நரேந்திர மோதி, அமித் ஷாவின் 'தென்னிந்திய அரசியல்' உத்தி - தமிழ்நாட்டில் எடுபடுமா?

பாஜக

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

அதிகார வாசனையும் தென்னிந்தியாவில் தனது தளத்தை விரிவுபடுத்தும் தீவிர ஆசையும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையை 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தனது தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்தத் தூண்டியுள்ளது.

இதற்கு முன்பு இந்திய பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்த காலத்தில்தான் ஹைதராபாத்தில் தேசிய செயற்குழு கூட்டத்தை பாஜக நடத்தியது.

அப்போது அவர் தேசிய செயற்குழு கூட்டத்தில், 'இது மக்களவைத் தேர்தலுக்குச் செல்ல வேண்டிய நேரம்,' என்று கூறினார். இருப்பினும், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற அவருடைய பிரசாரம் தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை அகற்றி, பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வர பாஜகவுக்கு ஒரு தசாப்த காலம் ஆனது.

இந்தியாவின் ஆளும் கட்சி அப்போது முதல் தனது தளத்தை வட மாநிலங்களிலிருந்து நாட்டின் வெவ்வேறு மண்டலங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர, வேறு எங்கும் வெற்றியடையவில்லை. 2008ஆம் ஆண்டில், பி.எஸ். எடியூரப்பா தனி ஆளாக பாஜகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார்.

"வட இந்தியாவில் பாஜக சாதித்ததை, கேரளா மற்றும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கண்டிப்பாகச் செய்யமுடியாது" என்று அரசியல் ஆய்வாளரும் கேரள பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் ஜே பிரபாஷ் பிபிசி இந்தியிடம் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அக்கட்சி கருத்தியல் சவாலை எதிர்கொள்கிறது. ஆனால், தெலங்கானாவில்தான் பாஜக, அதிகாரத்தின் நறுமணத்தை உணரத் தொடங்கியுள்ளது. இருப்பினும், காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடத்தைப் பிடிக்குமா என்று ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் இதுவரையில் நிச்சயமாக எதையும் சொல்லவில்லை.

"தெலங்கானாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இதுவொரு சோதனைக் காலம். கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இங்கு நடத்தப்படுகிறது,'' என அரசியல் விமர்சகர் ஜிங்கா நாகராஜு பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

தெலுங்கு மொழி பேசும் மற்றொரு மாநிலமான ஆந்திர பிரதேசம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணியின் அறிவிக்கப்படாத கூட்டணி உறுப்பினராகக் கருதப்படுகிறது.

தெலங்கானாவில் பாஜகவுக்கு நம்பிக்கை கொடுத்தது என்ன?

கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திற்குப் பிறகு, தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களும் மத்தியில் ஆளும் ஆட்சியுடன் மிகவும் நட்புடன் இருப்பதாகத் தோன்றியது.

2px presentational grey line
2px presentational grey line

அந்தக் கட்டத்தில் தான் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 17 இடங்களில் நான்கைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் முந்தைய ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அந்தக் கட்சி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பான்மையான இடங்களில் டெபாசிட்டையும் இழந்திருந்தது. மக்களவை தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றிக்கான காரணங்கள், பெரும்பாலும் உள்ளூர் மட்டத்திலானவை.

2020 நவம்பரில் துப்பாக்கா சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது தான், "தோழமை" டிஆர்எஸ்-க்கு எதிராக, 'ஆட்சி எதிர்ப்புப் போக்கு' நிலவுவதை பாஜகவின் மத்திய தலைமை முதன்முறையாக உணர்ந்தது.

தெலங்கானா

பட மூலாதாரம், FACEBOOK/KCR

கே.சி.ஆர்., அவரது மகன் கே.டி.ராமாராவ் (கே.டி.ஆர்) மற்றும் கே.சி.ஆரின் மருமகனான ஹரிஷ் ராவ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்த தொகுதிகளால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்ட துப்பாக்கா, அவர்களின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்டது.

ஆனால், அங்கு பாஜக எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. மாநிலத்தைப் பற்றிய தனது கருத்தை மாற்றியமைக்க மத்திய தலைமையை அந்த வெற்றி நிர்ப்பந்தித்தது. இதைத் தொடர்ந்து விரைவில் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (ஜிஹெச்எம்சி) உயர்மட்ட தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் பாஜக தனது வலுவான பேச்சாளர்களை முன்னிறுத்தி முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது.

``வரலாற்று ரீதியாக, தெலங்கானா பாஜகவுக்கு சாதகமான அடித்தளத்தை வழங்கியது. அது நிஜாமின் ஆட்சியில் முன்பு இருந்தது. அந்த ஆட்சியில் மிகப்பெரிய விவசாயிகள் இயக்கம், ரசாக்கர் இயக்கம் மற்றும் `காவல்துறை நடவடிக்கை' போன்ற அனைத்தும் மக்களது நினைவின் ஒரு பகுதியாக இருந்தன. நிஜாமாபாத், மெஹபூப்நகர், அடிலாபாத் போன்ற மாவட்டங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று பாஜக விரும்பியது,'' என்று இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி சபையின் (ICSSR) மூத்த உறுப்பினர் பேராசிரியர் கே ஸ்ரீனிவாசலு பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது அந்த மாவட்டங்கள், வகுப்புவாத பதற்றத்தையும் வன்முறையையும் கண்டுள்ளன. 1983 இல் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆட்சிக்கு வந்தது. என்.டி.ராமராவ், அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மத நல்லிணக்கத்தை உறுதி செய்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு நிலைமை முழுமையாக கட்டுக்குள் வந்தது. பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்த போதிலும், நிலைமை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

2px presentational grey line
2px presentational grey line

"டிஆர்எஸ் கட்சியின் நிர்வாகத் தோல்வியால் தெலங்கானாவில் பாஜக தனது இருப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் நிலவுகிறது. பொதுக் கல்வி முறையை வலுப்படுத்தாதது, RSS-ஐ சார்ந்த நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது போன்றவை இதில் அடங்கும். இந்துமயமாக்கலில் ஆர்வமுள்ள நடுத்தர வர்க்கம் பாஜக பக்கம் சாய்வதையும் நீங்கள் காணலாம். இன்னொரு பக்கம் காங்கிரஸுக்கு தலைமை இல்லை. எனவே, குறைந்தபட்சம் நகர்ப்புறங்களிலாவது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் நிலையில் பா.ஜ.க.உள்ளது," என்கிறார் பேராசிரியர் ஸ்ரீநிவாசலு.

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 18 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றுள்ளது என்றார் ஜிங்கா நாகராஜு. "ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 40 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். இது கடினமான பணி. அதன் மூலம்தான் டிஆர்எஸ், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உடன் கூட்டணி அமைப்பதைத் தடுக்க முடியும். காங்கிரஸின் உதவியையும் கேசிஆர் எடுத்துக் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் டிஆர்எஸ்-க்கு காங்கிரஸ் நிரந்தர எதிரி அல்ல. தற்போதைய நிலவரப்படி இரண்டாவது இடத்தைப் பிடிக்க, காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது,'' என்றார் அவர்.

எவ்வாறாயினும், 2023 சட்டமன்றத் தேர்தலில் முன்னூறு காப்புகள், பத்மஷாலிகள், யாதவர்கள் மற்றும் கெளடுகள் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஓட்டுகளைப் பெற, பாஜக மற்றும் காங்கிரஸ் செய்யும் முயற்சிகள் கவனிக்கத்தக்கவை. மேலும், மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, டி ஆர் எஸ், ஓபிசி மற்றும் தலித்துகள் மீதான தன் பிடியை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள என்ன செய்யப் போகிறது என்பதும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக இருக்கும்.

தமிழ்நாடு

தெலங்கானாவைப் போலன்றி, தமிழகத்தில் பா.ஜ.க.,பொதுமக்களைச் சென்றடையும் காலம் நீண்ட தூரத்தில் உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முயற்சிகள், இதுவரை இல்லாத அளவுக்கு மக்களைக் கவர்ந்திழுக்கிறது. இரண்டு சக்தி வாய்ந்த போட்டியாளர்களான தி.மு.க., அண்ணா தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்குப் பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடிக்கவும் அக்கட்சி பாடுபடவேண்டியிருக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, திராவிட இயக்கம் மாநிலத்தில் அமைத்துள்ள கருத்தியல் அடித்தளம்.

அண்ணாமலை

``பாஜக, மாநிலத்தில் வலுவான இருப்பை உணர எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. முதலில் எதிரிகளை அழிக்காமல் நேச கட்சிகளை அழிக்கும் உத்தியைக் கையாண்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சி நிலையை ஆக்கிரமிக்க இது உதவக்கூடும். பாஜக, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி பற்றிப் பேசுகிறது. ஆனால் திராவிட கட்சிகள் அடித்தளத்தில் மிகவும் வலுவாக உள்ளன,'' என்று சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன் பிபிசி இந்தியிடம் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, உத்திர பிரதேசம் மற்றும் பிகாரில் செய்ததைப் போலவே, தனக்கு ஆதரவைத் தேட சிறிய சாதிக் குழுக்களை அடையாளம் கண்டது. தேவேந்திர வேளாளர் என்ற பெயரில் ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கியது. ஆனால் இந்த சாதியினர் பட்டியல் சாதியினர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற இரண்டாவது, ஆனால் தொடர்புடைய கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இந்த சாதிக் குழுக்களில் கருத்து பிளவுபட்டுள்ளது. ஆனால் இந்த சாதி குழுக்களிடையே சிறிது ஆதரவை பாஜக பெற்றது.

