மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சை: பால் தாக்கரே விட்டுச் சென்ற கட்சியை காப்பாற்றுவாரா உத்தவ் தாக்கரே?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜூபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
புதன்கிழமை இரவு மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த பிறகு, அவரது தந்தை உருவாக்கிய கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவசேனை கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் கிளர்ச்சிக்குப் பிறகு, மொத்தமுள்ள 55 எம்எல்ஏக்களில் 13 பேரின் ஆதரவு மட்டுமே, உத்தவ் தாக்ரேக்கு உள்ளது. உத்தவ் தாக்கரே மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் இத்துத்தவ கொள்கையை கைவிட்டு, இந்து தேசியவாதம் என்ற கட்சியின் அடிப்படை கொள்கையை புறக்கணித்து ஷரத் பவாரின் NCP மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சி அமைத்தார் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர்.
அதிருப்தியில் இருந்த 39 சிவசேனை எம்எல்ஏக்கள் தங்கள் மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசாமின் கெளஹாத்தியில் உள்ள ஹோட்டலில் பல நாட்களாக மறைந்திருந்தனர். மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், தற்போது மும்பை திரும்பியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க அவர்கள் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவசேனையும் பாஜகவும் 30 ஆண்டுகளாக கூட்டணி கட்சியாக இருந்தபிறகு 2019-ல் பிரிந்தன.
மும்பையிலும் மாநிலத்தின் சில பகுதிகளிலும் சிவசேனை ஒரு அசாதாரணமான சக்திவாய்ந்த கட்சியாக இருந்து வருகிறது, ஆனால் தனது மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களின் கிளர்ச்சி மற்றும் பல ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியில் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக அக்கட்சி வரும் நாட்களில் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடந்த காலங்களில் சிவசேனை பலமுறை பின்னடைவுகளை சந்தித்துள்ளது. ஆனால் இந்த முறை பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கட்சியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி, சிவசேனையின் வீழ்ச்சிக்கான முதல்படி என்று கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பால்ஷிகர்.
கட்சிக்கு பாதிப்பு
தற்போதைய பிரச்னை கட்சியை மோசமாக பாதித்துள்ளது என்று அக்கட்சியின் முன்னாள் எம்பி பரத் குமார் ராவத் கூறுகிறார். "கட்சி இதுபோன்ற நெருக்கடியை ஒருபோதும் சந்தித்ததில்லை. பல நகரங்களில் அடிமட்ட ஆதரவாளர்களும் தொண்டர்களும் கூட கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
"இது உத்தவ் தாக்கரே மற்றும் கட்சி இருவருக்குமே'இப்போது இல்லை என்றால், இனி எப்போதும் இல்லை' என்ற நிலையை உருவாக்கியுள்ளது" என்றார் அவர்.
சிவசேனை, 1966 இல் உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்கரேவால் நிறுவப்பட்டது. 1991ஆம் ஆண்டில் மூத்த தலைவர் சகன் புஜ்பல் பல எம்.எல்.ஏக்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்களுடன் கட்சியை விட்டு வெளியேறியபோது சிவசேனா முதலில் பிளவுபட்டது. 2005ம் ஆம் ஆண்டில், மற்றொரு தலைவராக நாராயண் ராணே, கட்சியை விட்டு வெளியேறினார். மேலும் சில எம்எல்ஏக்களையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
உத்தவ் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே 2006 ஆம் ஆண்டில் பல எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்களுடன் கட்சியை விட்டு வெளியேறினார். மிகப்பெரும் பின்னடைவாக அப்போது அது பார்க்கப்பட்டது. கட்சியில் இருந்த பலர் பிரபலமாக இருந்த ராஜ் தாக்ரேயை, பால் தாக்ரேயின் வாரிசு என்று கருதியிருந்தனர்.
