மானசி ஜோஷி: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

மானசி ஜோஷி
    • எழுதியவர், தீப்தி பத்தினி
    • பதவி, பிபிசி தெலுங்கு

ஒரு சனிக்கிழமை பிற்பகல் நேரம், ஹைதராபாத்தில் மானசி கிரிஷ்சந்திரா ஜோஷியை அவருடைய இல்லத்தில் நாங்கள் சந்தித்தோம். தான் தங்கியுள்ள அடுக்குமாடி வீட்டை வேறு இருவருடன் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

செல்போனில் ஒரு திரைப்படம் பார்த்தபடியே மானசி மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மன்னிப்பு கேட்டுக் கொண்டு செயற்கைக் காலை பொருத்திக் கொண்டார். வாரம் முழுக்க கடுமையான பயிற்சி முடித்த பிறகு சனிக்கிழமை மதியம் தான் தன்னுடைய ஓய்வு நேரம் தொடங்குகிறது என்று அவர் கூறினார்.

News image

``நான் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை பயிற்சி எடுக்கிறேன். பிற்பகலில் ஓய்வு எடுத்துக் கொண்டு, உடலுக்குத் தேவையான ஓய்வைத் தருகிறேன். மீண்டும் மாலையில் பயிற்சி செய்வதற்காக மதியத்தில் ஓய்வு தருகிறேன். சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் மட்டுமே நான் பயிற்சி செய்கிறேன். ஆகவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தகம் படிப்பது அல்லது தோட்டத்தை பராமரிப்பது போன்றவற்றை மேற்கொள்கிறேன்'' என்று மானசி தெரிவித்தார்.

எங்களுக்கு இஞ்சி டீ போட்டுத்தர மானசி முன்வந்தார். சமையலறையில் கொஞ்சம் தண்ணீர் கொட்டிக் கிடந்தது. துணி போட்டு தரையை சுத்தம் செய்த அவர், ``இது எனக்கு ஆபத்தானது'' என்று கூறினார். அவர் தயாரித்த இஞ்சி டீயுடன் நாங்கள் உரையாடலைத் தொடங்கினோம்.

காணொளிக் குறிப்பு, மானசி ஜோஷி: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

30 வயதான மானசி கிரிஷ்சந்திர ஜோஷி இந்தியாவின் மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை. மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2019 ஆகஸ்ட் மாதம் அவர் தங்கப் பதக்கம் வென்றார். 2015 ஆம் ஆண்டில் இருந்து அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

2011ல் ஒரு விபத்தில் சிக்கிய பிறகு, மானசியின் ஒரு கால் பறிபோய்விட்டது. ``மைதானத்தில் இருந்து பேட்மிண்டன் விளையாடுவது நான் குணமாவதற்கு உதவிகரமாக இருந்தது'' என்றார் அவர்.

மற்றவர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவழிப்பதைவிட, உடலுக்கு ஓய்வு தருவதற்காக, தூங்குவதை விரும்புவதாக மானசி கூறுகிறார்.

ஆறு வயதில் இருந்து மானசி பேட்மிண்டன் விளையாடி வருகிறார். ``நடனம், பேட்மிண்டன் போன்ற பல விஷயங்களில் பங்கேற்ற மாணவியாக இருந்தேன்'' என்கிறார் மானசி. மாவட்ட அணியில் பங்கேற்று அவர் விளையாடி இருக்கிறார். கே.ஜே. சோமய்யா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து பட்டம் பெற்றுள்ள அவர், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார். விபத்துக்குப் பிறகு, தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் மானசி விளையாடியுள்ளார். ``ஒரு காலுடன் என்னால் விளையாட முடியும் என்பதை அப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன்'' என்று அவர் தெரிவித்தார்.

மானசி ஜோஷி
படக்குறிப்பு, மானசி ஜோஷி

சிறிய விஷயங்கள் தனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதாக அவர் கூறினார். ஹைதராபாத்தில் கோல்கொண்டா கோட்டைக்கு தன் சகோதரியுடன் சென்றதை நினைவுகூர்ந்த அவர், ``முன்பும் கூட அந்தக் கோட்டைக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால் ஒரு நாள் கோட்டையின் உச்சிக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன்'' என்று கூறினார். கோட்டைக்குச் செல்ல சுமார் 300 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். ``நானும், என் சகோதரியும் அதில் ஏறத் தொடங்கினோம். நான் மிக மெதுவாகச் சென்றேன்.

ஆனால் அதுதான் என் குடும்பத்தினரின் சிறப்பான தருணம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு ஆதரவு அளித்து,அன்பு காட்டினர். கடைசியாக நாங்கள் கோட்டையின் உச்சியை அடைந்துவிட்டோம். மிகுந்த மகிழ்ச்சியில் நான் மிதந்தேன். எனவே முன்பு என்னால் முடியாததை இப்போது நான் சாதிக்கும்போது, அது எனக்கு மகிழ்ச்சியையும், நான் இன்னும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் தருகிறது'' என்று அவர் கூறினார்.

விபத்து பற்றி நான் பேச முற்பட்டபோது, இன்னும் சாதிக்க வேண்டும் என்ற திசையை நோக்கி தாம் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். ``எனக்கு நடந்த விபத்து பற்றி ஊடகத்தினர் கேட்டு கேட்டு என்னை சலிப்படைய வைத்துவிட்டனர். நிறைய சாதிக்க வேண்டும் என்ற நிலைக்கு, நான் அதிக தொலைவு முன்னேறி வந்துவிட்டதாக நினைக்கிறேன். நான் எப்படி பயிற்சி செய்கிறேன், என்ன நுட்பங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது பற்றி மக்கள் கேட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால், விபத்து பற்றி முதலில் நான் என்ன நினைவு வைத்திருக்கிறேன் என்பது பற்றி தான் மக்கள் கடைசியாகக் கேட்கிறார்கள். நான் உயிருடன் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எனக்கு வேறென்ன உணர்வு வேண்டும்?'' என்று புன்னகையுடன் அவர் கேட்டார்.

இருந்தபோதிலும், விபத்து பற்றி யாரும் கேட்டால் நேருக்கு நேராக என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என என் சகோதரி கூறியுள்ளார். ``அதுபற்றி பேசுவது உணர்வுப்பூர்வமானது. ஆனால், என்னுடைய விளையாட்டு பற்றி பேசுவதையும், என்ன நோக்கத்துக்காக பாடுபடுகிறேன் என்பதற்காக நினைவுகூரப்படுவதையும், நான் தொடர்பு கொண்டிருக்கும் அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றி பேசுவதையும் விரும்புகிறேன்'' என்று டீ குடித்தபடி மானசி கூறினார்.

பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் உமன் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு, இது 90'kids மிட்டாய் கடை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :