ஷாஹீன்பாக் போராட்டம்: பொது இடத்தை ஆக்கிரமித்து போராட உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு

பட மூலாதாரம், NurPhoto/getty images
டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 55 நாட்களுக்கு மேலாக சாலையை ஆக்கிரமித்து தொடர் போராட்டம் நடத்திவரும் பெண்களை அங்கிருந்து அகற்றக்கோரும் இரண்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் வழங்கும்படி டெல்லி போலீஸ் மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், போராட்டம் நடத்துவதென்றால் அதற்காக ஒரு தனி இடத்தில் போராடலாம். பொது சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நந்த கிஷோர் கார்க், அமித் சாஹ்னி என்னும் வழக்கறிஞரும் ஷாஹீன்பாக்கில் போராடி வரும் மக்களை அங்கிருந்து அகற்றக்கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நந்த கிஷோர் கார்கின் வழக்கறிஞர் ஷஷாங்க் தேவ் சூதி இன்று திங்கள் கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்னிலையில் இந்த வழக்கில் முறையீடு செய்தார். இது உடனடியாக விசாரிக்கப்படவேண்டியது என்று குறிப்பிட்ட அவர், பதிவாளரை அணுகும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும் ஷாஹின்பாக்கில் போராடும் மக்கள் சட்டவிரோதமாக டெல்லியிருந்து நொய்டா செல்லும் பாதையை மறித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், ஷாஹீன்பாகில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டவிரோதமாக பொதுச் சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடந்துவருவதாக குறிப்பிடுகிறது.
ஷாஹீன்பாக் - கலிந்தி குஞ்ஜ் சாலையில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













