"கரன்ட் பில் கட்டச்சொல்லி ஆன்லைன் மோசடி" - புதிய திருட்டு, என்ன தீர்வு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்புக்குப் பிறகு சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களை இலக்கு வைத்து ஆன்லைனில் நூதன மோசடியில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகரிக்கும் ஆன்லைன் நூதன மோசடி
வாடிக்கையாளர் சேவை வழங்கும் நிறுவனங்கள் வங்கிகள், வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்பேசி வழியாகவே வசதிகளைப் பெற கட்டணத்தை செலுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால், அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி கும்பல்கள் மக்களிடம் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் கூட முற்றிலும் டிஜிட்டல்மய கட்டண முறைக்கு மாறி விட்டன.

பட மூலாதாரம், Getty Images
ஆன்லைன் மோசடியில் புதிய வகை
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ஆன்லைன் மோசடி கும்பல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்யும் நபர்களை குறி வைத்து அவர்களுக்கு போலியான 'லிங்க்' அனுப்புவது, வங்கி கடன் தருவதாக நம்பிக்கை கூறி வாடிக்கையாளரின் விவரங்களை தங்களுடைய இணையத்தில் பதிவு செய்ய வைத்ப்பது, வங்கி கணக்குகளை திருடி பண மோசடி செய்வது, ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்க எண்களை கேட்பது, வெளிநாட்டில் இருந்து பரிசு வருகிறது, உங்கள் செல்போன் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தை கூறி பல வழிகளில் ஆன்லைன் மோசடி செய்து பணத் திருட்டில் ஈடுபட்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் பணத்திருட்டில் ஈடுபடும் கும்பல் கைவரிசை காட்டி வருவகிறது.
"நீங்கள் உடனடியாக பணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, ஆப் மூலம் உடனடியாக பணம் செலுத்துங்கள்," என்று ஒரு குறுஞ்செய்தியை செல்பேசிக்கு அனுப்பி இந்த கும்பல் திருட்டை தொடங்குகின்றனர். இந்த வலையில் சிக்கும் வாடிக்கையாளர் ஏமாற்றம் அடைகிறார்.


மின் கட்டணம் தொடர்பாக 3 வழக்குகள்
இது போன்ற வழக்கு ஒன்று மதுரையிலும் பதிவாகியுள்ளது. இது குறித்து மதுரை சைபர் கிரைம் ஆய்வாளர் செல்வகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மதுரையைச் சேர்ந்த மாணிக்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டிற்கு மின் கட்டணத்தை ஒரு கடையில் இருந்து ஆன்லைன் மூலம் கட்டியுள்ளார். பணம் செலுத்திய சில நிமிடங்களில் அவருடைய மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது 'நீங்கள் கட்டிய மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.
"நீங்கள் செலுத்தி நிலுவையில் உள்ள மின் கட்டணம் மின்துறைக்கு கிடைக்க இந்த ஆப்பை டவுன்லோட் செய்து அந்த ஆப் மூலம் 10 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் நீங்கள் கட்டிய பணம் உடனடியாக மின்சாரத்துறைக்கு வந்து சேரும் என மறுமுனையில் பேசியவர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த நபர் உடனடியாக தொலைபேசி எண்ணில் குறிப்பிடப்பட்ட அந்த ஆப்பை டவுன்லோட் செய்து பத்து ரூபாய் ரீசார்ஜ் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பல் நான்கு முறை எடுத்துள்ளது. ஆனால் இந்த பணம் எடுப்பதற்கு ஓடிபி அல்லது குறுஞ்செய்தி எதுவும் சம்பந்தப்பட்ட நபருக்கு வரவில்லை.
வங்கி கணக்கில் பணம் இல்லாததை அறிந்த அந்த நபர், உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு அவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் உடனடியாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தவில்லை என பணம் மோசடி செய்ததாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தேவையற்ற எஸ்எம்எஸ், வெப்சைட் லிங்க் உள்ளிட்டவற்றுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் ஆன்லைன் மோசடி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக சைபர் கிரைம் போலீசார் பொதுமக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். மக்கள் ஆன்லைன் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக '1930' என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் மோசடி கும்பல் வங்கி கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றார் ஆய்வாளர் செல்வகுமார்.

பட மூலாதாரம், Getty Images
ரிமோட் ஆக்செஸிபிள் அப்ளிகேஷன் என்றால் என்ன?

ரிமோட் ஆக்செஸிபிள் அப்ளிகேஷன் (REMOTE ACCESSIBLE APPLICATION) பதிவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமீபத்தில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் மூலமாகவும் அதிக ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகிறது.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருக்கக்கூடிய 122 ஆப்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மூலம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. செல்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தேவையற்ற ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
பிளே ஸ்டோரில் ஆப்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால் உடனே அருகில் இருக்கக்கூடிய நபர்களிடம் பதிவிறக்கம் செய்ய கூடிய ஆப் பாதுகாப்பானதா என்பதை முழுமையாக சோதனை செய்ய வேண்டும், முதியவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் அருகில் உள்ள நம்பகத்தன்மையான நபர்களிடம் ஆப் குறித்து கேட்டு தெரிந்த பிறகு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்கிறார் மதுரை சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் செல்வகுமார்.


ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?
தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு பயிற்சி அளித்து வரும் சென்னையை சேர்ந்த சைபர் கிரைம் நிபுணர் காளிதாஸிடம் பிபிசி தமிழ் பேசியது.
"மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உடனடியாக அவர்கள் இணைப்பு துண்டிக்கப்படாது. முதலில் அதற்கான நோட்டீஸ் தரப்படும். அதன் பின்னரே இணைப்பு துண்டிக்கப்படும். செல்பேசி அல்லது தொலைபேசி வழியாக எந்த அறிவுறுத்தலும் வராது. தொலைபேசி வாயிலாக அறிவிப்பு வந்தால் உடனடியாக அது தொடர்பான அதிகாரிகளை நேரில் சந்தித்து விவரத்தை வாடிக்கையாளர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.இது மின் துறைக்கு மட்டும்மல்ல வங்கி உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும்," என்கிறார் காளிதாஸ்.
- தேவையற்ற ஆப்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்து அரசு துறை மற்றும் வங்கி வழங்கும் அதிகாரபூர்வமான ஆப்களை மட்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
- பொது மக்கள் ரிமோட் ஆக்செஸிபிள் அப்ளிகேஷனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- இவ்வாறான ஆப்கள் மூலம் உங்களுடைய செல்போன் மற்றும் கணினி ஆகிய இரண்டையும் மற்றவர்கள் உங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தலாம்.
- வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்களுக்கு வரும் வங்கி பண பரிவர்த்தனை ஓடிபி எண்கள் அனைத்தும் இந்த ஆப் மூலம் ஆன்லைன் மோசடி கும்பலுக்கு போகும் வாடிக்கையாளருக்கு வராது.

மாதம் ஒருமுறை கடவுச்சொல்லை மாற்றுங்கள்
சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றின் பாஸ்வோர்டுகளை சேமிக்காமல் ஒவ்வொரு முறையும் டைப் செய்யுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அந்த பாஸ்வேர்டை மாற்ற வேண்டும்.அனைத்திற்கும் ஒரே பாஸ்வேர்ட் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் செல்போன் மற்றும் கணினி இரண்டுக்குமே ஆண்டிவைரஸ் பயன்படுத்தினால் இவ்வாறான பிரச்னைகளை ஓரளவு தவிர்க்கலாம்.
எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வரும் லிங்கை நேரடியாக கிளிக் செய்து அந்த பக்கத்திற்குள் போவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போன் நிறுவனங்கள் செல்போன்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் கொடுக்கும் போது நிச்சயம் அப்டேட் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் இந்த மாதிரியான பிரச்னைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை எது பாதுகாப்பானது அதை மட்டுமே மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். சைபர் கிரைம் போலீசார் பாதுகாப்பற்ற சில ஆப்களை தொடர்ந்து நீக்கி வருவதாக காளிதாஸ் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