இந்தியாவின் பல கட்சி ஜனநாயகத்தில், சிவசேனை போன்ற பிராந்தியக் கட்சிகள் கணிசமான அரசியல் செல்வாக்கைக் கொண்டுள்ளன. மேலும் மாநில சட்டப்பேரவைத்தேர்தல்களில் தேசியக் கட்சிகளைத் தோற்கடிக்கின்றன. பொதுத் தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறினால், சிவசேனை போன்ற பிராந்தியக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் சிவசேனாவின் திறன் காரணமாக அக்கட்சி அடிக்கடி தலைப்புச்செய்தியில் இடம்பெறுகிறது. கட்சியின் மறைந்த தலைவர் பால்தாக்கரே அரசியல் கேலிசித்திர கலைஞராக பணியாற்றியவர்.
போராட்டத்தில் உருவான கட்சி
மும்பையில் உள்ளூர் மக்களுக்கே முதல் உரிமை என்று கூறி மராத்தியர்களை ஆதரித்து, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து மும்பையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை பால் தாக்ரே, 1960 களில் தொடங்கினார்.
பால் தாக்கரேவின் உக்கிரமான சொல்லாட்சி அவரை இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக ஆக்கியது, அவர் தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது அவரது ஒரு குரல், மும்பை மற்றும் மகாராஷ்டிராவை ஸ்தம்பிக்க வைக்கும்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு 1992-93 இல் மும்பையில் நடந்த கலவரம் தொடர்பான அரசு விசாரணையில், முஸ்லிம்களைத் தாக்க சதி செய்ததாக சிவசேனை உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சித் தலைவர்கள் பலர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். ஆனால் கலவரம் தொடர்பான எந்த ஒரு குற்றத்திலும் பால் தாக்கரே மீது குற்றம்சாட்டப்படவில்லை.
2014-15ல் அக்கட்சி பல தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதில் கட்சி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியையும் ரத்து செய்தது. முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் புத்தக வெளியீடும் கூட அனுமதிக்கப்படவில்லை.
சிவசேனைக்கு இப்போது தனது தளத்தை பலப்படுத்துவதும், கடந்த காலத்தில் தனக்கு புகழையும் கூடவே அவப்பெயரையும் கொண்டு வந்த அதே வெறித்தனம் இன்னும் தன்னிடம் இருப்பதாக மக்களை நம்ப வைப்பதும் கடினமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உத்தவ் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மும்பையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஒருவர், சிவசேனை கடுமையான சிக்கலில் இருப்பதாகவும், அதன் தலைவர் இப்போது தனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கூறுகிறார்.
"1960 களில் மராத்தியர்களின் உரிமைகள் தொடர்பான கவலைகளில் இருந்து சிவசேனை உருவானது. பின்னர் அது வலதுசாரி இந்துத்துவ சித்தாந்தத்திற்கு இடம்பெயர்ந்தது. ஆனால் இன்று அது மீண்டும் முன்பிருந்த அதே கவலைகளை எதிர்கொள்கிறது."என்று அவர் குறிப்பிட்டார்.
சிவசேனை தனது அடிமட்ட தொண்டர்களிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார். "கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப இது உதவும். ஆனால் அதற்கு சில வருடங்கள் ஆகும்," என்றார் அவர்.
அக்கட்சியின் 39 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் இணைந்து அடுத்த அரசை அமைத்தால், உத்தவ் தாக்கரே பிரிவு சிறிதுகாலத்திற்கு அரசியலில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கவேண்டி வரலாம். இந்த நிலையில், அவரது தொண்டர்களும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்கினால் தாக்கரேவின் சிரமங்கள் மேலும் அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
கட்சி மீது கிளர்ச்சியின் தாக்கம்
கிளர்ச்சி காரணமாக அடிமட்ட நிலையில், எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை.
கட்சித் தொண்டர்களின் விசுவாசம் தாக்கரே குடும்பத்தினர் மீது உள்ளது என்று கட்சியின் ஷோலாப்பூர் மாவட்டத் தலைவர் குருஷாந்த் தத்காவுங்கர் கூறுகிறார்.
