சானியா மிர்சா: குழந்தை பிறப்புக்கு பின் முதல் சர்வதேச டென்னிஸ் வெற்றி

Sania Mirza has won Hobart International

பட மூலாதாரம், Steve Bell / getty images

படக்குறிப்பு, உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை நாடியா கிச்சோனக் (வலது) உடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் வென்றுள்ளார் சானியா

குழந்தை பிறப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா, குழந்தை பிறப்புக்கு பின் தாம் விளையாடிய முதல் சர்வதேச விளையாட்டுப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மகளிருக்காக நடத்தப்படும் ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் உக்ரேனின் நாடியா கிச்சோனக் உடன் சேர்ந்து விளையாடிய சானியா மிர்சா, தங்களை எதிர்த்து போட்டியிட்ட சீன இணையை 6-4, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றபின் நீண்ட காலம் கழித்து வெற்றி பெற்றது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சானியா, அப்போது தன் மகன் மற்றும் பெற்றோர் ஆகிய இருவருமே அங்கு இருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

Sania Mirza has won Hobart International

பட மூலாதாரம், Twitter

இதற்கு முன்னரும் விளையாட்டு வீராங்கனைகள் குழந்தை பிறப்புக்கு பின்னர் வெற்றிகளை ஈட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடந்துள்ளன.

இந்தியத் தடகள வீராங்கனை பி.டி.உஷா 1990களிலேயே குழந்தை பிறப்புக்கு பின்னர் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மூன்று குழந்தைகளை பெற்றேடுத்த பின்னரும் சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றார்.

குழந்தை பெற்றுக்கொண்ட ஆறே மாதங்களில் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்று, 2018இல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

"குழந்தை பிறந்தபின் பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள். ஒவ்வொரு நாளிலும் முன்னேற்றம் தெரிகிறது. நான் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும், நான் முன்னேற்றம் காணும் வரை, அது குறித்து எனக்கு கவலை இல்லை," என்று பிபிசி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் செரீனா.

2019இல், ஜமைக்காவைச் சேர்ந்த 32 வயதாகும் ஷெல்லி ஆன் பிரைஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றபோது அவருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருந்தது. அது அவருக்கு 8வது சர்வதேச பட்டமாகும்.

"மகனைப் பெற்றேடுத்த பின் மீண்டும் வெல்வதன் மூலம், குடும்ப உறவை தொடங்கும் அல்லது தொடங்க விரும்பும் பெண்களுக்கு நான் உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன்," என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: