கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பினார்: போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில் இருந்தே அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் தாய்நாடு திரும்பினார்.
முதலில் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்று, அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்தபடியே பதவி விலகியபிறகு, தாய்லாந்து சென்றிருந்த கோட்டாபய தற்போது தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கிறார்.
தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட அவர் சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்து சேர்ந்தார். சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான பொது விமானத்தில் அவர் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு நள்ளிரவு வந்தார். சில அரசியல் தலைவர்கள் அவரை வரவேற்கச் சென்றிருந்ததாகத் தெரிகிறது.


முன்பு என்ன நடந்தது?
பொருளாதார நெருக்கடி இலங்கையை நெருக்கத் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி நுகேகொடை - மிரிஹான பகுதியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வீட்டை சுற்றி வளைத்த மக்கள், ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
இதையடுத்து, ஏப்ரல் மாதம் 9ம் தேதி கொழும்பு காலி முகத்திடலில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் தொடங்கியது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் சுமார் 4 மாதங்களை கடந்த நிலையில் ஜுலை மாதம் 9ம் தேதி கொழும்பு நகருக்குள் லட்சக்கணக்கான மக்கள் நுழைந்தனர்.


இவ்வாறு கொழும்பு நகருக்குள் வந்த லட்சக்கணக்காக மக்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லம் ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.
இதையடுத்து, கடந்த ஜுலை மாதம் 13ம் தேதி, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் மாலத்தீவு சென்றனர்.
அதன்பின்னர், மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனது விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், படிப்படியாக போராட்டம் வலுவிழந்த நிலையில், தாம் காலி முகத்திடல் போராட்டத்தை கைவிடுவதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தார்கள்.
எனினும், அரச எதிர்ப்பு போராட்டங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
மீண்டும் போராட்டம் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினால், மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுமா என்பது தொடர்பில், பிபிசி தமிழ், போராட்டக்காரர்களை தொடர்புக் கொண்டு வினவியது.
நாங்கள் அவரை ''நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை. கோட்டா வெளியில் போவதை எல்லாரும் தடுத்தார்கள். அவர் வருவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை" என போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த், பிபிசி தமிழிடம் கூறினார்.
'' அவரை ஒருநாளும் நாட்டை விட்டு வெளியில் போகுமாறு சொல்லி போராட்டம் செய்யவில்லை. நாட்டை விட்டு தப்பியோடியதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால், கோட்டா திரும்ப வந்து, பதவிகளை எடுத்தால், அதற்கான எதிர்ப்புகளை தெரிவிப்போம். அதுதான் ஜனநாயக முறை. அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக தான் செய்ய வேண்டும். கோட்டா வெளியில் போவதை எல்லாரும் தடுத்தார்கள். நாட்டிற்கு வருவது பரவாயில்லை.

இதையும் படிங்க...

அவர் வந்த பிறகு, வழக்கறிஞர்களின் ஊடாக, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குப் போட வேண்டும். அதைவிட்டு, அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. ஏனென்றால், அவர் சாதாரண மனிதராக தான் உள்ளே வருகின்றார். ஜனாதிபதியாக இருந்தபோது செய்த தவறுகளுக்கு எல்லாம் இனி சட்டரீதியாக பார்த்துக்கொள்வோம்" என ரஜீவ்காந்த் கருத்து தெரிவித்தார்.
''ஜனாதிபதி என்ற விதத்தில், அவர் செய்த ஊழலுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினார்கள். தனிப்பட்ட முறையில் அவருடன் எமக்கு கோபம் கிடையாது," என போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்தர பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை, கோட்டாபய, நாட்டிற்குள் வருவதற்கு எதிர்ப்பு கிடையாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தது.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