"கர்நாடகாவில் உள்ள சாதி மடங்களைப் போல, தமிழகத்தில் சாதிக் குழுக்களின் அடிப்படையில் மடங்களைப் பிரிக்கும் முயற்சி என்ற வேறுபட்ட உத்தியை பாஜக கையாண்டதாகத் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள மடங்கள் குறிப்பிட்ட சாதியினருக்கானது அல்ல மாறாக சமூக பிரிவுகளுக்கானது. அவை சாதிய அல்லது வகுப்புவாத தளங்கள் அல்ல. இப்போது அவற்றை இந்து உட்பிரிவுகளின் அடிப்படையில் பிரிக்கும் முயற்சி நடக்கிறது. எதிர்காலத்தில் பாஜகவுக்கு சில சாதிக் குழுக்களின் ஆதரவு கிடைக்கக்கூடும்,'' என்றார் பேராசிரியர் மணிவண்ணன்.

பிரபல அரசியல் விமர்சகர் டாக்டர் சுமந்த் பி ராமன் நிலைமையை வித்தியாசமாகப் பார்க்கிறார். ``நிலவியல் பிரிவும் சாதிப் பிரிவும் உள்ளது. பாஜகவின் அடித்தளம் பெரும்பாலும் மேற்கு தமிழ்நாட்டில் (கோயம்புத்தூர் போன்றவை) உள்ளது. அங்கு அதன் அடித்தளம் அதிமுகவின் அடித்தளத்துடன் ஒன்றுக்கொன்று இணைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 76 தொகுதிகளில் 56 இடங்களில் அண்ணா திமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.'' என்றார் அவர்.

பாஜக

பட மூலாதாரம், Getty Images

தேவர் சமூகமும் கவுண்டர் சமூகமும் பாரம்பரியமாக திமுகவுக்கு எதிராக வாக்களிக்கின்றனர். தி.மு.க., பாரம்பரியமாக, தலித் வாக்குகளில் ஒரு பகுதியையும் பெரும்பாலான சிறுபான்மையினரின் வாக்குகளையும் தேவர் அல்லாத கவுண்டர் அல்லாத ஓபிசி வாக்குகளையும் கணிசமான வன்னியர் வாக்குகளையும் பெறுகிறது.

``காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகே போன்ற 15 கட்சிகளின் கூட்டணியைப் பெற்றுள்ளதால்தான் திமுக ஆட்சியில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக மக்கள் கூட்டத்தை ஈர்க்கிறது. ஆனால் அது இரட்டை இலக்க வாக்குகளைப் பெறும் வரை காத்திருக்க வேண்டும். பெரிய போட்டியாளராக உருவெடுக்க 20 சதவிகித வாக்குகளை அது பெறவேண்டும்,'' என்றார் டாக்டர் ராமன்.

கேரளா

தமிழ்நாட்டைப் போலவே கேரளாவும் மக்கள்தொகை பன்முகத்தன்மை மற்றும் சமூக-கலாச்சார மரபுகள் போன்றவற்றால் பாஜக ஊடுருவுவதற்கு கடினமான கருத்தியல் சுவரை உருவாக்கியுள்ள மற்றொரு மாநிலமாகும். சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) முழு வேகத்தில் செயல்படுவதும், சில வட இந்திய மாநிலங்களில் உள்ளது போல் காங்கிரஸ் கேரளாவில் மதிப்பிழந்த கட்சியாக இல்லாமல் இருப்பதும் இதற்கு அடிப்படைக் காரணங்களாகும்.

``தற்போது பாஜக காங்கிரஸுக்கு அருகில் கூட இல்லை. அதற்கு வலுவான தலைமை இல்லை. கட்சிக்கு ஓர் உறுதியான அடித்தளத்தை உருவாக்கக்கூடிய புதிய தலைமை தேவை. இப்போது, சிபிஎம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான முன்னணிகளுக்கு இடையே அதிகாரம் மாறி மாறி வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக உருவானதாகத் தெரியவில்லை,'' என்கிறார் பேராசிரியர் பிரபாஷ்.

ஆனால், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால், அது தாக்குப்பிடிப்பது கடினம் என்று பேராசிரியர் பிரபாஷ் சுட்டிக்காட்டினார். ``தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்து விலகியிருப்பது காங்கிரஸ் தலைமையிலான UDF-ஐ உடைத்துவிடும். அப்படி நடந்தால், இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் (மக்கள் தொகையில் 46 சதவிகிதம்) எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம், கிறிஸ்தவ ஓட்டுகளையாவது பா.ஜ.க, தன்வசம் கொண்டுவர வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

சுருக்கமாகச் சொன்னால், வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, பாஜக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: