மகாராஷ்டிரா நெருக்கடி: பாஜகவின் 'இந்துத்துவா' உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவத்தை ஓரங்கட்டி விட்டதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
மகாராஷ்டிராவில் சிவசேனை அரசின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில், அந்த கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே வெளியேரக் காரணமாக இருந்த ஏக்நாத் ஷிண்டே அம்மாநில முதல்வராகியிருக்கிறார். இந்த முயற்சிக்கு ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான தேவேதிர ஃபட்னவிஸ் அவரது அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்க ஒப்புக் கொண்டிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்குவது சிவசேனை என்றாலும், அதன் கைப்பிடி பாரதிய ஜனதாவசம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நெருக்கடி தேசிய எதிர்கட்சிகளுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனையின் மஹாவிகாஸ் அகாடிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஏற்கனவே பலவீனமாக உள்ள தேசிய எதிர்க்கட்சிகள் மேலும் பலவீனமடையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பலவீனமாக உள்ளன. 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர்கள் வெற்றிபெற எந்த வாய்ப்பும் இல்லை. அடுத்த மாதம் மக்களவைத் தேர்தலை நடத்தினால், பாஜக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் மேலும் கீழே சென்று விடும்," என்று சிஎஸ்டிஎஸ் பேராசிரியர் சஞ்சய் குமார் கூறுகிறார்.
இருப்பினும், பிரசாந்த் கிஷோர் போன்ற ஆய்வாளர்கள் அரசியலில் இரண்டு ஆண்டுகள் என்பது நீண்ட காலம் என்று கூறுகிறார்கள்.
என்னை பொருத்தவரை, பாஜகவிற்கு 350 இடங்கள் கிடைக்கும்.காங்கிரஸுக்கு 20 அல்லது 30 இடங்கள் வரையில் கிடைக்கலாம் என்று இதுகுறித்து சஞ்சய் குமார் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
மாற்று இந்துத்துவாவை கொடுக்க தாக்கரே தவறிவிட்டாரா?
உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனாவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பாஜகவின் இந்துத்துவத்திற்கு எதிராக மகாராஷ்டிராவில் ஒரு மாற்று இந்துத்துவாவை வழங்க முயன்றனர் என்று புணேயில் உள்ள ஹிந்து பிசினஸ் லைனின் மூத்த பத்திரிகையாளர் ராதேஷ்யாம் ஜாதவ் தெரிவித்தார்.
இந்த மாற்று இந்துத்துவா மாதிரியை நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையை தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுக்கு இது அளித்தது. ஆனால் சிவசேனை அரசின் நெருக்கடி இந்த முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
தனது இந்துத்துவ கொள்கை அனைவரையும் உடன் அழைத்துச் செல்லப் போகிறது என்று உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் கூறினார் என்று ராதேஷ்யாம் ஜாதவ் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் இந்துத்துவா அரசியலின் வரலாறு பற்றிக்கூறிய அவர், "பால் தாக்கரே இந்துத்துவா அரசியலைத் தொடங்கினார். மகாராஷ்டிராவில் முன்னேற வேண்டுமென்றால், தான் மட்டுமே இந்துத்துவாவின் குரலாக இருக்க வேண்டும் என்று பாஜக கருதியது. சிவசேனை, தம்பியின் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அது நினைத்தது," என்று சொன்னார்.
"உத்தவ் தாக்கரே 2019-ல் பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தார். பாஜகவின் இந்துத்துவாவை சமாளிக்க வித்தியாசமான இந்துத்துவ அணுகுமுறை தேவை என்று காங்கிரஸ், டிஎம்சி மற்றும் என்சிபி போன்ற கட்சிகள் நம்பின. அந்த முயற்சிகளுக்கு இந்த அரசியல் நெருக்கடியால் பின்னடைவு ஏற்படும்."
"இனி தேசிய அரசியலில் இந்துத்துவா பற்றிப்பேசும் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருக்கும். சிவசேனையை சேர்ந்தவர்களே அக்கட்சிக்கு சவால் விட்டதாக பாஜக தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இந்துத்துவா பிரச்னையால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்வது இதுவே முதல் முறை என்று பாஜகவினர் கூறுகிறார்கள்,"என்று அவர் சுட்டிகாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்துத்துவாவும் அமலாக்கத்துறையும்
ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சிக்கும் இந்துத்துவாவைக் காப்பாற்றுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ராதேஷ்யாம் ஜாதவ் கூறுகிறார். ஆனால் குவஹாத்தியில் கூடியிருக்கும் பல சிவசேனை எம்.எல்.ஏக்கள் தங்கள் வணிகம், நிறுவனங்கள் போன்றவற்றிற்காக அமலாக்க இயக்குநரகத்தின் இலக்காக இருப்பதே இதற்குக் காரணம்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவும், அது இந்துத்துவாவின் ஒரே குரலாக மாற வேண்டும் என்பதற்காகவும் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிறார் அவர்.
