குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளால் முடியுமா?

பட மூலாதாரம், @rashtrapatibhvn
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

குடியரசுத்தலைவர் தேர்தலின் முக்கிய அம்சங்கள்
- ஜூன் 29 ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல், ஜூலை 18 ஆம் தேதி வாக்களிப்பு, ஜூலை 21 ஆம் தேதி முடிவு அறிவிப்பு.
- குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகள் மதிப்பு 10,80,131. இதில் 5,40,065க்கு மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்
- 767 எம்பிக்கள் (540 மக்களவை, 227 மாநிலங்களவை) மற்றும் மொத்தம் 4033 எம்எல்ஏக்கள், குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு எம்.பி.யின் வாக்குகளின் மதிப்பு (வெயிட்டேஜ்) 700 அதாவது மொத்த வெயிட்டேஜ் 3,13,600.
- எம்எல்ஏக்களின் வாக்குகளின் மதிப்பு மாநிலத்தின் மக்கள்தொகை மற்றும் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது.
- உத்திரபிரதேசத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. சிக்கிமில் 7 மட்டுமே
- 4033 எம்எல்ஏக்களின் மொத்த வெயிட்டேஜ் 5,43,231. இதனால் தேர்தலுக்கான மொத்த வெயிட்டேஜ் 10,80,131 ஆகிறது.
- வெற்றி பெற 50%க்கு மேல் அதாவது 5,40,065 க்கு மேல் தேவை

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு ஜூலை 18ம் தேதி குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் எலெக்டோரல் காலேஜ், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும், சட்டப்பேரவை மற்றும் யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தல் 2024ல் நடைபெற உள்ளது. பல முக்கியமான தருணங்களில் குடியரசுத்தலைவரின் பங்கைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான சாத்தியமான குடியரசுத்தலைவர் வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில் அரசும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன.
ஷரத் பவார், நிதிஷ் குமார், மாயாவதி முதல் ஆரிஃப் முகமது கான், அமரீந்தர் சிங் வரையிலான பெயர்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சித்தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பாரதிய ஜனதா கட்சி அதிகாரம் அளித்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் பல சட்டப்பேரவைகளில் அதிக உறுப்பினர் எண்ணிக்கையுடன் இருக்கும் பாஜகவின் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பாஜகவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது
மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க வின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால், கட்சியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கட்சியின் சிறப்பான செயல்பாடு 'உளவியல் ரீதியாக' சிறப்பாக இருப்பதாக கருதுகிறார் பத்திரிக்கையாளர் நீரஜா சௌத்ரி. மாநிலங்களவை தேர்தல் முடிவுகளைப் பற்றி பாஜக அவ்வளவாக கவலைப்படாமல் உள்ளது, ஏனெனில் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்று CSDS இன் சஞ்சய் குமார் கூறுகிறார்.

பட மூலாதாரம், @rashtrapatibhvn
மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணமூல் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் பேசியதோடு கூடவே திமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளைத் தொடர்பு கொண்டார் என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவிக்கிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மமதா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் ஷரத் பவார் மற்றும் சிபிஐஎம் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பொதுவான குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து பேசியதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த செய்தி வெளியான ஒரு நாள் கழித்து டிஎம்சி பதிவு செய்துள்ள ஒரு ட்வீட்டில், ஜூன் 15 அன்று டெல்லியின் கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் "அனைத்து முற்போக்கு எதிர்க்கட்சிகளின்" கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மமதாவின் முயற்சி
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பதை காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் பிபிசி உடனான உரையாடலில் உறுதிப்படுத்தினார்.
பொது குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கான போட்டியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்பதை எப்படிப் பார்ப்பது? இதுகுறித்து கெளரவ் கோகோய் எதுவும் கூற மறுத்துவிட்டார்.
எதிர்க்கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு, ஒற்றுமை இல்லாமை, தங்களுக்குள் முன்னிலை வகிப்பதில் உள்ள போட்டி ஆகியவற்றை பார்க்கும்போது, பிரதமர் மோதிக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள வலுவான நிலையை அதனுடன் இணைத்துப்பார்க்க முடிகிறது.

