அமெரிக்க தேர்தல் 2020: அதிபர் பதவிக்கான போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

பட மூலாதாரம், Getty Images
வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்கான போட்டி உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. 2020 அமெரிக்க பொதுத் தேர்தலின் முடிவு, உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இப்போதைய நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான போட்டியில் இருப்பவர்களுடைய பிரச்சாரம் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவது யார் என்பதை, வரக் கூடிய மாதங்களில் நடைபெறும் வாக்கெடுப்புகள் தீர்மானிக்கும்.
அரசியல் கட்சிக் கூட்டங்கள் முதல், மரபு நெறிகள் வரை, அதிபர் பதவிக்கான தேர்தல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.
2020 அதிபர் பதவிக்கான தேர்தல் எப்போது நடக்கப் போகிறது?
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2020 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிரதான கட்சிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images
மற்ற பல நாடுகளைப் போல அல்லாமல், அமெரிக்காவில் பெரும்பாலான வாக்காளர்கள் இரண்டு கட்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்: ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி.
ஜனநாயகக் கட்சி நவீன தாராளவாத சிந்தனைகளுக்கு ஆதரவானது. அரசின் தலையீடுகள், எல்லோருக்கும் சுகாதார வசதி கிடைக்கச் செய்தல், குறைந்த செலவில் கல்வி கிடைக்கச் செய்தல், சமூக நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் தொழில் சங்கங்கள் போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சி.
அந்தக் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்டவர் ஹிலாரி கிளின்டன். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிடம் அவர் தோற்றுப் போனார்.
மிகவும் பழமையான கட்சி அல்லது ஜிஓபி என கூறப்படும் குடியரசுக் கட்சி, அமெரிக்க அடிப்படைவாத சிந்தனைகளை வலியுறுத்தக் கூடியதாக - அரசின் குறுக்கீடுகளுக்கு வரம்பு நிர்ணயித்துக் கொள்ளும், கீழ்நிலை வரிகளை மற்றும் தாராளமய சந்தை முதலாளித்துவத்தை ஊக்குவிக்கக் கூடிய, துப்பாக்கி உரிமங்கள் தருவதை ஆதரிக்கக் கூடிய, தொழில் சங்கங்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை விரும்பும், குடியேற்றம் மற்றும் கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்சியாக உள்ளது.
லிபர்ட்டேரியன், கிரீன் போன்ற மற்ற சிறிய அரசியல் அமைப்புகளும், தனிப்பட்ட கட்சிகளும், எப்போதாவது தங்கள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது உண்டு.
இப்போது என்ன நடைபெறுகிறது?

பட மூலாதாரம், Getty Images
அதிபர் பதவிக்கான போட்டியில் இறங்க விரும்புவோர் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்படுவதற்கு நாடு முழுக்க நடைபெறும் முதல்கட்டத் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்க அரசியல் சாசனத்தில் இந்த பூர்வாங்க நிலை போட்டியாளர்கள் பற்றி எதுவும் இல்லை. எனவே இந்தப் போட்டி, கட்சி மற்றும் மாகாண சட்டங்களின்படி நடத்தப்படுகிறது.
இதை அரசியல் கட்சிகள் நடத்துவது இல்லை - மாகாண அரசுகள் நடத்துகின்றன. பொதுத் தேர்தலைப் போலவே இந்த பூர்வாங்கத் தேர்தலும் நடத்தப்படும்.
அரசியல் கட்சிகளில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்கக் கூடியதா அல்லது பதிவு செய்யாத வாக்காளர்களும் வாக்களிக்கும் திறந்த முறையில் தேர்தலை நடத்துவதா என்பதை மாகாண சட்டங்கள் தீர்மானிக்கும்.
ஒரு வேட்பாளர் பூர்வாங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால், மாகாண பிரதிநிதிகள் அனைவருடைய அல்லது விகிதாச்சார எண்ணிக்கையில் கட்சி விதிகளைப் பொருத்து பிரதிநிதிகளைப் பெறுவார்கள். இந்தப் பிரதிநிதிகள் கட்சியின் மாநாட்டில் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். அங்கு அதிபர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இந்தப் பூர்வாங்கத் தேர்தல் நடைமுறை அமெரிக்காவில் மட்டும் கடைபிடிக்கப்படும் பிரத்யேகமான விஷயமாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிலும் இதுபோல, வேட்பாளர்களை `முன்கூட்டியே தேர்வு செய்யும்' நடைமுறைகள் உள்ளன.
அரசியல் கட்சி கருத்தெடுப்புகள் எவை?

