நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை? சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், TWITTER/GETTY IMAGES
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
நூபுர் ஷர்மா மீதும் முகமது ஜுபைர் மீதும் ஒரே பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றாலும் நடவடிக்கைகள் வெவ்வேறாக இருப்பது ஏன் என்று சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர், திங்கள்கிழமை இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ட்விட்டரில், முகமது ஜுபைரின் பதிவு ஒன்றைக் குறிப்பிட்டு, "ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் இதில் படம் வெளியிடப்பட்டுள்ளது, எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டின் அடிப்படையில்தான், முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது. இந்த இடத்தில் நூபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளையும் பார்க்க வேண்டும்.
நூபுர் ஷர்மா
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா, முகமது நபிக்கு எதிராக ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தபோது, அவர் மீதும் இதே பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதாவது, இந்திய தண்டனை சட்டம், 153ஏ, 295 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அப்படியானால், இருவரது விவகாரங்களிலும் சாட்டப்பட்டுள்ள குற்றங்களும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் ஒன்றாகவே இருக்கின்றன. டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ (IFSO) பிரிவு, இந்த இரண்டு வழக்குகளிலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், அதாவது இரண்டு எஃப்.ஐ.ஆர்-களிலும் ஒரேமாதிரியான பிரிவுகள் இருக்கும்போது, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் ஒருவரும், வெளியே ஒருவரும் இருப்பது ஏன் என்று பல சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்திய தண்டனை சட்டத்தின் இந்த இரு பிரிவுகளையும் புரிந்து கொள்ள, பிரபல மூத்த வழக்குரைஞரும் எழுத்தாளருமான நித்யா ராமகிருஷ்ணனிடம் பிபிசி பேசியது. இந்த இரண்டு குற்றப்பிரிவுகளையும் மிக எளிமையான மொழியில் அவர் விளக்கினார்.
பிரிவு 153A என்றால் என்ன?
ஐபிசியின் 153ஏ பிரிவு பற்றி விளக்கிய அவர், "மதம், சாதி, பிறந்த இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் இருவேறு சமூகத்தினரிடையே வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் (பேச்சு மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது அடையாளமாகவோ) செய்யப்படும் செயல்களுக்கு எதிராக இந்தப் பிரிவுவின் கீழ் வழக்குப் பதியப்படலாம். இதன் கீழ் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் வருகிறது," என்று குறிப்பிட்டார்.
பிரிவு 295 என்றால் என்ன?
"ஒரு மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலத்திற்கு சேதம், அவமதிப்பு அல்லது அவதூறு ஏற்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைக்கு இந்தப் பிரிவுவின் கீழ் வழக்குப் பதியப்படலாம்," என்று நித்யா கூறினார். இதில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஜாமீன் பெறுவதற்கான விதிமுறைகளும் இதில் உண்டு.
இருப்பினும், நித்யா இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டுகிறார்.
"ஐபிசியின் எந்தப் பிரிவு ஜாமீனில் வெளிவரக்கூடியது அல்லது ஜாமீனில் வெளிவர முடியாதது என்பதைத் தவிர வேறு ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனையே இருக்கும்பட்சத்தில், அந்த நபர் கைது செய்யப்படக்கூடாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் இதை தெரிவித்துள்ளது. கடந்த 2-3 தீர்ப்புகளில் இது மீண்டும் சொல்லப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டாலும் அதற்கான காரணங்களை உறுதி செய்து, ஏன் கைது செய்கிறார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக குறிப்பிடவேண்டும். யார் மீது குற்றச்சாட்டு உள்ளதோ, அந்த நபருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவரை விசாரணைக்கு அழைக்கவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவும் முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது," என்று அவர் கூறுகிறார்,
இப்படிப்பட்ட நிலையில், முகமது ஜூபைரின் விவகாரம் என்ன, நூபுர் ஷர்மாவின் விவகாரம் என்ன என்பதையும், இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்துகொள்வோம்.
