மகாராஷ்டிரா அரசியல்: நரேந்திர மோதி, அமித் ஷா அடுத்து சாதிக்க விரும்புவது என்ன?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி நிருபர்
2019ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்து, இரண்டு வசனங்கள் அம்மாநில அரசியலில் மிகவும் பிரபலமாக உள்ளன -
முதலாவது: 'முதல்வர் சிவசேனையைச் சேர்ந்தவராகவே இருப்பார்.'
இரண்டாவது: 'நான் கடலை போல மீண்டும் வருவேன்' என்ற ஃபட்னவிஸின் சத்தியம்.
2022இல், இவை இரண்டும் உண்மையாகியுள்ளன. ஆனால் ஒரு விதிவிலக்கு. இம்முறை ஃபட்னவிஸ்தான் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறார். முன்பு முதல்வராக இருந்த அவர் இப்போது துணை முதல்வராக குறைந்த பதவியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
அவரது இந்த 'பதவிக் குறைவு இருக்கை'தான் தற்போது மகாராஷ்டிர அரசியல் ஆய்வாளர்களால் வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது.
சிலர் இதை தேவேந்திர ஃபட்னவிசின் நிர்ப்பந்தம் என்றும், சிலர் மத்திய பாஜகவின் 2024க்கான ஆயத்தமாகவும் பார்க்கிறார்கள், வேறு சிலரோ இதை முதல்வர் ஏக்நாத் ண்டேவுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்க பாஜக விரும்பவில்லை என்பதாக கருதுகிறார்கள்.
2019இல் இதைச் செய்திருந்தால், உத்தவ் தாக்கரேவுடன் பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஃபார்முலாவை பாஜக ஏற்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பும் விமர்சகர்களும் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
மொத்தத்தில், மகாராஷ்டிராவில் பாஜக சாதித்தது என்ன?
அதிக இடங்களைப் பெற்றும்கூட, பிகாருக்கு அடுத்தபடியாக, கூட்டணியில் 'சகோதர' பாணியில் பாஜக செயல்படுவது மகாராஷ்டிராவில்தான்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் அபய் தேஷ்பாண்டே, இதன்மூலம் பாஜக ஒரே நேரத்தில் பல செய்திகளைக் கொடுக்க முயற்சிப்பதாகக் கருதுகிறார்.
"முதல் செய்தி - சமூகப் பொறியியல். மகாராஷ்டிராவில் மராட்டியர்கள் 30%. பாஜக ஐந்து ஆண்டுகள் பிராமண முகத்துடன் உழைத்தது. ஆனால் எதிர்கட்சி, குறிப்பாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மராட்டிய இடஒதுக்கீடு பிரச்னையில் அவர்களை எப்போதும் காலை வாரிவிட்டது. அந்த வகையில் தற்போது, ஒரு மராட்டியரை முதலமைச்சராக ஆக்கியுள்ளது பாஜக வகுத்த வியூகத்தின் ஒரு பகுதிதான்.
இதன் பொருள் பாஜகவுக்குத் தம்மிடம் 'மராட்டிய முகம்' இல்லை என்பதல்ல. சிவசேனையின் மராட்டிய முகத்தை முன்னிறுத்தி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளது அக்கட்சி.

பட மூலாதாரம், ANI
உத்தவ் தாக்கரேவை வலுவிழக்கச் செய்யும் முயற்சி
ஷிண்டேவை முதலமைச்சராக்குவதன் மூலம், உத்தவ் தலைமையிலான சிவசேனையை மேலும் பலவீனப்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று மாநிலத்தின் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் விஜய் சோர்மோர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"ஒவ்வொரு மாநிலத்திலும், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து, படிப்படியாக பிராந்திய கட்சியின் அடித்தளத்தை அகற்றுவதுதான் மத்தியிலுள்ள பாஜகவின் வியூகம். அதே உத்தியின் கீழ், உத்தவ்வின் சிவசேனை கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டேவை முதலில் பிரித்தது. அவரை முதலமைச்சராக்குவதன் மூலம், உத்தவ் தாக்கரேவிடமிருந்து மீதமுள்ள சிவசேனை தொண்டர்களையும் ஈர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஷிண்டே துணை முதல்வராக இருந்திருந்தால் இதைச் செய்வது சற்று கடினமாக இருந்திருக்கும். ஷிண்டேவை முதல்வராக்கி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனையை வலுவிழக்கச் செய்ய, 'மராட்டியர்' என்ற முகத்தை பயன்படுத்தியுள்ளது பாஜக.
விரைவில் நடைபெறவிருக்கும் பி.எம்.சி தேர்தலில் பலவீனமான சிவசேனைவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக விரும்புகிறது. இதுதான் அவர்களின் உடனடி இலக்கு" என்கிறார் விஜய் சோர்மோர்.

