குஜராத் கலவரம்: நரேந்திர மோதி மெளனம் காத்தது ஏன்? அமித்ஷா பதில்

பட மூலாதாரம், ANI
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வகுப்புவாத கலவரங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, ஒரு சிறப்புப் பேட்டியில் விரிவாக பேசியுள்ளார். அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த பிரதமர் நரேந்திர மோதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு வெளியான ஒரு நாள் கழித்து, அமித் ஷாவின் இந்த பேட்டி ஒளிபரப்பாகியுள்ளது. குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்பி ஏசான் ஜாஃப்ரியின் மனைவி ஜகியா ஜாஃப்ரியின் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோதி உட்பட 59 பேரை விடுவித்து எஸ்ஐடி அளித்த அறிக்கையை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏஎன்ஐ செய்தி முகமையின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு அளித்த 40 நிமிட நேர்காணலில் அமித்ஷா அது குறித்து விரிவாக பேசினார். அதன் விவரம்.
"அப்போதைய குஜராத் அரசின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
19 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பிரதமர் மோதி மீதான எல்லா குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்துள்ளது என்று அமித்ஷா கூறினார். மேலும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இந்தத்தீர்ப்பின் மூலம் பாஜக அரசின் மீது இருந்த கறை நீங்கியுள்ளது.
"பிரதமர் மோதியிடம் விசாரணை நடந்தது. ஆனால் தர்னா ஆர்ப்பாட்டம் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் நீதிமன்ற முறையை ஆதரித்தோம். நான் கைது செய்யப்பட்டேன்," என்று அமித் ஷா கூறினார்.
கலவரத்தில் மோதியின் பங்களிப்பு இருந்ததா?
கலவரத்தில் மோதியின் பங்களிப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது என்று அமித்ஷா கூறினார்.
கலவரங்கள் நடந்தன.அதில் அப்போதைய முதல்வர் மோதிக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அனைத்தும் தெளிவாகியுள்ளன என்றும் அமித் ஷா கூறினார்.
"கலவரங்கள் நடந்தன, அதை யாரும் மறுக்கவில்லை. மாநில அரசு அந்த கலவரத்திற்கு ஏற்பாடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கலவரம் தூண்டுதலால் நடந்தது என்றும் அதில் முதல்வரின் பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது."

பட மூலாதாரம், ANI
"ஆனால் முதல்வர் (நரேந்திர மோதி) அமைதிக்காக பலமுறை வேண்டுகோள் விடுத்தார். கலவரத்தை தடுக்க மாநில அரசு எவ்வளவோ முயன்றது. அவற்றை எல்லாம் இன்று நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது" என்றார் அமித்ஷா.
"குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமே துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது" என்றார் அவர்.
பிரதமர் மோதி 'வலியில் தவிப்பதை' பார்த்தேன்.
18-19 ஆண்டு கால போராட்டம். இவ்வளவு பெரிய ஒரு தலைவர் ஒரு வார்த்தை கூட பேசாமல், சிவபெருமான் உண்ட விஷம் போல எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எல்லா துயரங்களையும் எதிர்த்துப் போராடி வந்ததார். இன்று உண்மை வெளிவந்தவுடன் அவர் பொன் போல ஜொலிப்பதை பார்ப்பது பேரின்பமாகத்தானே இருக்கும் என்று அமித்ஷா குறிப்பிட்டார்..
"நீதித்துறை நடைமுறைகள் நடந்து கொண்டிருப்பதால், பிரதமர் மோதி அனுபவித்த இந்த வேதனையை நெருங்கி இருந்து பார்த்திருக்கிறேன். 'எல்லாம் உண்மையாக இருந்தாலும்கூட எதுவும் பேசப்போவதில்லை... மிகவும் வலிமையான ஒரு மனிதனால் மட்டுமே இந்த நிலைப்பாட்டை எடுக்க முடியும், "என்று அவர் மேலும் கூறினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு பேசிய அவர், உச்சநீதிமன்றம் எல்லா குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரம் குற்றச்சாட்டுகள் ஏன் சுமத்தப்பட்டன என்பதையும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது என்றார்.

பட மூலாதாரம், ANI
"ஒருவகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதை நிரூபித்துள்ளது. பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், சில சித்தாந்தங்களுக்காக அரசியலுக்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில என்ஜிஓக்கள் இணைந்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் பரப்பினர். எல்லோரும் பொய்யை உண்மையாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்."
'ஊடகங்களில் தலையீடு இல்லை'
'ஊடகங்களின் பணியில் எங்கள் அரசு தலையிட்டதில்லை. அந்த காலத்திலும் சரி, இன்றும் சரி நாங்கள் அப்படிச்செய்ததில்லை. ஆனால் அந்த நேரத்தில் பூதாகாரமாக மாறும் அளவிற்கு பொய்கள் உருவாக்கப்பட்டன. எல்லோரும் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டனர்."
"பிரதமர் மோதியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் முற்றுகைப் போராட்டம் நடத்தவில்லை, நானும் கைது செய்யப்பட்டேன், ஆனால் மறியல் போராட்டம் எதுவும் நடக்கவில்லை" என்றார் அமித் ஷா.
"மோதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் மனசாட்சி இருந்தால், மோதியிடமும், பாஜக தலைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்."

பட மூலாதாரம், Getty Images
குஜராத் கலவரத்தின் போது காலதாமதமாக நடவடிக்கை எடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, குஜராத் அரசைப் பொருத்த வரையில் நாங்கள் எந்த தாமதமும் செய்யவில்லை, குஜராத் பந்த் அறிவிக்கப்பட்ட அன்றே ராணுவத்தை அழைத்தோம் என்று கூறினார்.
"குஜராத் அரசு ஒரு நாள் கூட தாமதிக்கவில்லை. நீதிமன்றமும் இதை பாராட்டியுள்ளது" என்றார்.
"ஆனால் ராணுவ தலைமையகம் டெல்லியில் உள்ளது. இவ்வளவு சீக்கிய சகோதரர்கள் கொல்லப்பட்டபோது, 3 நாட்களாக எதுவும் நடக்கவில்லை. எத்தனை எஸ்ஐடிகள் அமைக்கப்பட்டன? எங்கள் அரசு வந்த பிறகு, எஸ்ஐடி அமைக்கப்பட்டது. இவர்கள் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள்."என்று அவர் கேள்வி எழுப்பினார்.
'மோதி குறிவைக்கப்பட்டார்'

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, ஜாகியா ஜாஃப்ரி வேறு ஒருவரின் அறிவுறுத்தலின்படி செயல்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்று குறிப்பிட்டார்.
சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மீது குற்றம் சாட்டிய அவர், "பாதிக்கப்பட்ட பலரின் பிரமாணப் பத்திரங்களில் என்ஜிஓ கையெழுத்திட்டது. அவர்களுக்கு இது தெரியவே தெரியாது. டீஸ்டா செடல்வாட்டின் என்ஜிஓ இதையெல்லாம் செய்து வந்தது அனைவருக்கும் தெரியும். அன்றைய யுபிஏ அரசு என்ஜிஓவுக்கு நிறைய உதவி செய்தது,"என்றார்.
"60 பேர் உயிருடன் எரிக்கப்பட்டது சமூகத்தில் சீற்றத்தை ஏற்படுத்தியது. கலவரம் நடக்காத வரை, இந்த சம்பவம் பற்றி யாரும் குறிப்பிடக்கூட இல்லை. அப்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் யாருமே இந்த சம்பவத்தை கண்டிக்கவில்லை."
இவை அனைத்தும் மோதியை குறிவைத்து, அவரது புகழை கெடுக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டவை என்று அமித்ஷா கூறினார்.
கலவரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்று அமித் ஷா கூறினார்.
"குஜராத்தில் முதலீட்டு மாநாடு நடக்கும் போதெல்லாம் குஜராத் கலவரம் குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தன. மோதி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அங்குள்ள பத்திரிகைகளில் அவரை அவமானப்படுத்தும் வகையில் கட்டுரைகள் வந்தன" என்றார்.
கலவரம் ஏற்பட காரணம்
"கலவரத்திற்கு முக்கியக் காரணம் கோத்ரா ரயில் எரிப்புதான். இதுவே கலவரத்திற்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் ,அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்றார்.
"ரயிலுக்கு தீ வைத்த பிறகு நடந்த சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை அல்ல. அவை சுய உந்துதலால் நடந்தவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கூடவே தெஹல்காவின் ஸ்டிங் ஆபரேஷன் அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பதால் அதையும் நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது," என்று அமித்ஷா கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமை வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு
குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்பி ஏசான் ஜாஃப்ரியின் மனைவி ஜகியா ஜாஃப்ரியின் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அப்போதைய முதல்வர் நரேந்திர மோதிக்கு க்ளீன் சிட் வழங்கியது.
ஜகியா ஜாஃப்ரி கடந்த ஆண்டு அதாவது 2021 டிசம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
' கிளீன் சிட் வழங்கப்பட்டது'
சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) 2012 பிப்ரவரி 8 அன்று, வழக்கை முடித்து வைப்பதற்காக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. நரேந்திர மோதி உட்பட 59 பேருக்கு எதிராக வழக்குத் தொடரக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று எஸ்ஐடி தனது அறிக்கையில், கூறியது.

பட மூலாதாரம், SAM PANTHAKY
இதையடுத்து எஸ்ஐடியின் அறிக்கையின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.
உச்ச நீதிமன்றம் ஜூன் 24ஆம் தேதி அளித்த தீர்ப்பில், "எஸ்ஐடியின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டின் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை, அதை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்" என்று கூறியது.
மோதி மீது போலியான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அவர் மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்று இந்த தீர்ப்புக்குப்பிறகு, பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.
குஜராத் கலவரத்தில் என்ன நடந்தது என்பது அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், ஜாகியா ஜாஃப்ரிக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸின் ஆதரவு இருந்தது," என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












