குடியரசு தலைவர் தேர்தல்: "ஜனநாயகம் செத்துப் போக விட மாட்டேன்" - யஷ்வந்த் சின்ஹா

இந்திய குடியரசு தலைவர் தேர்தல்

பட மூலாதாரம், CONGRESS

படக்குறிப்பு, டெல்லியில் மாநிலங்களவை செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ​​இன்று தமது ஆதரவு தலைவர்களின் முன்னிலையில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நம் நாட்டில் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகிறது. இது ஜனநாயகத்தின் மதிப்புகளை பாதுகாப்பதற்கான தேர்தல். அது செத்துப் போக விடமாட்டேன்," என்று தெரிவித்தார்.

யஷ்வந்த் சின்ஹா ​​திங்கள்கிழமை நண்பகலில் சுமார் 16 கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

84 வயதாகும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, இன்று நண்பகலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சின்ஹா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தெலங்கானா அமைச்சரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மூத்த தலைவரான கே.டி. ராமாராவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மிசா பார்தி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேம்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முகமது பஷீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காங்கிரஸ்

பட மூலாதாரம், CONGRESS

இரண்டு முக்கிய எதிர்கட்சிகளான ஆம் ஆத்மி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளை வேட்பு மனு நிகழ்வுக்கு அனுப்பவில்லை.

இரண்டு பெரிய பாஜக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் ஆகியவை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பழங்குடியின வேட்பாளர் திரெளபதி முர்மூவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

திங்கள்கிழமை நண்பகலில் தேர்தல் பொறுப்பு அதிகாரியான மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் பிசி மோடியிடம் ​​நான்கு செட் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறோம். நிச்சயமாக நாங்கள் தனி நபரை ஆதரிக்கிறோம், ஆனால் உண்மையான சண்டை இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே உள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் ஒன்று - கோபம், வெறுப்பு மற்றொன்று," என்று கூறினார்.

குடியரசு தலைவர் தேர்தல்

பட மூலாதாரம், CONGRESS

"இது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான வேட்பாளர் போட்டி கிடையாது. இது இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம்," என்று குடியரசு தலைவர் தேர்தல் குறித்து பேசுகையில் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் தலைவரை குடியரசு தலைவர் வேட்பாளராக ஆளும் கூட்டணி நிறுத்தியுள்ளது. ஆனால், ஒரு சமூகத்தின் ஒற்றை நபரை உயர் பதவிக்கு அடையாளமாக நிறுத்துவதால் மட்டும் அந்த சமுதாயம் முன்னேறி விடாது. நம் நாடு ஏற்கெனவே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடியரசு தலைவரை சந்தித்து வருகிறது. மேலும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடியரசு தலைவர் வந்தால் அது நாட்டுக்கு பேரழிவாகப் போய் விடும்," என்று கூறினார்.

குடியரசு தலைவர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், நலிவடைந்த அனைத்து சமூகங்களின் மேம்பாட்டுக்காக உழைப்பேன் என்றும் அரசு நிர்வாகம் சிறந்த முறையில் நடப்பதை உறுதிப்படுத்துவேன் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

"எதிர்கட்சிகள் ஒன்று கூடி என்னை வேட்பாளராக தேர்வு செய்துள்ளன. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் 4வது தேர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் நான் 10வது இடத்தில் இருந்தாலும் எனது தேர்வை ஏற்றுக்கொண்டிருப்பேன். காரணம் இது ஜனநாயகத்தைக் காப்பதற்கான பெரிய போர்," என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

அரசியலமைப்பில் குடியரசு தலைவர் பதவிக்கு என சில பொறுப்புகள் உள்ளன. எல்லாம் சரியாக இருப்பதை உறுதிப்படுத்துவது அந்தப் பதவி வகிப்பவரின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

யஷ்வந்த் சின்ஹாவின் எதிர்கட்சிகளின் பொதுவான வேட்பாளராக தேர்வு செய்த கூட்டத்தில், அந்தத் தேர்வை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரித்தது. ஆனால், வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் அந்தக் கட்சி தமது பிரதிநிதியை அனுப்பவில்லை. இதேபோல, ஒவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் அதன் பிரதிநிதியை அனுப்பவில்லை.

இது குறித்து யஷ்வந்த் சின்ஹாவிடம் கேட்டதற்கு, ஒவைஸியை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் தமக்கு முழு ஆதரவு உண்டு என உறுதியளித்துள்ளார் என்று பதிலளித்தார்.

குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை கேரளாவில் இருந்து தொடங்கப் போவதாக அவர் கூறினார்.

கேரளாவில் 140 எம்எல்ஏக்கள் மற்றும் 29 எம்பிக்களின் ஆதரவை அவர் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ​​செவ்வாய்க்கிழமை கேரளாவுக்குச் செல்லும் சின்ஹா அடுத்த நாள் தென் மாநிலத்திலிருந்து தமது பிரசாரத்தைத் தொடங்குகிறார். கேரளாவைத் தொடர்ந்து அவர் வியாழக்கிழமை தமிழ்நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: