திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியாணாவை சேர்ந்தோர் உள்ளிட்ட 10 பேரிடம் போலீஸ் விசாரணை

போலீஸ்

பட மூலாதாரம், Handout

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில், ஒரே பாணியில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.70 லட்சம் கொள்ளை அடித்தது தொடர்பில் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட 10 பேரை பிடித்து தமிழ்நாடு போலீஸ் விசாரித்து வருவதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். "இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரைக் கர்நாடகா, குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தை யார் செய்தார்கள் என்பது தெரிந்துவிட்டது. கூடிய விரைவில் அனைத்தையும் தெரியப்படுத்துவோம்," என ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் முகாமிட்டு விசாரணை செய்து வருகின்றனர். இதில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புக் காவல் படையினர் ஹரியாணா மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான சிறப்புக் காவல் படையினர் குஜராத் மாநிலத்திலும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு படையினர் கர்நாடகத்தின் கோளார் பகுதியிலும் முகாமிட்டு சோதனை செய்து வருகின்றனர்.

கொள்ளைபோன ஒரு ஏடிஎம்.
படக்குறிப்பு, கொள்ளைபோன ஒரு ஏடிஎம்.

இந்த விசாரணையில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் இந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீசாருக்கு உறுதியாகத் தெரியவந்துள்ளது. இது ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வைத்துத்தான் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்புக் காவல் படையினர் முகாமிட்டுள்ளனர்.

குறிப்பாக கர்நாடக மாநிலம் கோளார் பகுதியில் இந்த கொள்ளையர்கள் தங்கியிருந்து ஏடிஎம் மையங்களை வந்து கண்காணித்துள்ளனர். இதன்பிறகு திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர், "இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தின் கோளார் பகுதியில் இரண்டு பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம். அதேபோன்று இந்த குற்றத்தை செய்துவிட்டு தப்பிச்சென்ற 6 பேரை குஜராத் மாநிலத்தில் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறோம். இதுமட்டுமின்றி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு விமானம் மூலமாக ஹரியாணா தப்பிய 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். இந்த விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நிறைவு பெறவில்லை. இதில் முன்பே யூகித்தது போல இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை மறுக்கமுடியாத அளவிற்கு உறுதியான ஆதாரம் கிடைத்துள்ளது," என்றார் அவர்.

கொள்ளை போன ஏடிஎம்

"தற்போது நாங்கள் கர்நாடக, குஜராத் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பிடித்த குற்றவாளிகளை கைது செய்யவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மட்டும் செய்து வருகிறோம்" என்கிறார் அவர். "இந்த விசாரணை 10 பேரிடம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை. ஆனால் இவர்கள் வெளிமாநிலங்களில் தங்கியிருந்ததால் அங்கே உள்ளவர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.

இந்த கொள்ளை தொடர்பாக விசாரணையை நடத்த தேசிய அளவில் ஒரு திட்டத்தை வகுத்து, இந்த குற்றவாளிகளில் இருவரைத் தவிர மீதம் உள்ளவர்களை அவர்கள் மாநிலத்தை நெருங்குவதற்கு முன்பாகவே பிடித்துவிட்டோம்.

இந்த குற்றவாளிகளின் தரவுகளைப் பிற மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறையினர் கேட்டுள்ளனர். மேலும் இந்த குற்றவாளிகளின் நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களில் எப்படி உள்ளது என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்