ஏக்நாத் ஷிண்டேயின் கிளர்ச்சியில் பாஜகவின் பங்கு பற்றிய தெளிவான அறிகுறிகள் உள்ளன.
உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழ்ந்தால், கருத்துப் போரின் பலன் பாஜகவுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா தெரிவிக்கிறார்.
"பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது, ஆட்சி அமைக்கிறது என்றும் மறுபுறம் எதிர்கட்சிகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன என்றும் மக்கள் கருதுவார்கள்."
"எதிர்க்கட்சிகளுக்கு போட்டியிடும் திறமை இல்லை என்று தோன்றும். நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்கள் எங்களைத்தான் விரும்புகிறார்கள் என்று பா.ஜ.க கூறிக்கொள்ளும்,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மறுபுறம், சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் பிரிந்துபோவதால், கட்சி பலவீனமடைந்து வருவதாக கருதக்கூடாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.எல்.புனியா கூறுகிறார்.
எம்.எல்.ஏ. ஆன பின் ஒருவர் கட்சி மாறினால், வாக்காளர்களையும் அவர் உடன் அழைத்துச்செல்வதாக அர்த்தம் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சிதறிக்கிடக்கும் எதிர்கட்சிகள்
இந்தியாவின் 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது. அதாவது நாட்டின் பரப்பளவில் 44 சதவிகிதம் மற்றும் மக்கள் தொகையில் சுமார் 50 சதவிகிதம் பாஜக ஆட்சியின் கீழ் உள்ளது.
எதிர்கட்சியான காங்கிரஸின் அடித்தளம் சுருங்கி வருகிறது. கூடவே ஒருவர் பின் ஒருவராக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி நாட்டின் மிகவும் பிரபலமான தலைவர். பலவீனமான மற்றும் சிதறியுள்ள எதிர்க்கட்சிகள், அவரது வலுவான நிலைக்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
பாஜகவை எதிர்த்துப் போராட ஒன்றிணைவதாக எதிர்க்கட்சிகள் எந்த அறிகுறியையும் கொடுக்கவில்லை. மாறாக ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள் என்ற செய்திகளே வருகின்றன என்று சிஎஸ்டிஎஸ் அமைப்பின் சஞ்சய் குமார் கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸும் ஆட்சியின் ஒருபகுதியாக இருக்கும் மகாராஷ்டிராவில் ஏற்பட்டுவரும் நிகழ்வுகள் எதிர்க்கட்சிகளுக்கு நல்ல செய்தி அல்ல.
"எதிர்க்கட்சியின் மையமாக காங்கிரஸ் உள்ளது. அதன் பலவீனம் மற்ற கட்சிகளையும் பாதித்துள்ளது. அவர்கள் தோல்வியடைந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். காங்கிரஸால் முடியவில்லையென்றால், இவையெல்லாம் உள்ளூர் கட்சிகள், தேசிய அளவில் அணுகல் இல்லை என்ற கருத்து ஏற்பட்டுவிட்டது," என்று சஞ்சய் ஜா கூறுகிறார்.
புல்டோசர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவில்லை. அமலாக்க இயக்குனரகம் பல மணிநேரம் ராகுல் காந்தியை விசாரணை செய்தபோது, மத்திய அமைப்புகளை அரசு தவறாகப் பயன்படுத்தியது பற்றி காங்கிரஸ் அல்லாத கட்சிகள் எதுவும் பேசவில்லை என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், ANI
யஷ்வந்த் சின்ஹா பெயர் அறிவிப்பு
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான கூட்டு வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் அறிவிக்கப்பட்டதில்,எதிர்க்கட்சிகளின் வியூகத்தின் ஒரு மாதிரி காணப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான உதாரணமாக குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்வைக்க வேண்டுமானால், அதற்கான முயற்சிகள் ஓராண்டு அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பவன் வர்மா கூறுகிறார்.
"இதற்கு தேசிய ஒருங்கிணைப்பு இருந்திருக்க வேண்டும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி " தரவுகளில் ஒற்றுமையை கண்டறிதல்" மூலமாக அல்லாமல், நவீன் பட்நாயக், ஜெகன் ரெட்டி போன்ற தலைவர்களிடம் பேசி, கவனமாக பரிசீலித்து வேட்பாளரை தேர்வு செய்திருக்க வேண்டும்."என்று அவர் குறிப்பிட்டார்.
"கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்குச் சென்று ஒருவருக்கொருவர் அரசியல் சண்டை போடுகின்றன. மேடையில் கைகோர்த்து முன்வைக்கும், "தரவுகளில் ஒற்றுமை" நாட்டிற்கு தேவையில்லை. நாட்டிற்கு உண்மையான அர்த்தத்தில் ஒற்றுமை தேவை."என்று பவன் வர்மா கூறினார்.
"யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் இந்தப்போரில் தனித்து விடப்பட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முக்கிய போட்டியில் பங்கேற்க தன்னைத்தானே அர்பணித்துக்கொள்ளும் எந்த அறிகுறியும் காணப்படவில்லை,"என்று பவன் வர்மா சுட்டிக்காட்டினார்.
"யஷ்வந்த் சின்ஹாவுக்கு அனுபவம் உள்ளது. அவர் ஒரு திறமையான அரசியல்வாதி. ஆனால் எனது பார்வையில் திரௌபதி முர்முவை பல கட்சிகள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு பல தர்க்கரீதியான காரணங்கள் உள்ளன. அவர் ஒரு பழங்குடியினர், ஒரு பெண் மற்றும் தனது சொந்த வாழ்க்கையை தானே உழைத்து உருவாக்கிக்கொண்டவர்," என்றார் அவர்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
அதாவது, பாஜக அத்தகைய ஒரு வேட்பாளரை குடியரசுத்தலைவர் பதவிக்கு நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்துப் போவது பல எதிர்க்கட்சிகளுக்கு எளிதானது அல்ல.
மகாராஷ்டிராவும் தேசிய எதிர்க்கட்சிகளும்
இந்த ஆண்டு மும்பையின் பிஎம்சி(பம்பாய் மாநகராட்சி) உட்பட பிற நகரங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
பல ஆண்டுகளாக, பிஎம்சியில் சிவசேனைக்கு வலுவான பிடி உள்ளது. பிஎம்சியின் பட்ஜெட் சிவசேனையின் அரசியல் உயிர்நாடி என்று நம்பப்படுகிறது.
அதாவது முக்கியமான உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது ஒருபுறம் , தனது அரசியல் எதிர்காலத்திற்காகப் போராடுவது மறுபுறம் என்று சிவசேனைக்கு இரு பக்கங்களிலும் சவால் உள்ளது.
என்சிபி தலைவர் ஷரத் பவாரால் கூட சிவசேனைவுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவேதான் அவர் இதை சிவசேனாவின் உள்விவகாரம் என்று கூறியதாகவும் தகவல் அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்தது.
தாங்கள் சரியாக ஒருங்கிணையவில்லை என்றால் சிரமங்களால் சூழப்படுவோம் என்பதை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் டிஎம்சியின் பவன் வர்மா.
"எதிர்க்கட்சிகள் ஒரு செயல்திட்டத்தின் கீழ் அடிமட்ட நிலையில் ஒன்று திரண்டு, ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்கி தேசிய அளவில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தாவிட்டால், பொதுமக்களின் அதிருப்தியை அவர்களால் திசைதிருப்ப முடியாது,"என்று பவன் வர்மா குறிப்பிட்டார்.
"கட்சிகள் ஒன்று கூடுகின்றன. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். அதற்கு உங்களுக்கு டஜன் கணக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் பாஜகவுக்கு அது சாதகமாக உள்ளது."
இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாவிட்டால், அடுத்த 2024 பொதுத் தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று அவர் கூறுகிறார்.
சிவசேனையின் முன் இருக்கும் இந்த சவாலில் உத்தவ் தாக்கரே வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் கட்சி மீண்டும் ஒரு வலுவான நிலைக்கு வரக்கூடும் என்று சாகால் செய்தித்தாளின் மிருணாளினி நானிவடேகர் தெரிவிக்கிறார்.
ஆனால் தற்போது சிவசேனை தனது எதிர்காலத்திற்காக போராடுகிறது. நாட்டின் எதிர்க்கட்சிகளின் பார்வை அதன் மீது உள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