முகமது ஜூபைர் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், TWITTER/ZOO_BEAR
2018ஆம் ஆண்டில் முகமது ஜுபைர் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார். அதில் ஹனிமூன் ஹோட்டல் ஒன்றின் பெயர் இந்து கடவுளின் பெயராக மாற்றப்பட்டதன் படம் இருந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
அந்த ட்வீட்டைப் பகிர்ந்த ஒரு ட்விட்டர் பயனர், இது இந்து கடவுளை அவமதிப்பதாக எழுதினார்.
முகமது ஜூபைர் தனது ட்வீட்டில், அந்த புகைப்படத்தை 2014க்கு முன்னும் பின்னும் இருந்த ஆட்சியுடன் இணைத்து, ஒரு விதத்தில் கிண்டல் செய்திருந்தார்.
முகமது ஜுபைர் ட்வீட் செய்த புகைப்படமும் ஒரு இந்தி திரைப்படத்தின் காட்சிதான்.
"முகமது ஜுபைர் ட்வீட் செய்திருப்பது, குறிப்பிட்ட நபர்களால் விரும்பப்படாமல் இருக்கலாம். ஆனால் 153ஏ பிரிவைத் திணிப்பதற்காக, மேலும் பல விஷயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். இதன் உள்நோக்கம் என்ன, சமூகங்களுக்கிடையில் பகையை உருவாக்குவதா, பரஸ்பர நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா போன்றவை நிரூபிக்கப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் பிடிக்கவில்லை என்பதால் அதன் அடிப்படையில் 153ஏவை சுமத்த முடியாது. அதே போல 295 பிரிவை சுமத்துவதற்கு முன், எந்த வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தும் வேலையைச் செய்துள்ளார் என்று கூறப்படவேண்டும்," என்று நித்யா குறிப்பிட்டார்.
நூபுர் ஷர்மா மீதான குற்றச்சாட்டு

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா மே 26 அன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபிக்கு எதிராக ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து, நூபுர் ஷர்மாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, மிரட்டல் விடுக்கப்பட்டது. கான்பூரில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த வகுப்புவாத வன்முறையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
12க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கத்தார் மற்றும் இரான் இந்திய தூதரை வரச்சொல்லி எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கோரியது.
நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டலை கட்சியில் இருந்து நீக்கியது. நூபுர் ஷர்மாவுக்கு வந்த மிரட்டல்களை அடுத்து, டெல்லி போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கினர். டெல்லி போலீசார் நூபுர் ஷர்மா மீது ஐபிசி 153ஏ, 295, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் நூபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஒரே பிரிவுகள், நடவடிக்கை வேறு, இது ஏன்? - டெல்லி காவல்துறை பதில்

பட மூலாதாரம், ANI
இரண்டு வழக்குகளிலும் உள்ள பிரிவுகள் ஒரே மாதிரியானவை. ஒரு வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் நூபுர் ஷர்மா ஏன் கைது செய்யப்படவில்லை?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த நித்யா, "இந்தக் கேள்வியை டெல்லி போலீஸாரிடம் நானும் கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்வியை நீங்கள் காவல்துறையிடம்தான் கேட்க வேண்டும்" என்கிறார்.
டெல்லி காவல்துறையின் ஐஎஃப்எஸ்ஓ (IFSO) டிஜிபி, கேபிஎஸ் மல்ஹோத்ராவின் கருத்தை அறிய பிபிசி பலமுறை அவரை அழைத்தது. அவரது துறைதான் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. ஆனால் நேரத்தை உறுதி செய்த பிறகும் அவர் பிபிசியிடம் பேசவில்லை.
ஆனால் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், இதே போன்றதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், "2020ஆம் ஆண்டிலும், முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது 2022ஆம் ஆண்டு நடக்கிறது. அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, மற்றவர் மீது இல்லை என்று சொல்வது தவறு. 2020ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் நாங்கள் கண்டறிந்ததன் படி, நீதிமன்றத்தில் அறிக்கையை வழங்கியபோது இந்த கேள்வி எழவில்லை. விசாரணையில் வெளியாகி இருப்பதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
2020ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் முகமது ஜுபைர் கைது செய்யப்படுவதில் இருந்து உயர்நீதிமன்றம் அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது என்பதும் உண்மை.
"ஆட்சேபனைக்குரிய ட்வீட் காரணமாக ட்விட்டரில் வெறுப்பு பதிவுகள் குவியத்தொடங்கின. இது மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த வழக்கில் சாதனமும்(Device), நோக்கமும் முக்கியமாக இருந்தன. முகமது ஜுபைர் இவற்றில் இருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். தொலைபேசி ஃபார்மேட் (Format) செய்யப்பட்டுள்ளது. இது கைதுக்கு அடிப்படையாக அமைந்தது," என்று டிஜிபி கே.பி.எஸ்.மல்ஹோத்ரா கூறினார்.
முகமது ஜூபைரின் கைது நடவடிக்கை குறித்து எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
முகமது ஜூபைர் மற்றும் நூபுர் ஷர்மா விஷயத்தில் மற்றொரு தொடர்பும் உள்ளது.
நூபுர் ஷர்மா மே 26 அன்று தொலைக்காட்சி சேனலில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக முகமது ஜுபைர் வெளியிட்ட ட்வீட்டிற்கு பிறகே நூபுர் ஷர்மா விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது.
2018இல் பதிவிட்ட ட்வீட்டிற்காக அவர் 2022இல் கைது செய்யப்பட்டார். அதன் எஃப்ஐஆர் ஜூன் 20 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதாவது, நூபுர் ஷர்மா விவகாரத்துக்குப் பிறகு.
முகமது ஜூபைர், வேறு வழக்கின் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமது ஜுபைரின் கைது நடவடிக்கையின் முழு செயல்முறை குறித்து ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பலமுறை கேட்டும் எஃப்.ஐ.ஆர் கிடைக்கவில்லை
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா, "2020ஆம் ஆண்டின் ஒரு வழக்கு விசாரணைக்காக, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு முகமது ஜுபைரை திங்கள்கிழமை விசாரணைக்கு அழைத்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அவர் கைது செய்யப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பை வழங்கியது. ஆனால் மற்றொரு எஃப்ஐஆர் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று திங்கள்கிழமை மாலை 6:45 மணிக்கு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி அவர் கைது செய்யப்பட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆரின் நகலை எங்களுக்கு வழங்குவது கட்டாயமாகும். ஆனால் பலமுறை கோரிக்கை விடுத்தும் எப்ஐஆர் நகல் கிடைக்கவில்லை," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஜுபைர் கைது செய்யப்பட்டதில் நடைமுறை மீறல் நடந்துள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த நெல்சர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பைசான் முஸ்தபா, "ஜுபைர் வழக்கில் காவல்துறை முன்னரே நோட்டீஸ் கொடுக்கவில்லை. இதனால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எப்ஐஆரில் பிரிவு 153ஏ மற்றும் 295 மட்டுமே உள்ள பட்சத்தில் போலீசார் முன்னரே நோட்டீஸ் அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காவல்துறையும் கைது செய்வதை தவிர்த்திருக்க வேண்டும்.
ஏழாண்டுகளுக்கு குறைவான தண்டனை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு இதுவாகும். சாட்சியங்கள் சிதைக்கப்படலாம் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகலாம் என்ற அச்சம் இல்லாத பட்சத்தில் கைது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்," என்றார்.
எஃப்.ஐ.ஆரின் நகல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பைசான் முஸ்தபா, "எப்.ஐ.ஆரை பதிவேற்றுவது குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்திவிடும் என்று காவல்துறை கருதினால், அப்படிப்பட்ட சூழ்நிலையில், பதிவேற்றம் செய்யாமல் இருப்பது காவல்துறையின் சிறந்த முடிவு. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தாலும் சரி அல்லது அவரது வழக்குரைஞராக இருந்தாலும் சரி, எப்ஐஆரின் நகலை அவர்களிடம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் எந்த அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது வழக்குரைஞர் தங்கள் தரப்பு வாதத்தை தயார் செய்ய முடியும்," என்று கேள்வி எழுப்பினார்.
2018இல் பதிவிட்ட ட்வீட் மீது 2022இல் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. "கிரிமினல் சட்டத்தில் குற்றம் தெரியவரும்போதுதான், அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்," என்கிறார் பைசான் முஸ்தபா. டிஜிட்டல் மெய்நிகர் உலகில் விஷயம் பெரிதாகும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று டிஜிபி மல்ஹோத்ராவும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













