மோசடி வேலைவாய்ப்பு: மியான்மரில் இருந்து தப்பிய 13 தமிழர்கள் தாய்லாந்தில் தவிப்பு

- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
வெளிநாட்டு வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற 13 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர், அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அந்த நாட்டில் இருந்து தப்பித்து தாய்லாந்து திரும்பியபோது அதன் ராணுவத்திடம் பிடிபட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை மீட்க தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு புதன்கிழமை காலையில் கடிதம் எழுதியுள்ளார். அதன் அசல், விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இங்குள்ள தமிழக அதிகாரிகள் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் "மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு முகமைகள் மூலம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்துக்கு அவர்கள் சென்றதாகவும் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல் வருவதாகவும் கடிதத்தில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் சிக்கியவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் அவர்களுடன் தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் தங்களை விரைவாக மீட்க அரசின் உதவியை நாடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசையிடம் உறுதியளித்த அமைச்சர்
இதற்கிடையே, மியான்மரில் சிக்கியுள்ள மேலும் பல இந்தியர்களில் காரைக்காலைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர். அவரை மீட்க அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழசை செளந்தர்ராஜன் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனை மும்பை விமான நிலையத்தில் புதன்கிழமை சந்தித்தபோது இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து அவரிடம் பேசியதாக தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அமைச்சர் முரளிதரன், இந்திய அரசிடம் உள்ள தகவலின்படி மியான்மரில் 54 பேர் சிக்கியுள்ளதாகவும் அதில் 30 பேரை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
13 தமிழர்கள் எங்கு உள்ளனர்?

பட மூலாதாரம், Google
தமிழ்நாடு முதல்வர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் கருத்துக்களின்படி, இந்த தலைவர்கள் குறிப்பிடுவது 'மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காகவே' என தெரிய வருகிறது. ஆனால், மியான்மரில் சட்டவிரோத வேலைக்காக பணியமர்த்தப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 17 இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து ஏற்கெனவே தப்பித்து தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு அவர்களை தாய்லாந்து ராணுவம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது தடுப்பு முகாமில் வைத்திருப்பதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியில், பாதுகாப்பு கருதியும் பிடிபட்ட நபர்களின் எதிர்காலம் கருதியும் அவர்களின் பெயர் மற்றும் படத்தில் தோன்றும் அவர்களின் அடையாளத்தையும் மறைத்து வெளியிடுகிறோம்.
பிபிசி தமிழுக்கு தெரிய வந்துள்ள தகவலின்படி, மியான்மரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் இந்தியர்கள் தற்போதும் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 16 பேர் கொண்ட ஒரு குழுவினர் அந்த நாட்டு ராணுவம் மற்றும் எல்லை காவல் படையின் உதவியுடன் மீட்கப்பட்டு பிறகு மியான்மர் எல்லையில் உள்ள தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப்பகுதியில் விடப்பட்டுள்ளனர்.
அப்படி எல்லை ஆற்றைக் கடந்து தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்துக்கு செல்வதற்காக 20 கி.மீ தூர பாதையை இரவில் கடக்கும் வேளையில்தான், தாய்லாந்தின் ராணுவத்திடம் இந்த 16 பேரும் பிடிபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த குழுவில் 17 பேர் இருப்பதாகவும் அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பிபிசி தமிழ் பேசியது.
அதைத்தொடர்ந்து நீண்ட முயற்சிக்குப் பிறகு மியான்மரில் சிக்கி அங்கிருந்து தப்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 அல்ல, 16 என்று தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் யார், அவர்களின் பெற்றோர் எங்குள்ளனர், அவர்களின் சொந்த ஊர் எது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளன.
அதன்படி, தாய்லாந்தில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள 16 இந்தியர்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் வேலூர், புதுக்கோட்டை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 10 பேர் உள்ளனர். இவர்களுடன் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தலா ஒருவரும் இந்த குழுவில் உள்ளனர்.


