செய்திகளின் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2020 வரை டெல்லி பதிப்பின் அனைத்து இதழ்களையும் ஆராய்ந்த பின்னர் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டது. செய்தித்தாளின் மின் பதிப்பு, தரவு சேகரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதால், பத்திகளின் எண்ணிக்கையே அளவீட்டு அலகாகக் கொள்ளப்பட்டது. இது விளையாட்டுத் துறை சார்ந்த பெண்கள் தொடர்பான செய்தி கவரேஜுக்கு வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பீடாகும்.
மூன்று ஆண்டுகள் காலகட்டத்தில் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, அச்சுப் பதிப்பை விட டிஜிட்டல் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதால் 'பத்தியின் அளவு'என்ற அளவு கோலே பயன்படுத்தப்பட்டது ஆகியன இந்த ஆய்வின் வரம்புகள். அந்தச் செய்திக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவை இது குறிக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












