சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

பட மூலாதாரம், Getty Images
(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(03/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)
சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குஜராத் மாநில அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் கே.ஜி.வன்சாரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவில், "யூதர்களின் ஹீப்ரு மொழி வழக்கத்தில் இருந்து அழிந்துவிட்டது. இருப்பினும் இஸ்ரேல் நாட்டில் கடந்த 1948ஆம் ஆண்டில் ஹீப்ரு மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது.
இதேபோல, உலகின் மிக தொன்மையான சமஸ்கிருதத்தையும் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். சமஸ்கிருதத்தின் எழுத்து, உச்சரிப்பு ஆகியவை அறிவியல்பூர்வமானவை. சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வதால் குழந்தைகளின் மனப்பாடத் திறன் அதிகரிக்கும்," என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பல்வேறு மொழிகளின் தாயாக சமஸ்கிருதம் போற்றப்படுகிறது. சமஸ்கிருத சொற்கள் பல்வேறு மொழிகளில் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இந்தியாவில் இதுவரை சமஸ்கிருதம் தேசிய மொழியாக அறிவிக்கப்படாதது வருத்தமளிக்கிறது," என்று வாதிட்டார்.
இறுதியில் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "உங்களுடைய வாதம், கருத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க முடியும். சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க அரசமைப்பு சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. எனவே நாடாளுமன்றத்தில் விவாதிப்பதுதான் பொருத்தமானது. இது தொடர்பாக மத்திய அரசிடம் மனுதாரர் முறையிடலாம். எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்," என்று உத்தரவிட்டனர்.
பொய்ச் செய்திகளை பரப்பியதாக பதிவான வழக்குகளில் மேற்கு வங்கம் முதலிடம்
நாட்டில் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், "மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. அப்போதி திரிணமூல் காங்கிரஸ், பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் இணைய பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன.

பட மூலாதாரம், Getty Images
அப்போது, 'மக்களிடம் சென்றடைவதற்காக ஒழுக்கமற்ற பொய்ப் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டதே பொய்ச் செய்திகள் அதிகம் பரவியதற்குக் காரணம். இதைத் தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை' என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறை தலைவர் சாத்தோபாத்யாய தெரிவித்தார்
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவில் 34 வழக்குகளும் உத்தர பிரதேசத்தில் 24 வழக்குகளும் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் பதிவான 179 வழக்குகளில் மேற்கு வங்கத்தில் மட்டும் 24 சதவீத வழக்குகள் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் தொழில்நுட்பம் - உருவாக்கும் பிஎஸ்எஃப்
இந்திய எல்லை பாதுகாப்புப் படை, கலவரங்களைக் கட்டுப்படுத்த டிரோன் மூலம் செயல்படுத்தக்கூடிய கண்ணீர் புகை குண்டுகளை உருவாக்குவதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
குவாலியரில் உள்ள தேகன்பூரில் அமைந்திருக்கும் அதன் கண்ணீர் புகை பிரிவு, ஆளில்லா விமானங்கள் மூலமாக கண்ணீர் குண்டுகளை வீசுவதற்கான 'டிரோன் டியர் ஸ்மோக் லாஞ்சரை' உருவாக்கியுள்ளது என்று எல்லை பாதுகாப்புப் படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சட்டம்-ஒழுங்கு மேலாண்மையில் திறன்மிக்கதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஒரே நேரத்தில் பல கையெறி குண்டுகளை துல்லியமான இடங்களில் வீசுவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்,
"ஏவப்படும் கையெறி குண்டுகளால் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இதனால் குறைவாக இருக்கும். துப்பாக்கியிலிருந்து கைமுறையாகச் சுடுவதைப் போலன்றி, பயனர் ஒரு துல்லியமான இடத்தில் கையெறி குண்டுகளை வீச முடியும்," என்று எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.
கண்ணீர் புகை பிரிவின் 42வது ஆண்டு நிர்வாகக் குழு கூட்டம் எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ் குமார் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டம்-ஒழுங்கு நிலைமையை நிர்வகிப்பதற்காக கண்ணீர் புகை பிரிவு இந்தியாவிலுள்ள அனைத்து போலீஸ் படைகளுக்கும் கலவர எதிர்ப்பு கண்ணீர் புகை குண்டுகளை திறம்பட தயாரித்து வழங்கி வருவதாகப் பேசிய பங்கஜ் குமார் சிங், கண்ணீர் புகை பிரிவால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வெடிமருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது, வெளிநாட்டு ஆயுதங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
"கண்ணீர் புகை பிரிவு வெடிமருந்துகளைச் சரியான நேரத்தில், திறம்படப் பயன்படுத்துவதால் மதிப்புமிக்க மனித உயிர்கள், கோடிக்கணக்கான மதிப்புள்ள பொதுச் சொத்துகள் காப்பாற்ற்றப்பட்டுள்ளன," என்று எல்லை பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













