“ஒலிம்பிக் பதக்கத்திற்காக மட்டுமே வாழ்க்கை முழுவதும் உழைத்தேன்” – பி.டி. உஷா

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வந்தனா
- பதவி, பிபிசி
"ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் எனது லட்சியத்திற்கான காரணமென்ன என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். ஆனால், அதற்காக மட்டும்தான் நான் ஒவ்வொரு நாளும் எனது வாழ்க்கை முழுவதும் உழைத்தேன்!" - பி.டி. உஷா
ஒரு விளையாட்டு வீரருக்கு ஒலிம்பிக் போட்டி எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இது ஓர் உதாரணம். வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன.
இந்தியா உள்பட உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக முழு மூச்சுடன் தயாராகி வருகின்றனர்.
2000வது ஆண்டுக்கு பிறகு இதுவரை நடந்துள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் பெண்களின் பங்களிப்பு மட்டும் 5. ஆனால், ஒட்டுமொத்த 20ஆம் நூற்றாண்டில் இந்தியா பெற்ற 13 ஒலிம்பிக் பதக்கங்கள் மொத்தமும் ஆண்களின் வெற்றியால் கிடைத்ததே.
இந்நிலையில், முதல் முறையாக பிபிசி தனது இந்திய மொழிச் சேவைகளின் இணையதளங்களில் இந்தியாவை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பக்கத்தை தொடங்குவதுடன், அவர்களுக்கென ஒரு மதிப்புமிக்க விருதையும் வழங்க உள்ளது.
இந்த சிறப்பு பக்கமானது, எண்ணற்ற விளையாட்டுகளை விளையாடும் இந்தியாவை சேர்ந்த வீராங்கனைகளின் ஊக்கமளிக்கும் கதைகள், அவர்களது வெற்றிக்கு பின்னால் இருக்கும் போராட்டங்கள், சவால்கள் ஆகியவற்றை வெளிக்கொணரும். இந்தியாவில் பெண்கள் மற்றும் விளையாட்டுகளைச் சுற்றி ஒரு மாற்றத்தைத் தொடங்குவதும் இதன் நோக்கமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதுமட்டுமின்றி இந்தியாவின் சிறந்த பெண் விளையாட்டு வீரர் 2019 (BBC Indian Sportswoman of the Year) என்னும் விருதை வரும் மார்ச் மாதம் பிபிசி வழங்கவுள்ளது. இந்த விருதுக்குரிய போட்டியாளர்களின் பட்டியல் வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும்.
இந்தியாவின் விளையாட்டு துறையில் பெண்களின் மகத்தான பங்களிப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மேலும், இந்திய விளையாட்டு துறையில் பெண்கள் நிகழ்த்திய மகத்தான சாதனைகளை கொண்டாட இது ஒரு வாய்ப்பாகும்.
இந்திய விளையாட்டு வீராங்கனைகளான சாக்ஷி மாலிக் மற்றும் பி.வி. சிந்து ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்றதோடு, மற்றொரு சாதனையும் படைத்தனர்.
அதாவது, ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற சாதனையை சாக்ஷியும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர்களிலேயே இளையவர் என்ற சாதனையை பி.வி. சிந்துவும் நிகழ்த்தினர். அதுமட்டுமின்றி, அதே ஒலிம்பிக் போட்டியில், மற்றொரு இந்திய விளையாட்டு வீராங்கனையான தீபா கர்மாகர் வெற்றியின் விளிம்பு வரை சென்றிருந்தார்.
ஒருவேளை மேற்கண்ட பதக்கங்களை இந்திய பெண் விளையாட்டு வீரர்கள் பெறாமல் இருந்திருந்தால், 1992ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, முதல் முறையாக ஒரு பதக்கம் கூட இல்லாமல் இந்திய அணி நாடு திரும்பி இருக்கும்.
இதற்கு முன்னதாக, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற ஆறு பதக்கங்களில் இரண்டு பெண்களின் பங்களிப்பாகும். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டி ஒன்றில் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அப்போது மேரி கோம் படைத்திருந்தார்.
2012ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் பாட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வென்றதன் மூலம், அந்த சாதனையை புரிந்த முதல் இந்திய வீரராக சாய்னா நேவால் உருவெடுத்தார்.
மேற்கண்ட தகவல்கள் இந்திய விளையாட்டு துறையில் பெண்களின் பங்களிப்பை கோடிட்டு காட்டுகிறது. ஆனால் அவர்களது சாதனைகள் குறித்து பேசப்படுவது போதுமானதாக இருப்பதில்லை.
இந்த விருது எதற்காக?
பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் பிபிசியின் நோக்கத்திற்காக மட்டுமின்றி, வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முன்னோட்டமாகவும் பிபிசியின் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் விளையாட்டு வீரர் விருது வழங்கப்படவுள்ளது.

