சிறுமியிடம் முறைகேடாக நடந்த இளைஞர்கள் - வைரல் வீடியோவும் மத்திய பிரதேச நிலையும்

- எழுதியவர், ஷுரைஹ் நியாஜி
- பதவி, பிபிசி நியூஸ்
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் ஒரு பழங்குடியின சிறுமியிடம் அங்குள்ள சில இளைஞர்கள் முறைகேடாக நடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த வீடியோ வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்,"என்று அலிராஜ்பூர் காவல் நிலைய கண்காணிப்பாளர் மனோஜ் சிங் பிபிசியிடம் கூறினார்.
மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியாகும். மாவட்டத்தின் வால்பூர் கிராமத்தில் மார்ச் 11 ஆம் தேதி பகோரியா மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவிழாவில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் பின்னால் சிறுமி ஒருவர் ஒளிந்து கொள்ள முயல்வதையும், அதற்கிடையில் அவ்வழியாகச் சென்ற இளைஞர்களில் ஒருவர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொள்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அதே குழுவில் உள்ள மற்றொரு பையனும் அந்த பெண்ணை இழுக்க ஆரம்பித்து, அவர்கள் அவளை அழைத்துச் செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், Shuraih Niazi/BBC
பகோரியா திருவிழா
இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கே.மிஸ்ரா, அரசைக் கடுமையாக சாடியுள்ளார்.
முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு கேள்வி எழுப்பிய அவர், இந்த மாநிலத்தில் 'பேட்டி பச்சாவ்' இயக்கம் (மகளை காப்பாற்றுங்கள் இயக்கம்) இது போலத்தான் நடப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஹோலி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த பகுதியில் பகோரியா மேளா நடத்தப்படுகிறது. இது ஒரு வகையான திருவிழா. இதில் பழங்குடியினரின் கலாசாரத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் நீங்கள் நெருக்கமாகப் பார்க்கலாம். இதில் பழங்குடியின இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்திருப்பதைக் காணலாம்.
இதில் பொருட்களை வாங்குவதோடு, பழங்குடியினரின் இசை மற்றும் நடனத்தையும் காணலாம். இது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது மற்றும் இந்தத்திருவிழாவில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்கின்றனர்.
இந்த திருவிழாவில் பழங்குடியினர் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி விற்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்த கண்காட்சியில் நவீனத்துவத்தின் நிறமும் காணப்படுவதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதன் காரணமாக திருவிழா முன்புபோல இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதே சமயம், இந்த வீடியோ வைரலாகும் நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். மேலும், தற்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அவர்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Shuraih Niazi/BBC
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் மத்தியபிரதேசம்
குழந்தைகள் மீதான குற்றங்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளில் மத்தியபிரதேச மாநிலம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. அதே சமயம், பெண்கள் மீதான கொடுமைகளில் மாநிலம் 5வது இடத்தில் உள்ளது.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த மாநிலத்தில் 2,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2020 ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. மூன்று ஆண்டுகளாக இந்த மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 20 சதவிகிதம் அதிகம். 2020 ஆம் ஆண்டில், 2,339 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி தினமும் 6 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்.
மாநிலத்தில் காவல்துறையினர் ஏதும் செய்வார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால், அவர்கள் வழக்கு பதிவு கூட செய்வதில்லை என்பதை பார்க்க முடிகிறது என்கிறார் சமூக சேவகரும் வழக்கறிஞருமான சித்தார்த் குப்தா.

"அதே சமயம் மக்கள் வழக்கு பதிவு செய்யும் போது, காவல் துறையினர் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறி விடுகிறார்கள். இதனாலேயே குற்றம் நடந்த பிறகும் மக்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. இதனால் குற்றவாளிகளின் தைரியம் மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் சித்தார்த் குப்தா.
குற்றத்தைப் பற்றி புகார் செய்ய காவல்துறையிடம் சென்றாலும், வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. மாநிலத்தில் இதுபோன்ற பல விவகாரங்கள் தெரிய வந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகிவிட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறார்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மற்றொரு சமூக ஆர்வலர் விஜயா பதக் கூறுகிறார்,
"அரசு சொல்வதை செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியம். பெண்கள், சிறுமிகளுக்காக அரசு பெரிய முழக்கங்களை எழுப்புகிறது. ஆனால் குற்றச் சம்பவங்களைப் பார்த்தால், அதன் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












