"நடிகர் விஜய், வரி விதிப்பு, தோசை, எல்.ஐ.சி"- நாடாளுமன்றத்தில் கொதித்த தயாநிதி மாறன்

மக்களவையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன்

பட மூலாதாரம், Getty Images

News image

"ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். இது போலதான் இந்திய பட்ஜெட்டுன் உள்ளது," என்று குறிப்பிட்டார் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்.

எல்.ஐ.சி முதல் நடிகர் விஜய் வரை பல விஷயங்களை குறிப்பிட்டு இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசினார் தயாநிதி மாறன். அதன் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

"தோசை... சாம்பார்... சட்னி பின்னே பட்ஜெட்"

இந்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் இன்று பேசிய தயாநிதி மாறன், "வரி செலுத்துவது மிகவும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. யாரும் ஆடிட்டரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். ஆனால், இந்த புதிய வரி விதிப்பு குறித்து புரிந்து கொள்ளவே நான் ஆடிட்டருக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும் போல." என்றார்.

புதிய வரிவிதிப்பு குறித்து பேசிய தயாநிதி மாறன், இந்த வரிவிதிப்பை தோசைக்கடையுடன் இந்திய மக்கள் ஒப்பிடுவதாக தெரிவித்தார்.

அவர், "முன்பு மசாலா தோசை 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்புக்கு பின்பு மசாலா தோசை விலை 45 ரூபாய்தான். ஆனால், சாம்பாருக்கு 15 ரூபாயும், சட்னிக்கு 15 ரூபாயும் செலுத்த வேண்டும். இப்படிதான் இருக்கிறது உங்கள் வரிவிதிப்பு" என்றார்.

சேமிப்பு

மக்களவையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன்

பட மூலாதாரம், LSTV

இந்திய மக்கள் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால், சேமிப்பு பழக்கத்தை சிதைப்பது போல இருக்கிறது உங்கள் பட்ஜெட். சேமிப்புக்கான வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறீர்கள்." என்றார்.

"மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்தாமல், அதனை நீங்கள் முடக்கி வருகிறீர்கள்." என்று பேசினார்.

எல்.ஐ.சி பங்குகளை விற்பது, ஏர் இந்தியாவை விற்பது, பி.எஸ்.என்.எல்-லின் நஷ்டம் ஆகிய விஷயங்களில் ஆளும் பா.ஜ,க அரசை கடுமையாக சாடினார் தயாநிதி மாறன்.

"நீங்கள் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு காங்கிரஸை குற்றஞ்சாட்ட முடியாது. ஏனெனில் நீங்கள்தான் கடந்த ஆறு ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வருகிறீர்கள்." என்றார்.

"கொரோனா வைரஸின் காரணமாக சீனாவில் சிக்கிக்கொண்டிந்த இந்தியர்களை மீட்டது இந்திய நிறுவனமான ஏர் இந்தியாதான். இப்போது அதனை விற்கிறீர்கள். நாளை இப்படியொரு நிலை ஏற்பட்டால் எந்த வானூர்தி நிறுவனம் மக்களை மீட்கும்," என்று கேள்வி எழுப்பினார்.

"எல்லாவற்றையும் விற்றுவிட்டீர்கள். ஏன் நாடாளுமன்றத்தையும் விற்றுவிட வேண்டியதுதானே? திருமணங்களுக்காக வாடகைக்கு விட வேண்டியதுதானே?," என்றார்.

"நடிகர் விஜய்யை குறி வைக்கிறீர்கள்"

மக்களவையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன்

பட மூலாதாரம், Bigil

வருமான வரித்துறை பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறிய தயாநிதி மாறன். "ரஜினிக்கு விலக்கு தருகிறீர்கள். நடிகர் விஜய்யை படப்பிடிப்பிலிருந்து அழைத்து விசாரிக்கிறீர்கள். இது எப்படி சரியாகும்?" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: