தீபா கர்மாகரைப் போன்றே நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்ட் பிரியங்கா

தீபா கர்மாகரைப் போன்றே நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்ட் பிரியங்கா

பட மூலாதாரம், Dilip Sharma

கெளஹாத்தியில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 16 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரியங்கா தாஸ் குப்தா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் மாநிலமான திரிபுராவைச் சேர்ந்தவர் பிரியங்கா. தீபா கர்மாகரின் பயிற்சியாளர் பிஷேஸ்வர் நந்தி என்பவர்தான் அவருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இளம் விளையாட்டு நட்சத்திரங்களை கண்டறிய 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' நடத்தப்படுகிறது. இது திரிபுரா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு ஒரு பெரிய ஊக்கம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இந்த விளையாட்டுப் போட்டியின் 3வது சீசனில் திரிபுராவை சேர்ந்த பிரியங்கா தாஸ் குப்தா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பிரியங்காவைத் தவிர, திரிபுராவைச் சேர்ந்த எந்த வீரரும் தங்கப் பதக்கம் வெல்லவில்லை.

தீபா கர்மாகரைப் போன்றே நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்ட் பிரியங்கா

பட மூலாதாரம், Dilip Sharma

தனது வெற்றியை தனது முதல் பயிற்சியாளர் சோமா நந்தி, துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் பெஹேஸ்வர் நந்தி மற்றும் குறிப்பாக தனது தாயார் ஆகியோருக்கு அர்பணித்தார் பிரியங்கா.

கெளஹாத்தியில் உள்ள போகேஸ்வரி ஃபுக்னானி உள்ளரங்க மைதானத்தில் பிபிசிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த பிரியங்கா, "குழந்தை பருவத்தில் அதிக குறும்பு செய்த என்னை சமாளிப்பதற்காக அம்மா, ஜிம்னாஸ்டிக்ஸ் அகாடமியில் சேர்த்துவிட்டார். இப்போது நான் ஒரு நல்ல ஜிம்னாஸ்டாக முன்னேற விரும்புகிறேன். இதற்காக நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். நான் தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் விளையாட வேண்டும், பதக்கம் பெற வேண்டும். அதன் பிறகு ஒலிம்பிக்கிற்கு செல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள்" என்று தெரிவித்தார்.

தீபா கர்மாகரிடமிருந்து உத்வேகம் பெறுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிரியங்கா, "ஜிம்னாஸ்டிக்ஸில் தீபா அக்காவின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது, அவர் ஜிம்மில் கடினமாக உழைக்கிறார். என் வீட்டில் நான் ஒரே பெண் குழந்தை. உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. எனவே தீபா அக்காதான் எனக்கு எல்லாமே. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதும் தீபா அக்காதான் எனக்கு முதல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது எனக்கு மிகப்பெரிய விஷயம். எனது பயிற்சியாளர் துரோணாச்சார்யா விருது பெற்ற நந்தி சார் என்னை வாழ்த்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

தீபா கர்மாகரைப் போன்றே நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்ட் பிரியங்கா

குடும்பச் சூழல் மற்றும் பெற்றோரின் ஆதரவு குறித்து பிரியங்கா கூறுகையில், "எங்கள் குடும்பத்தில் பெண் அல்லது ஆண் குழந்தை என எந்தவிதமான பாகுபாடும் இல்லை. பெற்றோர் எப்போதும் ஆதரவளித்து வருவதால்தான் தொடர்ந்து எனது விளையாட்டை மேம்படுத்த முடிகிறது. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தந்தை ஒரு டாக்ஸி ஓட்டுகிறார். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். வீட்டை விட்டு அதிகாலை ஐந்து மணிக்கு வெளியே சென்றால், இரவு தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவார். அவருடன் பேச எனக்கு வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். ஏனென்றால் அவர் வீட்டுக்கு திரும்பி வரும்போது, நான் தூங்கியிருப்பேன். இந்த விளையாட்டுதான் எனது லட்சியம், வாழ்க்கை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன், அதோடு படிப்பையும் தொடர விரும்புகிறேன். விளையாட்டினால்தான் என்னுடைய படிப்பு கெட்டுப்போனது என்று யாரும் என் அப்பாவிடம் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். "

சர்வதேச அளவில் விளையாடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் பிரியங்கா, "எனது பயிற்சியாளர் நந்தி சார் சொல்லும் சிறிய விஷயமானாலும் அதை பின்பற்றுவேன். அவர் சொல்லும் பயிற்சிகளை செய்வதற்காக பல மணிநேரங்களை செலவிடுவேன். ஒரே விஷயத்தை தொடர்ந்து ஆயிரம் முறை பயிற்சி செய்தால், அது சரியாக வந்துவிடும், நமது கைவசப்படும். நான் தங்கம் வென்ற போட்டிகள் அனைத்திற்காகவும், நூற்றுக்கணக்கான முறை பயிற்சி செய்துள்ளேன். ஒரு புதிய விஷயம் கற்பிக்கப்படும் போது, அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். சிறிய பயம் இருக்கும். ஆனால் நந்தி சார் பொறுமையாக கற்றுக்கொடுப்பார். அதனால் தான் எல்லாமே சாத்தியமாகிறது. கடந்த ஆண்டு கேலோ இந்தியாவில் எனக்கு மூன்று வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன, கடினமாக உழைத்து இந்த ஆண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன்."