தடுப்பு முகாமில் உள்ளவர்கள் வாக்குமூலம்

இந்த நிலையில், தடுப்பு முகாமில் உள்ள சில தமிழர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
முதலில் பேசிய அருண் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "நான் சிவில் இஞ்சினியரிங் படித்துள்ளேன். ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தேன். பிறகு உள்ளூர் முகவர் என்னுடன் இணைக்கப்பட்டார். அவர் மூலம் துபாய்க்கு செல்ல தீர்மானித்தேன். துபாய்க்கு சென்றபோது என்னைப் போல பல இந்தியர்கள் அங்கு வேலைக்காக வந்திருந்தனர். துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் என்ற இடத்தில் ஏராளமான நிறுவனங்கள் வேலைக்காக ஆட்களை தேர்வு செய்து கொண்டிருந்தன. அங்கு சில நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் எங்களைப் போல விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து கொண்டிருந்தது," என்று கூறினார்.
"எங்களை தேர்வு செய்த நிறுவனம், உங்களுக்கு தாய்லாந்தில் உள்ள நிறுவனத்தில்தான் வேலை என்று கூறியது. ஏற்கெனவே சொந்த ஊரில் மிகவும் கடுமையான பொருளாதார சூழலில் வேலைக்கு விண்ணப்பித்து வெளிநாடுவரை வந்து விட்டதால் கிடைத்த வேலையில் சேருவதென்று தீர்மானித்து தாய்லாந்து வேலைக்கு ஒப்புக் கொண்டோம்," என்று அருண் கூறினார்.
"தாய்லாந்து சென்ற பிறகு அங்குள்ள உள்ளூர் முகவர்களிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம். அந்த முகவர்கள் குழுவுக்கு ஒரு பெண் தலைவர் இருந்தார். அவர் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து சுமார் 500 கி.மீ தூரமுள்ள எல்லை பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு வைத்து எங்களுடைய கடவுச்சீட்டு, விசா ஆவணங்கள் அனைத்தையும் அந்த முகவர்கள் வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதை கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும் என கூறினார். அதனால் எங்களுடைய செல்பேசி மற்றும் பிற ஆவணங்களை முகவர்கள் வாங்கிக் கொண்டனர்," என்று அருண் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மின்னணு பொறியியல் பட்டதாரியான பிரேம் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆற்றைக் கடந்த பிறகு நடந்தவற்றை விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"ஆற்றைக் கடந்து மறுநாள் காலையில் எங்களிடம் செல்பேசி ஒப்படைக்கப்பட்டபோது, எங்களுடைய நெட்வொர்க்கை ஆன் செய்தோம். அப்போது நாங்கள் உள்ள இருப்பிடத்தை (லொக்கேஷன்) பார்த்தபோதுதான் நாங்கள் இருப்பது தாய்லாந்து அல்ல, மியான்மர் என்றே தெரிய வந்தது. காலையில் ஒரு கட்டுமான நிலையில் இருந்த பெரிய நிறுவனத்துக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து கொண்டிருந்தனர். லேட்டஸ்ட் ஐபோன்கள், கணிப்பொறிகள் என அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன," என்று பிரேம் குமார் கூறினார்.
"எங்களுக்குள் இருந்தவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள், சிலர் பி.காம், பிபிஏ, டிப்ளோமா போன்ற படிப்பை முடித்தவர்கள் என தெரிந்து கொண்டோம். நாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ப வேலை தருவார்கள் என நினைத்தோம். ஆனால், 'எல்லோருக்குமே ஒரே மாதிரியான வேலைதான்' என்று அந்த தனியார் நிறுவனத்தார் எங்களிடம் கூறினர். அவர்கள் சில வாடிக்கையாளர்களின் தகவல்களை வழங்கினர். அவர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதே உங்களுடைய பணி, சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறினர்," என்கிறார் பிரேம்குமார்.
மியான்மர் நிறுவனம், ஒவ்வொரு ஊழியரும் எத்தனை டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்ததாக இந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட ஊழியர்கள்
முதல் ஒரு வாரத்துக்கு தங்களுக்கு மூன்று வேலை உணவும், நல்ல வசதியும் கொடுத்து உபசரித்ததாகவும் ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உரிய இலக்கை எட்டாதவர்களுக்கு உணவு அளவை குறைத்தும் தரக்குறைவாக நடத்தியும் அடித்தும் துன்புறுத்தினர் என்றும் அந்த இளைஞர்கள் கூறினர். பல நேரங்களில் துப்பாக்கி முனையில் இலக்குகளை எட்ட தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த இளைஞர்களுள் சிலர், பணி நேரத்துக்கு பிறகு வெளியே சென்று வந்த வேளையில், உள்ளூர் ராணுவ அதிகாரியின் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் தங்களுடைய நிலை குறித்து கூறியுள்ளனர். இந்த தகவல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தெரியவரவே அதன் நிர்வாகிகள் 16 பேரின் ஆவணங்களை பறித்துக் கொண்டு வேலையைத் தொடரும்படி துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தியதாக தமிழர்கள் கூறினர்.
சுமார் ஒரு மாதமாக பணியாற்றிய இவர்கள், சம்பளம் வாங்க வேண்டிய நேரத்தில், இந்த இளைஞர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ராணுவமும், எல்லை படையினரும் சோதனை நடத்தி 16 பேரை மீட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காமல் மீட்கப்பட்ட அனைவரையும் தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப்பகுதிக்கே கொண்டு வந்து மியான்மர் ராணுவத்தினர் விட்டுச் சென்றுள்ளனர்.

முன்பே எச்சரித்த இந்திய வெளியுறவுத்துறை
கடந்த சில மாதங்களுக்கு முன்பே மியான்மரில் சட்டவிரோத பணிகளுக்காக இந்தியர்களை இலக்கு வைத்து சில வெளிநாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வலையை வீசி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை எச்சரித்ததாக அதன் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை ட்விட்டரில் ஒரு இடுகையை வெளியிட்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
மியான்மரின் யாங்கூனில் உள்ள இந்திய தூதரகம் கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்திய குடிமக்களுக்காக ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது.
அதில், "மியன்மரின் தொலைதூர கிழக்கு எல்லைப் பகுதிகளில் டிஜிட்டல் மோசடி/ஃபோர்ஜ் கிரிப்டோ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சில ஐடி நிறுவனங்கள், பல்வேறு இடங்களிலிருந்து இந்திய தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்வதை தூதரகம் சமீப காலமாக கவனித்து வருகிரது. தகவல் தொழில்நுட்பத் துறையில் சாத்தியமான வேலை வாய்ப்புகள் என்ற சாக்குப்போக்கில் அவர்களின் ஆட்சேர்ப்பு முகவர்கள் அப்படி செய்கிறார்கள்."
"இந்தியத் தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் "சட்டவிரோதமாக" மியான்மருக்குள் நுழைய வசதி செய்யப்படுவது அவர்களின் "சிக்கலுக்கு" வழிவகுக்கிறது," என்று அந்த அறிவுறுத்தலில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், INDIAN EMBASSY, YANGON
"இந்த தகவல்களை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், ஆட்சேர்ப்பு முகவர்களின் செயல் பின்புலத்தை சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எந்த வாய்ப்பையும் ஏற்கும் முன்னர் தேவையான அனைத்து தகவல்களையும் (வேலை விவரம், நிறுவன விவரங்கள், இடம், வேலைவாய்ப்பு ஒப்பந்தம் போன்றவை) சரியாக கேட்டு அறிந்து வைத்திருப்பது நல்லது," என்று அந்த அறிவுறுத்தலில் மேலும் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழ் மேலும் விசாரித்தபோது, மோசடி நபர்கள் அல்லது முகவர்களால் 'வெளிநாட்டு வேலைவாய்ப்பு' என்ற பெயரில் இந்திய குடிமக்கள் நூற்றுக்கணக்கில் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. அவ்வாறு ஏமாற்றப்படுபவர்கள் மியான்மரின் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த பகுதி முழுமையாக மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அங்கு சில நேரங்களில் ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் இருக்கும் என்றும் ராணுவமும் உள்ளூர் போலீஸாரும் அரிதாகவே அங்கு வந்து செல்வர் என்றும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, யாங்கூனில் உள்ள இந்திய தூதரகம் மியாவாடியில் உள்ள இந்தியர்களை மீட்க மியான்மர் அரசுடன் மாதக்கணக்கில் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அண்டை நாடுகளில் மியான்மரும் ஒன்று. அந்த நாடு, இந்திய வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்டவற்றுடன் 1,640 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

தாய்லாந்து ராணுவம் கைது நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆற்றுப்பகுதியை கடந்துதான் ஒரு மாதத்துக்கு முன்பு, இந்த 16 பேரும் மியான்மர் நிறுவன பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடவுச்சீட்டு, கையில் வைத்துள்ள உள்ளூர் பணத்துடன் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் செல்ல இவர்கள் சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும்.
அந்த வகையில், ஒரே குழுவாக இந்த 16 பேரும் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு சென்றபோது, தாய்லாந்து ராணுவம் இவர்களை சுற்றி வளைத்து சட்டவிரோதமாக மியான்மரில் இருந்து நாட்டுக்குள் வந்ததாகக் கூறி கைது செய்ததாக தமிழக இளைஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால், "நாங்கள் சட்டவிரோதமாக வரவில்லை. துபாயில் இருந்து தாய்லாந்துக்கு உரிய விசாவில் வந்தோம். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மருக்கு சில நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மீண்டும் தாய்லாந்துக்கே தப்பி வந்தோம் என அந்நாட்டு ராணுவத்தினரிடம் விளக்கினோம்," என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் பிறகு குடிவரவுத்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். பிறகு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியர்களிடம், உங்கள் மீதான விசாரணை மீது முடிவெடுக்கப்படும்வரை தடுத்து வைக்கப்படுவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிடிபட்ட ஒவ்வொருவரிடமும் தாய்லாந்து காவல்துறை புலனாய்வாளர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அதன் பிறகு இவர்களுடைய புகைப்படம், கைரேகை போன்றவற்றை பதிவு செய்த தாய்லாந்து காவல்துறை, எல்லை தாண்டிச் சென்ற குற்றத்துக்காக 16 பேரும் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால், அந்த தொகையை ரொக்கமாக செலுத்த அவர்களால் இயலவில்லை. இதனால், தாய்லாந்தில் உள்ள தடுப்பு முகாமுக்கு இந்த 16 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் விளையாட்டரங்கு போன்ற அந்த தடுப்பு முகாமில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் வந்தவர்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட வெளிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வைக்கப்பட்டுள்ளனர்.


"இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை"

பட மூலாதாரம், Indian Embassy, Bangkok
அங்கிருந்தபடி 16 இந்தியர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர் மற்றும் அதிகாரிகளை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் சுகாதாரமற்ற சூழலில் தாங்கள் வசிப்பதாகவும் விரைவாக தங்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அந்த மின்னஞ்சலில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இப்படியாக கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, மியான்மரில் இருந்து தப்பி வந்த பிறகு கடந்த 36 நாட்களாக இந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தாய்லாந்து காவல்துறை கட்டுப்பாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மியான்மர் நிறுவனத்தில் சட்டவிரோத பணிகளில் இன்னும் பல இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக தடுப்பு முகாம்களில் உள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய சூழலில் பிடிபட்டுள்ள இந்தியர்கள் உரிய ஆவணமில்லாத காரணத்தால் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை உயரதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இந்தியர்களை மீட்க உயரிய அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
குடும்பத்தினர் உருக்கம்

இந்த நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ள தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் தெரியாமல் தமிழ்நாட்டில் வாழும் அவர்களின் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர். வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் தமது சகோதரரை உள்ளூர் முகவர்கள் சிலர் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவறான நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாக சென்னையில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ஆறு முகவர்களின் விவரங்களை குறிப்பிட்டு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அவர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தமது சகோதரனை கண்டுபிடித்து மீட்க உதவிடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜகுபர் அலியும் தமது மகனை மீட்க உதவிடும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி, தென்காசி, ஊட்டியில் உள்ள தமிழ்நாட்டு இளைஞர்களின் பெற்றோரையும் தொடர்பு கொண்டோம். கடைசியாக தங்களுடன் பிள்ளைகள் பேசி ஒரு வாரமாகிறது. அவர்களை விரைவாக மீட்க தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
இந்தியர்கள் தாய்லாந்தில் சிக்கியுள்ளது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளிடம் பேசினோம்.
"இந்த விவகாரத்தை பிரத்யேகமாக கவனிக்க தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறையுடனும் தமிழ்நாடு அரசுடனும் ஒருங்கிணைந்து அவர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













