ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத கனமழை: காட்டுத் தீ பிரச்சனைக்கு முடிவு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், EPA
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி தீவிர மழை பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டப்பட்டுள்ளனர்.
சிட்னி நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 391.5 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளதை அடுத்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளம் ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதி தீவிர மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிட்னி நகரத்தில் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பயணத்தை தவிர்க்குமாறும், வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவசரகால உதவி குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பட மூலாதாரம், EPA
இது தவிர, சிட்னி மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த தீவிர மழையால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, சமீப மாதங்களாக நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ இதன் மூலம் முடிவுக்கு வந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் எளிதாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், வேகமாக நகரும் வெள்ளம் அதிக அளவிலான குப்பைகளை அடித்து வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலமாக மாறுமா?

பட மூலாதாரம், Getty Images
சர்ச்சை மிகுந்த திட்டமாக அறியப்பட்ட ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்படமாட்டாது என்றும் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த அறிவிப்புக்கு தாங்கள்தான் காரணம் எனப் பல அமைப்புகள் உரிமை கோரியும் உள்ளன. ஆனால், அதே நேரம் இந்த அறிவிப்பு குறித்து சந்தேகங்களையும் எழுப்புகின்றனர் செயற்பாட்டாளர்கள்.
விரிவாக படிக்க: காவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலமாக மாறுமா? - சந்தேகம் எழுப்பும் செயற்பாட்டாளர்கள்

இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images
முதல் முறையாக ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது வங்கதேசம். மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது. வங்கதேச அணி, நியூசிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

"ராஜபக்ஷவிடம் மோதியின் வலியுறுத்தல் ஒரு கண்துடைப்பு"

பட மூலாதாரம், PMOINDIA
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது வலியுறுத்தினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
இது எந்த அளவுக்கு இலங்கைக்கு அழுத்தத்தை தரும் என்றும், ஏன் இப்போது இந்தியா இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறது என்றும் மூத்த பத்திரிகையாளரும், இலங்கையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவருமான ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டது பிபிசி தமிழ்.

"அரசுப் பணிக்கு இடைத் தரகர்களை தேடுகிறார்கள்"

பட மூலாதாரம், Getty Images
தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காத பல இளைஞர்கள், காசுகொடுத்தாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இடைத் தரகர்களிடம் பேரம்பேசி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதியுள்ளார்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இதுவரை 32 பேர் கைதாகியுள்ளனர். குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து நடந்த விசாரணையில், குரூப்2 ஏ தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













