குஜராத் 2002 படுகொலை: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைப்பது எப்படி?

குஜராத் படுகொலை: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைப்பது எப்படி?

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், மிஹிர் தேசாய்
    • பதவி, பேராசிரியர், ஹார்வர்ட் சட்ட கல்லூரி

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

2002இல் நிகழ்ந்த குஜராத் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கில் முழு விசாரணை முடிந்து குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 14 பேருக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சர்தார்புரா எனும் பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, அப்பாவிகளான 17 பெண்கள், எட்டு ஆண்கள் மற்றும் எட்டு குழந்தைகளை உள்பட 33 பேரை தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எரித்துக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனைவருமே முஸ்லிம்கள்.

News image

இந்த படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 56 பேருக்கும் (இந்துக்கள்) கைது இரண்டே மாதங்களில் பிணை வழங்கப்பட்டது. குஜராத்தில் வழக்கு விசாரணைகளில் தவறுகள் நடப்பதாக உணர்ந்த உச்ச நீதிமன்றம், சர்தார்புரா வழக்கு உட்பட எட்டு வழக்குகள் குறித்த விசாரணைகளை கையாள ஒரு சிறப்பு விசாரணைக் குழு, சிறப்பு அரசு வழக்குரைஞர்கள் மற்றும் சிறப்பு நீதிபதிகளையும் நியமித்தது.

இறுதியில், குற்றச்சாட்டப்பட்ட 56 பேரில் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட, அதில் 14 பேரின் தண்டனையை மட்டும் உறுதி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

வழக்கமான நடைமுறைகளின்படி பார்க்கும்போது, குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது முடிவு எடுக்கப்படும் வரை அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு இருக்கக் கூடாது.

குஜராத் படுகொலை: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, பிணை வழங்குவது விதிமுறையாக இருக்க வேண்டும், விதிவிலக்காக இருக்கக் கூடாது. தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 68% பேர் மீதான வழக்குகளின் விசாரணை இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக பார்த்தோமானால், சிறைகளில் விசாரணை கைதிகளாக இருப்போரில் 53% பேர் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்களாக உள்ளனர். மேலும் 29% பேர் கல்வியறிவற்றவர்கள்.

வழக்குரைஞர்களை நியமித்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாடும் அளவுக்கு பொருளாதார சூழ்நிலை இல்லாத நிலையிலேயே பெரும்பாலான விசாரணை கைதிகள் சிறைச்சாலைகளிலேயே முடங்கி உள்ளனர். விசாரணை கைதிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நீதித்துறையின் செயல்பாடு இருக்கவில்லை. விசாரணை கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டாலும், பிணை உத்தரவாதம் அல்லது உறுதித்தொகை போன்ற நிபந்தனைகளை அவர்களால் நிறைவேற்ற முடியாது.

இப்போது சர்தார்புரா வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணை கைதிகள் அல்ல; இருவேறு நீதிமன்றங்களினால் குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலை குற்றவாளிகள். ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கூட பிணை வழங்கப்படுவதுண்டு; ஆனால், சமீபத்திய காலங்களில் இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை கேள்விகளை எழுப்புகிறது.

குறிப்பாக, 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, நரோடா பாட்டியா படுகொலை சம்பவத்தின்போது தான் ஒரு முஸ்லிம் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து, சிசுவை வெளியே எடுத்து அதை திரிசூலத்தில் வைத்து குத்தியதை பெருமையாக கூறிய பாபு பஜ்ரங்கி என்பவருக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது அதிர்வலைகளை உண்டாக்கியது.

குஜராத் படுகொலை: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இதே நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மேலும் மூன்று குற்றவாளிகளுக்கும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

சபர்மதி விரைவு ரயிலை எரித்து அதன் மூலம் குஜராத் படுகொலை சம்பவம் நிகழ்வதற்கு தொடக்க புள்ளிகளாக இருந்த 94 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவருக்கு கூட விசாரணை முடியும் வரை பிணை அளிக்கப்படவில்லை. எனினும், சுமார் எட்டாண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் 94 பேரில் வெறும் 31 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அதே சமயத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அனைவருக்கும், பெரும்பாலான வேளைகளில் அரசுத் தரப்பின் எதிர்ப்பு இல்லாமலேயே பிணை வழங்கப்பட்டது.

இதே சமயத்தில், பீமா கோரேகான் வழக்கின் விசாரணையின் போக்கையும் கவனிக்க வேண்டும். இந்த வழக்கில் மாவோயிஸ்ட்டுகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர் பேராசிரியர்கள் மற்றும் வழக்குரைஞர்கள். இவர்களை மாவோயிஸ்டுகளாக குற்றஞ்சாட்டியதாக குறிப்பிடும் கடிதமானது, இவர்களில் யாரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்படவில்லை, இவர்களுக்கு யாராலும் எழுதப்படவில்லை, இவர்களது முகவரி கூட குறிப்பிடப்படவில்லை, ஏன் இவர்களது ஒருவரது மின்னஞ்சலுக்கு கூட அனுப்பப்படாத இந்த கடிதம் கையால் கூட எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிணை மறுக்கப்பட்டது. இந்த வழக்கில் உறுதியான எந்த ஆதாரமும் இல்லாமல், மாவோயிஸ்ட் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் சாய்பாபா என்பவர் 90 சதவீதம் மாற்றுத்திறனாளி, எண்ணற்ற உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்பவர். ஆனால், அவரது மேல்முறையீட்டு மனு இன்னமும் கூட உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

குஜராத் படுகொலை: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு, நீங்கள் உங்களது சொந்த மாநிலமான குஜராத்துக்கு செல்ல கூடாது, ஆனால் மத்தியப்பிரதேசத்தில் சமூக சேவை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

சீர்திருத்தத்தை தண்டனையின் நோக்கமாக அறிவித்து நடைமுறைப்படுத்துவது யோசனை என்றால், பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை, சபர்மதி எக்ஸ்பிரஸை எரித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது நக்சல்கள் எனும் குற்றச்சாட்டில் வலுவான ஆதாரம் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும்.

மதச்சார்பற்ற அரசமைப்பின் ஒரு அங்கமான உச்ச நீதிமன்றம், மத அடிப்படையில் வேறுபாட்டைக் காட்டுகிறது என்பதுதான் இப்போது பலரின் எண்ணம்.

அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்காதது, காஷ்மீரில் அமலிலுள்ள இணைய சேவை முடக்கம் தொடர்பான விவகாரத்தில் தெளிவான தீர்ப்பை வழங்காதது, மதத்தின் அடிப்படையில் பாகுபாட்டை உருவாக்கும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவகாரத்தில் தாமதமாக தலையிட்டது,

அசாமில் தேசிய குடியுரிமை பதிவேட்டால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரிவர கண்டுகொள்ளாதது, அயோத்தி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல் பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்தது, ஜாமியா மில்லியா மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலையிடுவதற்கு மறுப்பு தெரிவித்தது,

சபரிமலை விவாகரத்தில் நீர்த்துபோன நிலைப்பாட்டை எடுத்தது, தான் அளித்த தீர்ப்பை அமல்படுத்த முயற்சி செய்யாமல், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் ஆர்வத்தை காண்பிப்பது என உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு உதாரணங்களை அளிக்க முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: