நரேந்திர மோதி அமைச்சரவையில் இருந்து நக்வி, ஆர்சிபி சிங் விலகல் - ஏன், என்ன நடந்தது?

பட மூலாதாரம், PIB INDIA
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்சிபி சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ஆம் தேதி நிறைவடைகிறது.
மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் மத்திய அமைச்சர்கள் இருவர் எம்.பி பதவிக்காலம் நிறைவடையும்போது மீண்டும் அது தொடர வாய்ப்பளிக்கப்படாமல் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்தார் அப்பாஸ் நக்விக்கும் ஆர்சிபி சிங்குக்கும் பிரதமர் மோதி பாராட்டு தெரிவித்தார்.
வழக்கமாக, மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்தால் அவரை பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இருந்தோ வேறு மாநிலத்தில் இருந்தோ உறுப்பினராக தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்.
நாடாளுமன்ற விதிகளின்படி, எம்.பி பதவிக்காலம் முடிந்து விட்டாலோ தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக அமைச்சராகவோ ஒருவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டால் அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் மக்களவையில் இருந்தோ மாநிலங்களவையில் இருந்தோ உறுப்பினராக தேர்வாகலாம்.
ஆனால், இம்முறை முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங்கின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதை அறிந்தும் அவர்கள் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு தரப்படுமா என்பதை பாஜக மேலிடம் தெளிவுபடுத்தவில்லை.
நட்டாவுடன் சந்திப்பு

பட மூலாதாரம், ANI
முன்னதாக, புதின்கிழமை நண்பகலில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை முக்தார் அப்பாஸ் நக்வி சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து பல பாஜக தலைவர்கள் மாநிலங்களவைக்குத் தேர்வானார்கள். ஆனால், முக்தர் அப்பாஸ் நக்விக்கு பாஜக மேலிடமும் ஆர்சிபி சிங்குக்கு அவர் சார்ந்த ஐக்கிய ஜனதா தளம் தலைமையும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கவில்லை.பிகாரில் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வந்த ஆர்சிபி சிங், கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி நரேந்திர மோதி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது அமைச்சராகப் பதவியேற்றார். சரியாக ஒரே ஆண்டில் அவர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஜூலை 7ம் தேதி முக்தார் அப்பாஸ் நக்வியின் எம்பி பதவிக்காலம் நிறைவடைந்ததைப் போலவே, அவருக்கு முன்னதாக, ஜூலை 4ஆம் தேதி சையத் ஜாபர் இஸ்லாமின் பதவிக்காலமும், ஜூன் 29ஆம் தேதி எம்.ஜே. அக்பரின் எம்.பி பதவிக்காலமும் முடிவுக்கு வந்தன. அதன் பிறகு மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு, முஸ்லிம் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவையில் ஆளும் கட்சிக்கு 301 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஆவாரா நக்வி?

பட மூலாதாரம், ANI
இதற்கிடையே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஜூலை 5ஆம் தேதி முறைப்படி வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19ஆம் தேதியாகும். வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 22ஆம் தேதி. போட்டி இருந்தால் ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஏற்கெனவே ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலையொட்டி பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள ஆளும் கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்மூ கூட்டணி கட்சித் தலைவர்களை மாநில வாரியாக சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸில் இருந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை தங்களுடைய வேட்பாளராக களமிறக்கியுள்ளன. அவரும் மாநிலந்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை அக்கட்சி மேலிடம் ஜூலை 7ஆம் தேதி அறிவிக்கலாம் என்ற தகவல் டெல்லி வட்டாரங்களில் உள்ளது.
தற்போது முக்தார் அப்பாஸ் நக்வி பதவி விலகியிருப்பதைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் முக்தார் அப்பாஸ் நக்விக்கு உள்ளது. மாநிலங்களவை மற்றும் மக்களவையிலும் பணியாற்றிய நீண்ட அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால், அவரது பெயர் பாஜக மேலிடத்தால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












