100 நாட்களைத் தாண்டி தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: 2 சங்கங்கள் திடீர் விலகல்

பட மூலாதாரம், SAMEER SEHGAL/HINDUSTAN TIMES VIA GETTY IMAGE

சரியாக 100 நாட்களுக்கு முன், கடந்த 2020 நவம்பர் 26 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டத்தைத் தொடங்கினர்.

இன்று வரை போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, இந்த 100 நாட்களில் பல வகையான போரட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர்.

கடந்த 2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறைகளும், போலீஸ் தாக்குதலும் நடந்தன. ஆனால் அதன் பிறகும் விவசாயிகள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

100 நாட்கள் போராட்டம் நிறைவடைந்தது தொடர்பாக, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்கிற விவசாயிகள் அமைப்பு, இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) ஐந்து மணி நேரம் கே.எம்.பி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதோடு இந்த நாளை ஒரு கருப்பு நாளாக அனுசரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொது மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் தங்கள் வீட்டில் கருப்புக் கொடி போன்றவைகளை வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்?

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

வேளாண் துறை தொடர்பாக கடந்த செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாக்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்ததும் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.எம்.சி. மண்டிகளுடன், தனியார் துறையினரும் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன. வேளாண் உற்பத்திப் பொருள்களை, குறிப்பாக கோதுமை மற்றும் நெல் கொள்முதலை அரசு படிப்படியாகக் குறைத்து, கடைசியில் கொள்முதல் செய்வதையே நிறுத்திவிடும் என்றும், அதனால் மார்க்கெட்டை இயக்கும் சக்தியாக இருக்கப் போகும் தனியாரைச் சார்ந்தே தாங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்தச் சட்டங்கள் தனியாருக்கு பயன் தருவதாகத்தான் இருக்குமே தவிர, குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) நடைமுறை கைவிடப்படுவதால் விவசாயிகள் தான் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

ஏ.பி.எம்.சி. மண்டிகள் நடைமுறை கைவிடப்படும் அல்லது மூடப்படும் அல்லது எம்.எஸ்.பி. முறை கைவிடப்படும் என்பது குறித்து சட்டங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தச் சட்டங்களின் மூலம் களத்தில் இறங்கும் தனியார் துறையினரால் கடைசியில் அந்த சூழ்நிலைதான் உருவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

2019-20 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கோதுமை மற்றும் உணவு தானியம் கொள்முதல் செய்ததில் விவசாயிகளுக்கு அரசு சுமார் ரூ.80 ஆயிரம் கோடி பணம் பட்டுவாடா செய்தது. அதில் பெரும்பாலானவர்கள் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். தனியார் இத் துறையில் நுழைவதால் உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்வது குறையும் அல்லது கைவிடப்படும் என்ற அச்சத்தில், வேளாண்மை அவசரச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுகின்றனர்.

மூன்று வேளாண் மசோதாக்கள் என்ன?

இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:

  • வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020
  • விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020
  • அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது ஏ.பி.எம்.சி. மண்டிகளிலும், மண்டிகளுக்கு வெளியிலும் வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் வாங்கவோ, விற்கவோ இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.

இந்த விதிமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: