பாஜக-வின் மத நல்லிணக்க அறிக்கை, நபிகள் பற்றி பேசிய நிர்வாகிகள் நீக்கம்: என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Ajay Aggarwal/Hindustan Times via Getty Images
முகமது நபி பற்றி சர்ச்சைக்கிடமாகப் பேசி, கான்பூரில் ஒரு கலவரத்துக்கு வழி வகுத்ததாக குற்றம்சாட்டப்படும் ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக மற்றொரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் சித்தாந்தத்தையோ, ஆட்களையோ பாஜக முன்னிறுத்தவில்லை என்று ஓர் அறிக்கையையும் பாஜக வெளியிட்டுள்ளது.
பொதுவாகவே இந்து பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தும், சமீப காலமாக பெரும்பான்மைவாதத்தை தீவிரமாக முன்னெடுப்பதாக குற்றம்சாட்டப்படும் பாஜக முகாமில் இருந்து இத்தகைய சமிக்ஞைகள் வெளியாவது அரசியல் வட்டாரத்தில் வியப்பை அளித்துள்ளது.
அதற்கான காரணங்களும் ஆராயப்படுகின்றன..
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முகமது நபி குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கட்சி உறுப்பினர் உரிமையில் இருந்தும், பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக பாஜக அறிவித்தது. கட்சியின் பார்வைக்கு முரணான கருத்துகளை வெளியிட்டதாக அவருக்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BJP
அதைப் போல அந்தக் கட்சியின் டெல்லி ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜின்டால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிடும் கருத்துகள் சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாகவும், கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது.
பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாக அறிக்கை
இதற்கிடையே, கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில்,
"பல்லாயிரம் ஆண்டுகால இந்திய வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மத ஆளுமையையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.
எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பாஜக தீவிரமாக எதிர்க்கிறது. அப்படி அவமதிக்கிற ஆட்களையோ, தத்துவத்தையோ பாஜக முன்னிறுத்துவதில்லை.இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் விருப்பப்படி எந்த மதத்தையும் பின்பற்றவும், ஒவ்வொரு மதத்தை மதிக்கவும் உரிமை அளிக்கிறது.இந்தியா தனது விடுதலையின் 75வது ஆண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், அனைவரும் சமமாகவும், கண்ணியத்துடனும் வாழும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அனைவரும் பொறுப்பேற்கிற, வளர்ச்சி, மேம்பாட்டின் பலன்களை அனைவரும் அனுபவிக்கும் ஒரு சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்," என்று கூறப்பட்டுள்ளது.
திடீர் திருப்பம்
உ.பி., மத்தியப்பிரதேசம், டெல்லி போன்ற பல இடங்களில் முஸ்லிம்களின் வீடுகள் அதிரடியாக அரசாங்கத்தால் இடித்துத் தள்ளப்படும் சம்பவங்கள் சமீப காலத்தில் அதிகரித்து வந்தன. தவிர, காசி, மதுரா போன்ற இடங்களில் மசூதிகளில் இந்து மதச் சின்னங்கள் இருப்பதாக புகார்கள் எழுப்பப்பட்டு அவை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பட மூலாதாரம், TWITTER @NupurSharmaBJP
எப்போதும் இந்துத்துவா கருத்தியலை முன்னெடுக்கும் பாஜக அதை தீவிரமாக்கியிருப்பதாக பொதுவாக விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்நிலையில்தான், முகமது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் பேச்சு காரணமாக, கான்பூரில் மத வன்முறை வெடித்தது. ஆனால், ஒரு தரப்பினர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பின்னணியில்தான் பாஜகவின் குரலில், செயலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியாவின், இந்தியர்களின் பொருளாதார ஆர்வங்கள் உள்ள சௌதி அரேபியா உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளில் முகமது நபி பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு தீவிர எதிர்வினைகள் வெளியாகத் தொடங்கிய நிலையில்தான், பாஜக இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதாக சமூக ஊடகங்களில் பலரும் விவாதிக்கின்றனர்.
முகமது நபி குறித்த நூபுர் ஷர்மாவின் கருத்துகளால் கோபம் அடைந்த அரபிக்கள் இந்தியாவின் பொருள்களை புறக்கணிக்க சொல்லி பிரசாரம் செய்வதாகவும், அது டிரென்ட் ஆவதாகவும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பதிவர் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