ஜிம்னாஸ்டிக்ஸ் தவிர, பிரியங்காவுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்தமானது. "பெரும்பாலும் நான் சர்வதேச ஜிம்னாஸ்ட்களின் காணொளிகளைப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு விராட் கோலி மிகவும் பிடிக்கும். அவர் பேட்டிங் செய்ய வரும்போது நான் சத்தம் போட்டு உற்சாகப்படுத்துவேன். ரியோ ஒலிம்பிக்கிற்கு தீபா அக்கா தகுதி பெற்றபோது, சச்சின் டெண்டுல்கர் சார் அவரை வாழ்த்தி பாராட்டினார். இது ஒரு பெரிய விஷயம். "

தீபா கர்மாகரைப் போன்றே நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்ட் பிரியங்கா

விராட் கோலி உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, "நான் இதுவரை பெரிதாக எதுவும் செய்யவில்லை. சர்வதேச அளவில் பதக்கம் வென்றால், விராட் கோலியும் என்னை வாழ்த்துவார்" என்று கூறுகிறார்.

பிரியங்காவின் முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் சோமா நந்தி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கிறார். "எங்கள் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு திறமை இருக்கிறது, ஆனால் வீட்டின் சூழ்நிலை காரணமாக, இந்த விளையாட்டை நீண்ட காலம் தொடர்வது பலருக்கு சாத்தியமாவதில்லை. எங்கள் அரசு விளையாட்டுத் துறையில் ஒரு பெரிய வேலையைச் செய்து வருகிறது. திரிபுராவில் குறிப்பாக ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன. ஆனால் பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெற்றோருக்கு, அவர்களின் குழந்தையின் கல்வி மற்றும் விளையாட்டு செலவுகளை ஒரே நேரத்தில் செய்வது கொஞ்சம் கடினமாகிவிடுகிறது. பல திறமையான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் தந்தை ஒரு டாக்ஸி டிரைவர் அல்லது ரிக்‌ஷா டிரைவர். இதுபோன்ற ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். நானும் என் கணவரும் அத்தகைய திறமையான குழந்தைகளுக்கு உதவுகிறோம். வரும் நாட்களில், இதுபோன்ற பல திறமையான ஜிம்னாஸ்ட்கள் திரிபுராவிலிருந்து வெளியே வருவார்கள் "

தீபா கர்மாக்கர் மற்றும் பிரியங்காவின் விளையாட்டுக்கு உள்ள ஒற்றுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த சோமா நந்தி, "ஜிம்னாஸ்டிக்ஸ் மீதான தீபாவின் ஆர்வம் வேறு. எந்தவொரு விஷயத்தையும் முழுமையாக செய்யாமல், அவள் பின்வாங்குவதில்லை. பிரியங்கா மிகவும் திறமையான ஜிம்னாஸ்ட். ஆனால் இப்போது அவர் அதிக அர்ப்பணிப்புடன் பயிற்சி பெற வேண்டிய நேரம் இது. அவர் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். பிரியங்கா வயதிலும் இளையவர். "

தீபா கர்மாகரைப் போன்றே நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்ட் பிரியங்கா

பிரியங்காவின் குடும்பத்தின் நிதி நிலைமை குறித்து பேசும் சோமா நந்தி, "பிரியங்காவின் வீட்டின் பொருளாதார நிலை சரியில்லை. அவரது தந்தை ஒரு டாக்ஸி ஓட்டி குடும்பத்தை நட த்துகிறார். இந்த நிலையில் மகளின் ஜிம்னாஸ்டிக் கனவுக்கும் போதுமான உதவிகளை செய்கிறார். சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட பிரியங்காவுக்கு உடைகளைத் தவிர, சத்தான நல்ல உணவு முதல் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவளிடம் திறமைக்கு பஞ்சமில்லை, ஆனால் வீட்டின் பொருளாதார நிலையால் அந்த திறமை குடத்தில் இட்ட விளக்காக வெளியில் தெரியாமல் போய்விடக்கூடாது" என்று சொல்கிறார்.

தீபா கர்மாகரைத் தவிர, ரியோ ஒலிம்பிக் சாம்பியன் சைமன் பைல்ஸ் மற்றும் ரஷ்யாவின் ஜிம்னாஸ்ட் ஆலியா முஸ்த்ஃபினாவையும் பிரியங்காவுக்கு மிகவும் பிடிக்கும். தனது ஓய்வு நேரத்தில், பிரியங்கா இந்த சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களின் காணொளிகளைப் பார்க்கிறார். இதனால் அவர் தனது விளையாட்டை மேலும் மேம்படுத்த முடியும்.

குடும்ப சூழலை மீறி 16 வயதில் ஜிம்னாஸ்டிக்கில் கலக்கும் பிரியங்கா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: