தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி - ஐபேக் ஆலோசனை? கூட்டணியை உரசிய துரைமுருகனின் பேச்சு

கே.எஸ்.அழகிரி

பட மூலாதாரம், K.S.Alagiri/Facebook

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் தி.மு.க நம்மை நடத்தும்விதம் சரியில்லை. என் வாழ்நாளில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடுமோ என அச்சப்படுகிறேன்' என காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கண்கலங்கியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன நடக்கிறது தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குள்?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தி.மு.க - காங்கிரஸ் தலைவர்கள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தி.மு.க தரப்பிலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ` தி.மு.க தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாகப் பேசியுள்ளோம். நல்ல முறையில் மகிழ்ச்சிகரமாகப் பேசினோம். எங்களுடைய கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவர்களுடைய கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் கட்சித் தலைமையிடம் பேசி அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்வோம்' என்றார்.

வேதனைப்பட்ட உம்மன் சாண்டி!

ஆனால், முதல்கட்டப் பேச்சுவார்த்தையே காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், `` தி.மு.க உடனான பேச்சுவார்த்தையின்போது, உம்மன் சாண்டியை வேதனைப்படுத்தும் விதமாக துரைமுருகன் பேசிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் 8 தொகுதிகளில் வென்றதால், அதன் அடிப்படையில் 50 இடங்களைக் கோரினோம். இதற்குப் பதில் அளித்த துரைமுருகன், `தமிழ்நாட்டில்தான் பேச்சுவார்த்தை நடக்கிறது. 15 அல்லது 16 இடங்களை மட்டுமே கொடுப்போம்' எனக் கூறிவிட்டார். அதாவது, `இது கேரளா இல்லை' என்ற தொனியில் துரைமுருகன் பேசிவிட்டார்.

உம்மன் சாண்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உம்மன் சாண்டி (கோப்புப் படம்)

தொடர்ந்து, `கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கிய இடத்தில் பாதியைக் கூட தர மாட்டோம்' என துரைமுருகன் உறுதியாகக் கூறிவிட்டார். இதையடுத்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தையிலும் இதே நிலைமை நீடித்தது. இதன் பின்னணியில் ஐபேக் நிறுவனம் இருக்கிறது. அவர்கள் ஸ்டாலினிடம், ` காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கினால், அவற்றில் அ.தி.மு.க வென்றுவிடும்' எனக் கூறியுள்ளனர். புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனை நிறுத்தினால், வன்னியர் சமூக வாக்குகள் வந்துவிடும் என தி.மு.க தலைமை நினைக்கிறது. அதனால்தான், `அங்கு காங்கிரஸ் இல்லாமல் வெல்ல முடியுமா?' என ஸ்டாலின் கேட்டிருக்கிறார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.கவின் அணுகுமுறை வேதனையளிக்கிறது" என்றார்.

கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி!

இதன் தொடர்ச்சியாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜீவ்காந்தி அரங்கில் நேற்று காலை 11.30 மணியளவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தினேஷ் குண்டுராவ், ` காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை கீழே செல்வதற்கு விட மாட்டேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' என நம்பிக்கையளித்தார். இதன்பின்னர் பேசிய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, `` `காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. நம்முடன் நண்பர்களாக இருப்பவர்களிடம் நல்ல உறவை வைத்துக் கொள்ள வேண்டும்.

மு.க. ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை: வாரிசு அரசியலை மீறி கட்சிக்கு உழைத்த பயணம்

அதேநேரம், நமது மதிப்பையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் கேட்டதற்கும் அவர்கள் கூறிய தொகுதிகளுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்தது. இன்றைக்கு நாம் ஒப்புக்கொண்டால் வருங்காலத்தில் தமிழகத்தில் கட்சி இல்லாமலே போய்விடும். இதற்காகவா இத்தனைக் காலம் ஒன்றுபட்டு கூட்டியக்கம் நடத்தினோம். மதச்சார்பற்ற கூட்டணியாக ஒன்றிணைந்து போராடி அ.தி.மு.க-பா.ஜ.க அணியைத் தோற்கடிக்க போராடியது இதற்காகவா? என்னுடைய வாழ்நாளில் இப்படியொரு சூழ்நிலையை இதற்கு முன் சந்தித்ததே இல்லை' எனக் கூறிவிட்டு கண்கலங்கியவாறு நின்றுவிட்டார்.

கூட்டணியே வேண்டாம்!

இதனால் அதிர்ச்சியடைந்த 89 மாவட்டத் தலைவர்களும் எழுந்து நின்று, `வேண்டாம் வேண்டாம்.. கூட்டணி வேண்டாம்' எனக் கோஷமிடத் தொடங்கிவிட்டனர். அவ்வாறே மாநில நிர்வாகிகளும் சேர்ந்து கொண்டனர்.

கே.எஸ்.அழகிரி வேதனைப்பட்டது ஏன்?

`` எங்கள் கட்சியில் விருப்ப மனுவை வாங்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இதுவரையில் 10,000 பேர் போட்டியிடுவதற்காகப் பணம் செலுத்தியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர். ராகுல் காந்தியின் கொங்கு மண்டலப் பயணமும் தென்மண்டலப் பயணமும் பெரும் வரவேற்பைப் பெற்றன. நாங்கள் காசு கொடுத்துக் கூட்டம் சேர்க்கவில்லை. இதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்துத்தான் தேர்தல் தேதியை விரைவாக அறிவித்தார்கள்" என பிபிசி தமிழிடம் விவரித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் க.ராமலிங்க ஜோதி.

பின்னணியில் ஐபேக்!

சோனியா மற்றும் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பேசியவர், `` அடுத்ததாக வடமாவட்டங்களிலும் சென்னையிலும் ராகுல் பிரசாரம் செய்வதாகத் திட்டம் இருந்தது. அவரது கோவை சுற்றுப்பயண நிறைவில், `தமிழக முதல்வர் ஸ்டாலின்' எனக் கூறிவிட்டுச் சென்றார். அதன்பிறகே முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ராகுலை பிரதமர் என ஸ்டாலின் கூறியதற்கு நன்றிக்கடனாக இதனை அவர் தெரிவித்தார். ஆனால், பிரசாந்த் கிஷோரையும் ஐபேக் டீமையும் ஸ்டாலின் நம்பிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, தொன்மை என்பது வேறு. இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் சொல்வதைக் கேட்டு ஸ்டாலின் கட்டுண்டு கிடக்கிறார்" என்கிறார்.

மேலும், `` 2011 தேர்தலில் 63 இடங்களை கலைஞர் ஒதுக்கினார். `நாயன்மார்கள் 63 பேரை நிறுத்துகிறேன்' என்றார். 2016 தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கினார். அவர் பெரிய மனதோடு எங்களை நடத்தினார். அந்த அளவுக்கு ஸ்டாலின் நடந்து கொள்ளவில்லை. எங்கள் பக்கம் 8 எம்.பிக்கள் உள்ளனர். அதன்படி 48 இடங்களை ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தொகுதிகளை மிகக் குறைவாக ஒதுக்குவதை எப்படி ஏற்க முடியும். `அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். நாம்தான் வெற்றி பெறுவோம்' என்ற மனநிலைக்கு ஸ்டாலின் வந்துவிட்டார். `ஆறு தொகுதிகள் வேண்டாம்' என வி.சி.க தொண்டர்களும் குரல் கொடுக்கிறார்கள். ம.தி.மு.கவும் அதிருப்தியில் இருக்கிறது. இப்போதே பரஸ்பரம் இல்லாவிட்டால், தொகுதிக்குள் சென்று எப்படி வாக்கு சேகரிக்க முடியும்?" என்றார் ஆதங்கத்துடன்.

ஐபேக் சொல்லும் தி.மு.க கணக்கு!

இதையடுத்து, காங்கிரஸ் தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக ஐபேக் நிறுவனத்தின் தமிழக தலைமை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசியவர், ``தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஐபேக்கின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல். அது தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே நடக்கும் விவகாரமாகத்தான் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வெற்றி வாய்ப்புகள் இருக்கின்றன என்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கணக்கு இருக்கும். அதே கணக்கு தி.மு.கவுக்கும் இருக்கிறது. இதில் வருத்தப்படவும் வேதனைப்படவும் எதுவும் இல்லை. அது ஒரு நல்ல கூட்டணி. ` அ.தி.மு.க, பா.ஜ.க அணி வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்பதுதான் தி.மு.க கூட்டணியின் பிரதான நோக்கம். அதை மையமாக வைத்தே இயங்கி வருகின்றனர். எனவே, எங்களைப் பற்றிக் கூறும் புகார்களில் உண்மையில்லை" என்றார்.

எங்களுக்கும் கண்கலங்கும்!

`கே.எஸ்.அழகிரி கண்கலங்கும் அளவுக்கு என்ன நடந்தது?' என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஊழியர்கள் கூட்டத்தில் அவர்கள் பேசியுள்ளனர். எங்கள் ஊழியர்களின் கூட்டத்தில்கூட பேசுவார்கள். உள் அரங்குக்குள் பேசுவதையெல்லாம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எங்களுக்கும் சில தொகுதிகளை நினைத்தால் கண்கலங்கிப் பேச வேண்டிய நிலை உள்ளது. மற்றபடி, எங்களோடு அவர்கள் நல்ல உறவில்தான் உள்ளனர்" என்கிறார்.

ஸ்டாலினுடன் ஆர்.எஸ்.பாரதி

பட மூலாதாரம், RS BHARATHI/FACEBOOK

பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் நிர்வாகிகளை வேதனைப்படுத்தியது குறித்துக் கேட்டபோது, ` அப்படியெல்லாம் இல்லை. கூட்டணிக்குள் இதுபோன்ற பிரச்னைகள் வரும். பின்னர் சரிசெய்யப்பட்டுவிடும். நாடாளுமன்றத் தேர்தலில்கூட இப்படிப்பட்ட சிரமங்கள் வந்தன. எங்களைப் பொறுத்தவரையில் தலைவர் ஸ்டாலினும் ராகுல்காந்தியும் பேசிவிட்டால், அனைத்தும் சரியாகிவிடும். தொண்டர்களை சமாதானப்படுத்த அவர்கள் கட்சிக்குள் இவ்வாறு பேசத்தான் செய்வார்கள். எங்கள் கட்சியின் நிர்வாகிகளையும் நாங்கள் சமாதானப்படுத்த வேண்டிய நிலை உள்ளது" என்றவரிடம், ஐபேக் பின்னணி குறித்து கேட்டபோது, `` அதைப் பற்றி கற்பனையில் எதையும் சொல்ல முடியாது. அரசியல் முடிவுகளை அவர்கள் எடுக்க மாட்டார்கள். நாங்கள்தான் எடுப்போம். அவர்கள் அவர்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டுள்ளனர். இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் வேதனைகள் தீர்ந்துவிடுமா.. தொகுதிப் பங்கீட்டில் சுமூக உடன்பாடு எட்டப்படுமா.. ஸ்டாலினுடன் ராகுல்காந்தி பேசி சரிசெய்வாரா என்பதற்கான விடை தெரிய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: