திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ரூ.70 லட்சம் பறிபோனது: 4 இடங்களில் ஒரே மாதிரி நடந்தது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் நடந்த திருட்டில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை போயுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
"குறிப்பிட்ட சில ஏடிஎம் இயந்திரங்களைக் குறி வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளது. இதை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்த்து நடத்தியிருக்கலாம்," என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (2023 பிப்ரவரி 12) அதிகாலை நான்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்ததாக போலீசுக்குத் தகவல் வந்தது. இது தொடர்பாக புலனாய்வு செய்ய மொத்தம் 8 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை பகுதி, போளூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய மூன்று இடங்களில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம், கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒன் இந்தியா ஏடிஎம் ஆகிய இடங்களில்தான் இந்த கொள்ளை சம்பவம் ஒன்றுபோல அரங்கேறியுள்ளது. எல்லா இடங்களிலும் பணம் கொள்ளை போனதுடன், இயந்திரங்களும் எரிந்து போயிருந்தன.
இந்த ஏடிஎம் மையங்களில் இருந்து கரும்புகை வெளியேறியதைப் பார்த்தே பொதுமக்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்தது. அதன் பிறகு அவர்கள், அதன் பிறகு அவர்கள், போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். நான்கு இடங்களுக்கும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர்.
திருட்டு நடைபெற்ற இடங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவாக கொள்ளை?
திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் ஒன் இந்தியா வங்கி கிளை சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதே போல போளூர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே, ஒரே நபர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டாரா அல்லது பல்வேறு குழுக்கள் மூலம் இந்த சம்பவம் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அதேபோல கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த கொள்ளை தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேறிய நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அமைக்கப்பட்ட தனிப்படைகளில் சில ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு சென்றுள்ளன.
வெல்டிங் முறையில் திருட்டு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "குறிப்பிட்ட சில ஏடிஎம்களை குறி வைத்து இந்த திருட்டை நடத்தியுள்ளனர். மேலும் இதை வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி செய்துள்ளனர். தற்போது விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எங்களுக்கு சில தரவுகள் கிடைத்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து புலனாய்வு செய்துவருகிறோம்.
இதில் எத்தனை நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதியாக தற்போது கூற இயலாது. ஆனால் இந்த திருட்டினை குழுவாகவே செய்துள்ளனர் என்பது தெரிகிறது," என்றார் அவர்.
பாதுகாப்பு கோளாறு குறித்து விசாரணை செய்து வருவதாகவும், கண்ணன் கூறியுள்ளார்.
"இந்த ஏடிஎம் இயந்திரங்களின் உள் அமைப்பு, செயல்படும் முறை ஆகியவற்றை நன்கு அறிந்த ஒருவர் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும். மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதோ முறையில் ஏடிஎம் திருட்டுகள் நடந்துள்ளன" என்றார் அவர்.

"கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஏடிஎம் கொள்ளையை வெற்றிகரமாக புலனாய்வுசெய்தோம். அதிலும் சில திருவண்ணாமலை தொடர்புகள் இருந்தன. சென்னை, திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடங்களிலும் கொள்ளை நடந்த முறையில் வேறுபாடுகள் உள்ளன. சில ஒற்றுமைகளும் உள்ளன. இரண்டையும் நாங்கள் கையாளும் முறையிலும் வேறுபாடு உள்ளது," என்று ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