பட மூலாதாரம், Getty Images
இயோவா போன்ற மாகாணங்களில், பூர்வாங்கத் தேர்தலுக்குப் பதிலாக அரசியல் கட்சி சார்பில் கருத்தெடுப்பாக இது நடக்கும்.
மாகாண அளவில் அரசியல் கட்சிகள் சார்பில் இது நடத்தப்படும்.
மாகாண அரசுகள் அதை நடத்துவதில்லை என்பதால், அதில் யார் வாக்களிக்கலாம் என்பதை தீர்மானிக்க கட்சிகள் விட்டுக்கொடுத்து முடிவு செய்யும்.
ஜனநாயகக் கட்சியின் கருத்தெடுப்பில், வாக்குச் சீட்டு முறை கிடையாது. ஆதரிப்பவர்கள் ஒரு குழுவாக அறையில் எழுந்து நிற்பதன் மூலம் ஆதரவு தீர்மானிக்கப்படுகிறது.
சூப்பர் செவ்வாய் என்பது என்ன?
பெரும்பாலான மாகாணங்கள் பூர்வாங்கத் தேர்தல்கள் அல்லது கட்சி கருத்தெடுப்புகளை நடத்தும் நாள் தான் அது.
இந்த ஆண்டு சூப்பர் செவ்வாய் மார்ச் 3 ஆம் தேதி வருகிறது.
இவையெல்லாம் எவ்வளவு காலம் நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா முழுக்க பூர்வாங்கத் தேர்தல்கள் மற்றும் கட்சி கருத்தெடுப்புகள் பிப்ரவரியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும்.
ஜனநாயகக் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது அதற்குள் தெரிந்துவிடும். ஏனெனில் ஒவ்வொரு பூர்வாங்கத் தேர்தல் அல்லது அரசியல் கருத்தெடுப்பில் தேர்வாகும் பிரதிநிதிகளின் ஆதரவை வேட்பாளர்கள் பெறத் தொடங்குவார்கள்.
பிரச்சார காலத்துக்கு சட்டபூர்வ வரையறை அளிக்கப்படும், பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ளதைப் போல அல்லாமல், அமெரிக்காவில் வேட்பாளர்கள் விரும்பும் காலம் முன்னதாக பிரச்சாரத்தை தொடங்கிடலாம்.
அதிபர் தேர்தல் பணிகள் தொடங்கி முடிவடைவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகிறது.
டிரம்ப் எப்போது உண்மையாக போட்டியாளரை எதிர்கொள்வார்?

பட மூலாதாரம், Getty Images
ஜனநாயகக் கட்சியின் தேசிய அளவிலான மாநாட்டில் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். அந்த மாநாடு ஜூலை 13 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, அதன் பிறகு ஆகஸ்ட் 24 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. (மாநாட்டில் அறிவிக்கப்படும் வரையில், அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் இருக்க மாட்டார்.) அதன்பிறகு நான்கு விவாதங்கள் நடைபெறும். அதிபர் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர், அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்.
1987ல் உருவாக்கப்பட்ட அதிபர் தேர்தல் விவாதங்களுக்கான கட்சி சார்பற்ற ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்து, நடத்துகிறது.
அதிபர் பதவிக்கான மூன்று விவாதங்களில், முதலாவது விவாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி இன்டியானாவில் நடைபெறுகிறது. அடுத்து மேலும் இரு விவாதங்கள் அக்டோபர் மாதம் நடைபெறும்.
துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விவாதம் உட்டாஹ்-ல் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும்.
பொதுத் தேர்தலில் ஒருவர் எப்படி வெற்றி பெறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images
மக்களின் வாக்குகளுக்கு - அதாவது ஒவ்வொரு வேட்பாளரும் பெறக் கூடிய வாக்குகளின் எண்ணிக்கை - நவம்பர் 3 ஆம் தேதி பொதுத் தேர்தல் வெற்றியாளரை நிர்ணயிப்பதில் எந்தப் பங்கும் இல்லை.
ஏனெனில் அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. ``மாகாணப் பிரதிநிதிகள்'' எனப்படுபவர்களால் மறைமுகமாக அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அமெரிக்க அரசியல் சாசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, மாகாண மற்றும் மத்திய அரசுகளின் தொகுப்பு சட்டங்களுக்கு உள்பட்டு அதிபர் தேர்வு செய்யப்படுகிறார்.
ஏட்டளவில் பார்த்தால், பெரும்பாலான வாக்குகள் பெற்றவரை பிரதிநிதிகள் சபை தேர்வு செய்யும் - ஆனால் எல்லா சமயங்களிலும் அப்படி நடப்பதில்லை. மொத்தம் உள்ள 538 வாக்குகளில், 270 வாக்குகளைப் பெற்றால் வெள்ளை மாளிகையில் குடியேறும் உரிமை கிடைத்துவிடும்.
அதனால் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில், பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், வேட்பாளர்களுக்கு சில மாகாணங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
மக்களின் வாக்குகள் அதிகமாகக் கிடைத்து, பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைவாக போவதற்கு வாய்ப்பு உள்ளது. 2000வது ஆண்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரேவுக்கும், 2016ல் ஹிலாரி கிளின்டனுக்கும் இதுபோல நடந்தது.
பிரதிநிதிகள் மன்றம் என்பது என்ன, அது எப்படி செயல்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
பிரதிநிதிகள் மன்றம் என்பது, அதிகாரிகள் அல்லது ``தேர்ந்தெடுப்பவர்களை'' கொண்ட அமைப்புக்கான பெயர். அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்ய இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகிறது.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாகாணத்துக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை உள்ளது: செனட் உறுப்பினர்களின் எண்ணிக்கை (ஒவ்வொரு மாகாணத்துக்கும் இருவர்) மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை (மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுவது) ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக இது இருக்கும்.
கலிபோர்னியா (55), டெக்சாஸ் (38), நியூயார்க் (29), புளோரிடா (29), இல்லினாய்ஸ் (20), பெனிசில்வேனியா (20) ஆகியவை பெரிய மாகாணங்களாக உள்ளன.
இந்த நடைமுறையில் சிறிய மாகாணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதாவது, ஒரு வேட்பாளர் நாடு முழுக்க பரவலாக வாக்குகளைப் பெற்றிட வேண்டும்.
ஊசலாட்ட, சிவப்பு மற்றும் நீல மாகாணங்கள் என்றால் என்ன?
குடியரசுக் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள இடாஹோ, அலாஸ்கா மற்றும் பல தெற்கு மாகாணங்கள் `சிவப்பு மாகாணங்கள்' எனப்படுகின்றன.
ஜனநாயகக் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கலிபோர்னியா, இல்லினாய்ஸ், வடகிழக்கு கடலோரம் நியூ இங்கிலாந்து பகுதியில் பல பகுதிகள் ``நீல மாகாணங்கள்'' எனப்படுகின்றன.
வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்து சில மாகாணங்களில் ஆதரவு நிலை மாறிக் கொண்டிருக்கும். அவை ஊசலாட்ட மாகாணங்கள் எனப்படுகின்றன.
வெற்றி பெற முடியாத பகுதிகளில் பிரச்சாரம் அல்லது சக்தியை வீணடிக்கும் வகையில் பிரச்சாரம் இருப்பதில்லை. ஓஹியோ, புளோரிடா போன்ற ஊசலாட்ட மாகாணங்களின் ஆதரவைப் பெறுவதில் தான் பெரும்பாலான பிரச்சாரங்கள் இருக்கும்.
2020 தேர்தலில் அரிசோனா, பெனிசில்வேனியா, விஸ்கான்சின் மாகாணங்கள் ஊசலாட்ட மாகாணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
வாக்காளர்கள் எவ்வளவு நாட்கள் வாக்களிக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் பல விஷயங்கள் மாறுபடுவதைப் போல, இதுவும் மாகாணத்துக்கு ஏற்ப மாறும்.
பெரும்பாலானவற்றில் சீக்கிரம் வாக்குப் பதிவு நடைபெறும். பதிவு செய்த வாக்காளர்கள், தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்களிக்க அவை அனுமதிக்கும். உடல் நலம் இல்லாதவர்கள், வர இயலாத வகையில் முடங்கியவர்கள், பயணத்தில் இருப்பவர்கள் அல்லது மாகாணத்துக்கு வெளியே கல்வி கற்பவர்களுக்காக, தபால் முறை வாக்குகளும் உண்டு.
தேர்தல் நாளன்று வாக்களிப்பவர்கள், அதிகாரப்பூர்வ வாக்குச் சாவடிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும்.
ஆன்லைன் வாக்களிப்பு முறை எதுவும் கிடையாது.
வாக்கு எண்ணிக்கையை ஒவ்வொரு மாகாணமும் நடத்தும். வெற்றியாளர் அதே இரவில் அறிவிக்கப்படுவார்.
பிரதிநிதிகள் மன்றத்தில் யாரும் வெற்றி பெறாவிட்டால் என்ன நடக்கும்?
பிரதிநிதி வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவு எந்த வேட்பாளருக்கும் கிடைக்காமல் போனால், முதல் மூன்று வேட்பாளர்களில் இருந்து அதிபரை பிரதிநிதிகள் சபை தேர்வு செய்யும்.

பட மூலாதாரம், Getty Images
மீதி இரண்டு வேட்பாளர்களில் இருந்து துணை அதிபரை செனட் தேர்வு செய்யும்.
அது அபூர்வமான சூழ்நிலைதான். ஆனால், முன்பு ஒரு முறை இப்படி நடந்துள்ளது. 1824 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் குவின்சி ஆடம்ஸ் அந்த முறையில் தான் வெள்ளை மாளிகையில் நுழைந்தார்.
வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும்?
தேர்தல்களுக்குப் பிறகு, ஆட்சி மாற்ற காலம் இருக்கும். புதிய அதிபர், அமைச்சர்களை தேர்வு செய்ய, திட்டங்களைத் தயாரிக்க இந்த அவகாசம் உதவியாக இருக்கும்.
புதிய அதிபர் (அல்லது ஏற்கெனவே பதவியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்றவர்) ஜனவரி மாதத்தில் பதவி ஏற்றுக் கொள்வார். இது தொடக்க நிகழ்ச்சி எனப்படும். தொடக்க நிகழ்ச்சி ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறும்.
நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அதிபர் வெள்ளை மாளிகைக்கு அணிவகுப்புடன் திரும்பி செல்வார். அடுத்த நான்காண்டு பதவிக் காலத்தை அங்கு தொடங்குவார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