பிபிசியின் இந்திய மொழி சேவைகளின் ஆசிரியரான ரூபா ஜா, சாம்பியன்கள் ஆவதற்கு முன்பு பெண்கள் பல தடைகளைத் தாண்ட வேண்டும் என்று கூறுகிறார். "எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான இந்த முன்னெடுப்பை நாம் தொடங்குகிறோம் என்பதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவை சேர்ந்த பெண் விளையாட்டு வீரர்கள் செய்த வியத்தகு சாதனைகளை முன்னிலைப்படுத்துவது மட்டுமின்றி, அந்த சாதனைகளுக்கு பின்னால் இருந்த சவால்களை வெளிக்கொணர்ந்து, அதன் மூலம் விளையாட்டு துறையில் பெண்களின் பங்களிப்பை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். இந்த முன்னெடுப்புக்கு அனைவரும் ஆதரவு தெரிவிப்பதுடன், 2019ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த பெண் விளையாட்டு வீரரை தேர்வு செய்ய வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
வெற்றியாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
இந்தியாவை சேர்ந்த மிகவும் பிரபலமான விளையாட்டு பத்திரிகையாளர்கள், வல்லுநர்கள் மற்றும் எழுத்தாளர்களை கொண்ட தெரிவு குழு ஒன்றை பிபிசி உருவாக்கியது. அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், போட்டியாளர்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது திரட்டப்பட்டுள்ள இந்திய பெண் விளையாட்டு வீரர்களின் பட்டியலிலிருந்து வல்லுநர் குழுவின் அதிகபட்ச வாக்குகளை பெறும் முதல் ஐந்து வீராங்கனைகளின் பெயர் பட்டியல் பிபிசியின் இணையதளங்களில் வெளியிடப்பட்டு அவர்களில் இருந்து ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கு பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும்.
அதைத்தொடர்ந்து, பிபிசி இந்திய மொழிச் சேவைகளின் எந்த இணையதளத்திற்கு சென்றும் தங்களது விருப்பத்திற்குரிய வீராங்கனைக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம்.
ஐந்து போட்டியாளர்களில் அதிகபட்ச வாக்குகளை பெறுபவருக்கு வரும் மார்ச் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள விழாவில் 2019ஆம் ஆண்டுக்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற விருது வழங்கப்படும்.
மேலும், அதே விழாவில் இந்திய விளையாட்டுத் துறைக்கு சிறப்பான பங்களிப்பை செய்த ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனைக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் விழாவை ஒட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதுதொடர்பான சிறப்பு நிகழ்வுகளை பிபிசி நடத்த உள்ளது.
நாடுமுழுவதும் உள்ள பல்வேறு நகரங்களின் மாணவர்கள், பொது மக்கள் இடையே இந்திய பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.
இந்திய பெண் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு
இந்திய விளையாட்டு துறைக்கு பெண் வீரர்கள் செய்த பங்களிப்பு குறித்து பார்த்தோமானால், கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வென்ற 57 பதக்கங்களில் பாதிக்கும் மேலானவை (28) பெண்களால் வெல்லப்பட்டதே.
இந்திய கிரிக்கெட் அணியினை உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி வரை தலைமை ஏற்று கொண்டுசென்ற ஒரே வீரர் மித்தாலி ராஜ்.
ஸ்மிருதி மந்தனா, ஹிமா தாஸ், மனு பேக்கர், ராணி ராம்பால், சானியா மிர்சா, தீபிகா பல்லிக்கல் என்று இந்திய விளையாட்டு துறையில் வீராங்கனைகளின் பட்டியல் மிகவும் நீண்டது.
பேறுகால விடுமுறைக்கு பின்னர் பங்கேற்ற முதல் சர்வதேச டென்னிஸ் போட்டியிலேயே பட்டம் வென்ற சானியா மிர்சா இந்தாண்டுக்கான இந்திய வீராங்கனைகளின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். அதே போன்று, வினேஷ் போகட் ரோமில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த போட்டி ஒன்றில் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.
விளையாட்டு துறையில் இந்திய வீராங்கனைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்பதையே இவையெல்லாம் காட்டுகிறது. 'பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் தி இயர்' என்ற விருதின் மூலம் நீங்களும் இந்த மாற்றத்தின் பகுதியாக இடம்பெறுங்கள்.
எனவே, வரும் பிப்ரவரி மாதம் உங்களுக்கு விருப்பமான பிபிசி இந்திய மொழிச் சேவையின் இணையதளத்திற்கு சென்று, உங்களது விருப்பத்திற்குரிய விளையாட்டு வீராங்கனை 'பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் தி இயர்' விருதை வெல்வதற்கு உதவி செய்ய மறந்து விடாதீர்கள்.

பிற செய்திகள்:
- குடியுரிமை பறிக்கப்படும் என நினைப்பவர்களுக்கு விளக்கம் தர தயார்: நிர்மலா சீதாராமன்
- தாவூத்துக்கு முன்பே மும்பையை அச்சுறுத்திய கரீம் லாலா பற்றி தெரியுமா?
- அமெரிக்க தேர்தல் 2020: அதிபர் பதவிக்கான போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
- "இந்தியாவின் பிரச்சனை மக்கள் தொகை அல்ல, வேலைவாய்ப்பின்மைதான்" - அசாதுதீன் ஒவைசி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












