ஏக்நாத் ஷிண்டே: மகராாஷ்டிரா சிவசேனை கூட்டணி அரசுக்கு ஆபத்து - 11 எம்எல்ஏக்களுடன் அமைச்சர் மாயம்

பட மூலாதாரம், FACEBOOK / EKNATH SHINDE
மகாராஷ்டிர அமைச்சரும், சிவசேனாவின் முக்கிய தலைவருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில சிவசேனா எம்.எல்.ஏக்களுடன் திடீரெனக் காணாமல் போனதால் அந்த மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
திடீரென மாயமான எம்எல்ஏக்களும் அமைச்சரும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக சிவசேனை தலைவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள்.
இதற்கிடையில் இந்த சர்ச்சை வெடித்த பிறகு ஷிண்டே முதல் முறையாக ட்வீட் செய்தார்.
அதில் "நாங்கள் பாலாசாகேப்பின் தீவிரமான சிப்பாய்கள். பாலாசாகேப் எங்களுக்கு ஹிதுத்வாவைக் கற்றுக் கொடுத்தார். அதிகாரத்திற்காக பாலாசாகேப் தாக்ரே மற்றும் தர்மவீர் ஆனந்த் டிகே ஆகியோரின் சித்தாந்தங்களை நாங்கள் ஒருபோதும் மீறவில்லை, எதிர்காலத்திலும் அதைச் செய்ய மாட்டோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதனிடையே, மகாராஷ்டிராவின் அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கடந்த இரண்டரை ஆண்டுகளில் இது போன்ற மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது என்றார்.
"ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும் என்று எங்களிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. இது சிவசேனாவின் உள்பிரச்சினை, அவர்கள் என்ன முடிவு செய்தாலும் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அரசில் மாற்றம் தேவை என்று நாங்கள் நினைக்கவில்லை." என்று குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இந்தக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் பிளவு, நேற்றைய சட்ட மேலவைத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்தத் தேர்தலில் பாஜக தனது 5 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலா 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் காங்கிரஸின் ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் சந்திரகாந்த் ஹண்டோர் தேர்தலில் தோல்வியடைந்தார்.
ஏக்நாத் ஷிண்டேவுக்கும், சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், சிவசேனா நிர்வாகியும் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
எம்எல்ஏக்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று என்று சிவசேனா தலைவர் நீலம் கோர்ஹே கேட்டுக் கொண்டிருக்கிறார்.
"ஏக்நாத் ஷிண்டே பல வருடங்களாக எங்களுடன் இருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே எப்போதும் எங்களைச் சந்திப்பார். ஆனால் எல்லா தலைவர்களும் ஒருவரை ஒருவர் தினமும் சந்திப்பதில்லை. எத்தனை மணி நேரம், எத்தனை வினாடிகள் அவரைத் தொடர்பு கொள்ள முடியாது என எனக்குத் தெரியவில்லை. அவர் மிகவும் திறமையானவர். மற்றும் கடினமாக உழைக்கும் தலைவர். சட்ட மேலவையில் பல காலம் பணியாற்றியிருக்கிறார். இரவு பகல் பாராமல் உழைத்தவர். முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். நேற்று தேர்தல் முடிந்து கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடந்தபோது, ஏக்நாத் ஷிண்டே அங்கு இருந்தார். முதல்வர் வந்திருந்தார். எம்.எல்.ஏ.க்களிடம் பேசினார். தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து விவாதம் தேவையில்லை, விரைவில் அனைவரையும் தொடர்புகொள்வார்கள்'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் மகா விகாஸ் முன்னணி அரசு நிலையானது என்றும் பெரும்பான்மையைத் திரட்டும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் பலனளிக்காது என்றும் மகராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியுள்ளார்.
"உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க சதி நடக்கிறது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் இதே முறை பயன்படுத்தப்பட்டது. சிவசேனா விசுவாசிகளின் கட்சி. இங்கு அப்படி நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












