Coronavirus News: ஒரே நாளில் 97 பேர் பலி; ஆனால் மட்டுப்படுகிறது நோய்த் தொற்று

பட மூலாதாரம், EPA
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சீனாவில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இந்த நோய் சிக்கலில் இது ஒரு மோசமான நாளாக அமைந்தது. இதன் மூலம் சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 908 ஆகியுள்ளது.
அதே நேரம், புதிதாக நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் எண்ணிக்கை ஓரளவு மட்டுப்படத் தொடங்கியுள்ளது.
சீனா முழுவதிலும் 1,87,518 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 40,171 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நாவல் கொரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார நிறுவனம், வல்லுநர் குழு ஒன்றினை சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு அனுப்பியுள்ளது.
சீனா அளிக்கும் தரவுகளின்படி, 3,281 கொரோனா நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், சீனாவில் கொண்டாடப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட புத்தாண்டு விடுமுறையை ஜனவரி 31-ம் தேதியில் இருந்து நீட்டித்தது சீன அரசு. இந்த நீட்டித்த விடுமுறை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை பணிக்குத் திரும்புகிறார்கள்.
எனினும், வேலை நேரத்தை பகுதி பகுதியாக மாற்றியமைப்பது, குறிப்பிட்ட பணியிடங்களை மட்டும் திறப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

பட மூலாதாரம், Reuters
இதனிடையே, புதிதாக கொரோனா நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் எண்ணிக்கை மட்டுப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது. ஆனால், வைரஸ் தாக்குதல் அதன் உச்சநிலையை கடந்துவிட்டதா என்பதை இப்போதே தெரிவிக்க முடியாது என்றும் அது கூறியிருந்தது.
இதுவரை கொரோனா வைரஸ் சீனா தவிர, 27 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குப் பரவியுள்ளது. ஆனால், சீனப் பெருநிலப் பரப்புக்கு வெளியே, இந்த நோயால், ஹாங்காங்கில் ஒன்று, பிலிப்பைன்சில் ஒன்று என இரண்டு மரணங்களே நிகழ்ந்துள்ளன.
இதனிடையே, ஹாங்காங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3,600 பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏதும் இல்லை என்று தெரியவந்ததால் அவர்கள் கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட ஒரு சொகுசுக் கப்பலில் பல்வேறு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்ததை அடுத்து, ஹாங்காங் துறைமுகத்தில் இருந்த இந்த 'வேர்ல்ட் ட்ரீம்' என்ற அந்தக் கப்பலில் இருந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