பட மூலாதாரம், Getty Images
2024-க்கான இலக்கு
பா.ஜ.க.வின் நீண்ட கால இலக்கு, 2024 மக்களவை தேர்தல். இந்தியாவின் பொருளாதார தலைநகராக விளங்கும் மகாராஷ்டிராவில் மொத்தம் 48 எம்.பி.க்கள் உள்ளனர்.
இது குறித்து பேசிய விஜய் சோர்மோர், "சிவசேனைவுக்கு முதல்வர் பதவி வழங்குவதன் மூலம், 2024ஆம் ஆண்டுக்கும் மீதமுள்ள சிவசேனை தொண்டர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுக்க பாஜக விரும்புகிறது. 2024இல் சிவசேனையும் பாஜகவும் இணைந்து போராடினால், முடிவுகள் சாதகமாக இருக்கும் என்பது பாஜகவுக்குத் தெரியும். ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு சிவசேனை, என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டால் முடிவுகள் வேறுவிதமாக இருக்கும். இந்த பயம் பாஜகவை ஆட்டிப்படைக்கிறது," என்கிறார்.
இதனால் உத்தவ் தாக்கரேவை பாஜக குறிவைக்கிறது என்பது இவரது பார்வை.
அது சரி... சிவசேனை கட்சி யாரிடம்? - இந்தக் கேள்வி இன்னும் நீடிக்கிறது.
அபய் தேஷ்பாண்டே, மகாராஷ்டிராவில் உள்ள அரசியல் சூழ்நிலை கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து வேறுபட்டது என்ற விஜய் சோர்மோர் கருத்தை ஆமோதிக்கிறார்.
மத்தியப் பிரதேசம், கர்நாடகாவைப் போல எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டு மீண்டும் வெற்றி பெறுவது சற்று கடினமாக இருந்தது. மேலும், 2024ல் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டால், பாஜகவின் வாக்கு சதவீதமும் கணிசமாகக் குறையும் அபாயம் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2019-ல் சிவசேனைவிடமிருந்து விலகியது ஏன்?
சிவசேனைவுக்குத் தான் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்றால், இதை 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்த பிறகே செய்திருக்கலாமே. இரண்டரை ஆண்டுகள் கழித்து, பதவியை விட்டுக்கொடுக்க பாஜகவிற்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து அபய் தேஷ்பாண்டே கூறுகையில், "அப்போது அரசியல் சூழ்நிலையை பாஜகவால் சரியாக மதிப்பிட முடியவில்லை. சிவசேனை, என்சிபி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, இத்தனை காலம் ஆட்சி செய்யும் என்று அவர்கள் கணிக்கவில்லை. உத்தவ் தாக்கரேவின் கடுமையான அணுகுமுறை விரைவில் தணிந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு கட்சி முதல்வர் என்ற கோரிக்கையை அவர் கைவிட்டுவிடுவார் என்று பாஜக எதிர்பார்த்தது. இதுமட்டுமின்றி, மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது.
ஆனால் பின்னர், உத்தவ் தாக்கரே கூட்டணி ஆட்சியை நடத்துவதில் வெற்றி பெற்ற போது, பாஜக தனது வியூகத்தை மாற்றியது. பிஜேபி தலைவர்கள் முதலில் உத்தவ் அரசின் ஊழலை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் அவரது கட்சியில் உள்ள கிளர்ச்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து, கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களை உடைத்து பின்னர் புதிய அரசாங்கத்தை அமைத்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆட்சி வெறி பாஜகவுக்கு இல்லை
முதல்வர் பதவி ஏற்க காத்திருந்த வாய்ப்பை மறுத்து விட்டு, 'துணை முதல்வர்' பதவியை ஏற்றதன் மூலம், 'அதிகாரப் பசி இல்லை' என்ற நான்காவது செய்தியைக் கொடுக்க முயற்சித்துள்ளது பாஜக.
கடந்த வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது ஏக்நாத் ஷிண்டே ஃபட்னவிஸ் மற்றும் பாஜகவை பாராட்டினார், "ஃபட்னவிஸ் தனது பெரிய மனதைக் காட்டியுள்ளார். பெரிய கட்சியாக இருந்தாலும் பாஜக எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம்," என்று கூறினார்.
ஜே.பி. நட்டாவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "தேவேந்திர ஃபட்னவிஸ், வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியதன் மூலம் பாஜகவுக்கு அதிகாரப் பசி இல்லை என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாஜகவின் மத்திய தலைமை முடிவு செய்துள்ளதால், அவரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்க வேண்டும் என்று மத்திய தலைமை கூறியுள்ளது" என்றார்.
இருப்பினும், அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு முதலில் சூரத்துக்கும், பின்னர் அசாமுக்கும், பின்னர் கோவாவுக்கும் சென்றது, உத்தவ் தாக்கரேவின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முழு நடவடிக்கையும் யாருடைய உத்தரவின் பேரில் செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது. எனவே, இந்தச் செய்தி பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எந்த அளவுக்கு, எப்படிச் சென்றடையும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
'ஷிண்டேவிற்கு முழு சுதந்தரம் இருக்காது'
சிவசேனைக்குள் எழுந்த கிளர்ச்சிக்குத் திரைக்கதை வசனத்தை யார் எழுதியிருந்தாலும், முக்கியப் பாத்திரம் ஏற்றவர் ஏக்நாத் ஷிண்டே.
ஆனால் 39 கிளர்ச்சியாளர்களில் கிட்டத்தட்ட பாதி எம்.எல்.ஏக்கள் ஒருவித விசாரணையை எதிர்கொண்டுள்ளனர் என்பதை மறந்து விடக் கூடாது. அது கிரிமினல் வழக்காக இருந்தாலும் சரி, ஊழல் வழக்காக இருந்தாலும் சரி.
அந்த வழக்குகளின் கோப்புகளைத் திறக்கும் பயத்தைக் காட்டி, இந்தக் கிளர்ச்சியைத் தூண்டுவதில் பாஜக வெற்றி பெற்றது என்பது உத்தவ் தாக்கரே கோஷ்டியின் குற்றச்சாட்டு.
ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்கியதன் மூலம், ஷிண்டே பிரிவினருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்படுவதையும் பாஜக விரும்பவில்லை.
வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தல்கள், குறிப்பாக மும்பை மாநகராட்சித் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை.
இதன் காரணமாக தேவேந்திர ஃபட்னவிஸை தனது நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக்கி ஆட்சியில் பங்களித்தது பாஜக. இதனால், அரங்கேறிய இந்த நாடகத்தால், பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை என்ற செய்தி கட்சியினரிடையே சென்று விடக் கூடாது என்ற எண்ணமும் இதில் உண்டு. ஷிண்டேவுக்கு முழுமையான சுதந்தரம் கிடைக்காமல் இருக்க, தேவேந்திர ஃபட்னவிஸ் போன்ற அனுபவம் வாய்ந்த முகமும் அதற்குத் தேவைப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தேவேந்திர ஃபட்னவிசின் செல்வாக்கு
இந்த அரசியல் நாடகத்தில், தேவேந்திர ஃபட்னவிஸுக்கும் ஒரு செய்தி மறைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக மகாராஷ்டிரா பாஜகவில் அவரது ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கட்சி அவரை துணை முதல்வர் பதவியை ஏற்க வைத்து, கட்சியின் ஒழுக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற செய்தியையும் கொடுத்துள்ளது.
வியாழக்கிழமை காலையில், தேவேந்திர ஃபட்னவிஸுக்கு, ஷிண்டே முதல்வராகவும், அவர் துணை முதல்வராகவும் பதவியேற்பது குறித்து மத்திய தலைமையால் தெரிவிக்கப்பட்டது என்று 'தி இந்து' நாளிதழில் நிஸ்துலா ஹெப்பர் மற்றும் அலோக் தேஷ்பாண்டே எழுதிய கட்டுரை குறிப்பிடுகிறது.
அதைத் தானே அறிவிக்கும்படியும் தேவேந்திர ஃபட்னவிசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றும் தெரிகிறது. ஷிண்டேவை முதலமைச்சராக்க தேவேந்திர ஃபட்னவிஸ் தயாராக இருந்தார். ஆனால், அவர் துணை முதல்வராகத் தயாராக இல்லை.
இதை அவர் செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தார். இதைக்கேட்ட மத்திய பாஜக தலைமை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ஜே.பி.நட்டாவும், அமித் ஷாவும் தேவேந்திர ஃபட்னவிஸுடன் தொலைபேசியில் பேசினர்.
கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவும் துணை முதல்வர் பதவியை ஏற்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு, மத்திய தலைமையின் செய்தியையும் தெரிவித்தார். இதையடுத்து, துணை முதல்வர் பதவியை ஃபட்னவிஸ் ஏற்க வேண்டியதாயிற்று.
இந்த நிகழ்வுகளில், மத்திய பாஜக தலைமை, மாநில பாஜகவை விட சக்தி வாய்ந்தது. இதை மாநிலத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது என்ற செய்தியும் மறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