பட மூலாதாரம், SANJAY DAS/BBC
சோனியா காந்தியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, ராகுலும் சோனியாவும் சிறைக்கு செல்லும் அபாயத்தில் இருக்கும் நேரத்தில், திரிணமூல் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்வதை ஒரு உத்தி என்று பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ரஷித் கித்வாய் குறிப்பிடுகிறார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் விஷயத்தில் காங்கிரஸ் முன்முயற்சி எடுத்திருந்தால், மமதா பானர்ஜி டெல்லிக்கு வந்திருக்க மாட்டார் என்கிறார்கள்.
மமதா பானர்ஜி தனது ட்வீட் அழைப்புக் கடிதத்தில், "எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுமென்றே மத்திய அமைப்புகளால் குறிவைக்கப்படுகிறார்கள். சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. உள் பூசல்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. குடியரசுத்தலைவர் தேர்தல் நெருங்கிவிட்டதால், முற்போக்கு எதிர்கட்சிகள் தங்களுக்குள் பேசி, இந்திய அரசியலின் எதிர்கால போக்கை தீர்மானிக்க இது ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்துமா?
பிபிசியிடம் பேசிய டிஎம்சி மாநிலங்களவை எம்பி சுவேந்து சேகர் ராய், "22 அரசியல் கட்சித் தலைவர்களை மமதா பானர்ஜி தொடர்பு கொண்டுள்ளார். இது ஒரு பெரிய முன்னேற்றம். எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கின்றன" என்றார்.
இந்தக் கூட்டத்தில் ஆர்எல்டி சார்பில் ஜெயந்த் செளத்ரி பங்கேற்கிறார்.
அக்கட்சியின் தேசிய துணைத் தலைவரும், முன்னாள் பத்திரிகையாளருமான ஷாஹித் சித்திக்கி, எல்லா கட்சிகளும் முழு உறுதியுடன் ஒன்று சேராவிட்டால், எதிர்க்கட்சிகளின் நிலைமை கடினமானது என்று கருதுகிறார்.
"முந்தைய குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லா கட்சிகளும் ஒன்றிணையவில்லை. சிறு கட்சிகள் நிதி உதவிக்காக மத்திய அரசையே நம்பியிருக்கின்றன. கே.சி.ஆர் தொடர்ந்து பாஜக பக்கம் செல்லக்கூடும்," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் பங்கேற்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா உறுதிப்படுத்தினார். சிபிஎம் கட்சியின் சீதாராம் யெச்சூரி மமதா பானர்ஜி அனுப்பிய கடிதத்தை ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று அழைத்தார் என்று முன்பு வெளியான ஒரு அறிக்கை தெரிவித்தது.
எதிர்க்கட்சிகள் அணிதிரண்டிருப்பதால் தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு எந்த சவாலும் இல்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சர்தார் ஆர்.பி.சிங் கூறுகிறார்.
'முதலில் அவர்கள் ஒன்று சேரட்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.
யார் வலிமையானவர்?
2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத்தலைவர் தேர்தல் 16ஆவது தேர்தலாகும்.
இந்த ஆண்டு தேர்தலில், 4809 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும், மக்களவையில் 543 உறுப்பினர்களும், சட்டப் பேரவையில் 4033 உறுப்பினர்களும் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் வாக்களிக்கும்போது வாக்கு மதிப்பு உண்டு.
இம்முறை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஒவ்வொரு வாக்கின் மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அந்த மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொருத்தது.
உதாரணமாக, உத்தரபிரதேசத்தில், ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு 208 ஆகவும், மிசோரமில் எட்டு மற்றும் தமிழ்நாட்டில் 176 ஆகவும் இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த வெயிட்டேஜ் 5 , 43,231 ஆக இருக்கும்.
நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் வாக்குகளின் வெயிட்டேஜ் 543,200. ஆகவே எல்லா உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த வெயிட்டேஜ் 1086431 ஆகும்.
10.86 லட்சம் வெயிட்டேஜ் கொண்ட எலெக்டோரல் காலேஜில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் தங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேடி போன்ற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படும்.
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு முன், மாநிலங்களவை தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வை பலப்படுத்தியிருக்கிறது.
நான்கு மாநிலங்களில் 16 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 8 இடங்களைப் பெற்ற நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார்.
"தரவின்படி, 48 சதவிகித வாக்குகள் என்.டி.ஏ விடமும், 38 சதவிகித ஓட்டுகள் யு.பி.ஏ.விடமும், 14 சதவிகிதம் ஜெகன் ரெட்டியின் கட்சி, பி.ஜே.டி., டி.எம்.சி. மற்றும் இடதுசாரிகளிடம் உள்ளன" என்று பத்திரிக்கையாளர் நீரஜா செளத்ரி கூறினார்.
"ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பார்த்தால், அவர்களுக்கு 52 சதவிகித எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. எல்லா எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் மந்திரக்கோலால் ஒன்றிணைத்தால், ஒரு நல்ல போட்டி இருக்கும். ஆனால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை. ஜெகன் ரெட்டி என்ன செய்வார்? நவீன் பட்நாயக் சமீபத்தில் பிரதமரை சந்தித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவர்களில் யாராவது (பாஜகவுக்கு ஆதரவாக) போனால், தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் வெற்றி பெறுவார். யாரும் செல்லவில்லை என்றால், கட்சியில் பிளவு ஏற்படுத்துவதில் பா.ஜ.க, கைதேர்ந்தது. சிலர் வராமல் இருப்பர், சிலர் மாநிலங்களவை தேர்தலில் நடந்தது போல அணி மாறி வாக்களிப்பார்கள்."
எதிர்க்கட்சிகளின் கூட்டம் வெறும் சடங்கு என்றும் தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்வதற்காக நடக்கும் ஒன்று என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ரஷீத் கித்வாய் .
எதிர்க்கட்சிகள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அகமது படேல் அல்லது சந்திரபாபு நாயுடு போன்ற வலுவான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒருவர் தேவை என்று அவர் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவர் வேட்பாளரை நிறுத்துவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் முயற்சி என்று அவர் கருதுகிறார்.
ஒரு பக்கத்திற்கு 48 சதவிகித வாக்குகள் இருக்கும் போது, 52 சதவிகித எதிர்க்கட்சி வாக்குகளை ஒன்றிணைய வைப்பது ஒரு கற்பனையே என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