ஆனால் சில மாவட்டங்கள் மற்றும் நகரங்களில், சிவசேனை தொண்டர்கள் கிளர்ச்சித் தலைவர்களிடம் தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
இதுவரை தங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு விசுவாசமாக இருக்கும் சில எம்எல்ஏக்களில் ராகுல் பாட்டீலும் ஒருவர். தொண்டர்கள் இன்னும் உத்தவ் தாக்கரேவுக்கு விசுவாசமாக இருப்பதாக அவர் கூறுகிறார். "சிவசேனை ஒரு சிந்தனை, ஒரு இயக்கம், ஒரு சிந்தனையை யாராலும் கொல்ல முடியாது. நாங்கள் பாலாசாஹேப்பின் குழந்தைகள். எங்கள் மரணம் வரை அவருக்கு விசுவாசமாக இருப்போம்."என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த காலங்களில் இதுபோன்ற பின்னடைவுகளில் இருந்து கட்சி எப்பொழுதும் மீண்டு வந்துள்ளது. இது தாக்கரே குடும்பத்திற்கு சிறிது நிம்மதியை அளிக்கக்கூடும்.
ஒவ்வொரு பின்னடைவுக்குப் பிறகும் கட்சி வலுவாக மீண்டும் உருவெடுத்துள்ளது என்று கட்சித் தலைவர் குருஷாந்த் தத்காவுங்கர் குறிப்பிட்டார். "பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்தோம். ஆனால் அந்த கூட்டணியும், வலுவும் இப்போது இல்லை," என்று அவர் கூறினார். நடப்பு சவால்தான் சிவசேனை எதிர்கொண்ட சவால்களில் மிகப்பெரியது என்று அவர் கருதுகிறார்.
"ஆட்சியில் இருக்கும் போது கிராமங்களில் நாங்கள் செய்யும் பணிகளுக்கு தொடர்ந்து நிதி வரும். எம்.எல்.ஏ.க்கள் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் நிதி எளிதாகக் கிடைக்கும். எங்களால் வேலை செய்ய முடியவில்லை என்றால், நாங்கள் எங்கள் வாக்காளர்களை இழந்துவிடுவோம்."என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'எதிர்ப்பை கிளப்பியவர்களுக்கு தண்டனை கிடைக்கும்'
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, வரவிருக்கும் சட்டப்பேரவைத்தேர்தலில், கிளர்ச்சியாளர்களை வாக்காளர்கள் தண்டிப்பார்கள் என்று எம்எல்ஏ ராகுல் பாட்டீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "வாக்காளர்கள் கிளர்ச்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் பாடம் கற்பிக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
சிவசேனையின் அடையாளம் தாக்கரே குடும்பத்துடன் தொடர்புடையது என்றும் அது மீண்டு வருவதற்கு இது உதவும் என்றும் சிலர் நம்புகின்றனர். தாக்கரே குடும்பம் இல்லாமல் கட்சி இருக்க முடியாது என்று பால்ஷிகர் கூறுகிறார். உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே, பால் தாக்கரே பாரம்பரியத்தின் வாரிசுகள்.
கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், பால் தாக்கரேயின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும்,உத்தவ் தாக்ரே இருமடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினர் தாங்கள் பாலாசாஹேப் தாக்கரேயின் விசுவாசிகள் என்று மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.
உத்தவ் தாக்கரேயின் எதிர்ப்பாளர்கள் அவரது தந்தையின் பாரம்பரியத்தை அவரிடமிருந்து பறித்துவிட்டதாகத் தோன்றுகிறது. அடுத்த சட்டப்பேரவைத்தேர்தலுக்குள் உத்தவ், வலுவான மற்றும் உண்மையான சிவசேனை என்று சொல்லப்படும் நிலைக்கு திரும்புவாரா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












