"கச்சா எண்ணெய்‌ விலை உயர்வு இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ தாக்கத்தை ஏற்படுத்தும்‌"- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

கச்சா எண்ணெய்‌ விலை உயர்வு இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ விளைவுகளை ஏற்படுத்தும்‌ என்று மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரில்‌, செவ்வாய்க்கிழமை கர்நாடக மாநில பாஜக ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல்‌ நிகழ்ச்சியில்‌ பங்கேற்று அவர்‌ பேசியபோது, "யுக்ரேன் போர்‌ மற்றும்‌ கச்சா எண்ணெய்‌ விலை உயர்வு இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ விளைவுகளை ஏற்படுத்தும்‌.

இந்த சவாலை எதிர்கொள்ள எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளப்‌ போகிறோம்‌, அதன்‌ பாதிப்புகளை எப்படி சமாளிக்கப்‌ போகிறோம்‌ என்பது போகப்போகத்‌ தான்‌ தெரியும்‌.

இந்தியாவின்‌ எரிபொருள்‌ தேவையை பூர்த்தி செய்ய 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, வருகிறோம்‌. எரிபொருள்‌ விலை உயர்வது கவலை அளிக்கக்‌ கூடியதாகும்‌. அப்பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்‌.15 நாட்கள்‌ சராசரியின்‌ அடிப்படையில்தான்‌ எரிபொருள்‌ விலையை எண்ணெய்‌ நிறுவனங்கள்‌ முடிவு செய்கின்றன. தற்போதுள்ள நிலையில்‌ சராசரி, அதையும்‌ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

வேறு ஆதாரங்களில்‌ இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல்‌ செய்வது குறித்து ஆராய்வோம்‌. உலக கச்சா எண்ணெய்‌ சந்தையின்‌ போக்கைக்‌ கணிப்பது கடினமாகும்‌.

கச்சா எண்ணெய்‌ விலை உயர்வை அரசு சமாளிக்கும்‌ தேவை இருக்கும்‌. இதற்காக நிதிநிலை அறிக்கையில்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்‌ அது சராசரி விலை உயர்வைக்‌ கணக்கில்‌ கொண்டு ஒதுக்கப்பட்டது. தற்போது நிலைமை மோசமடைந்துவருகிறது. எனவே, நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்‌.

பெட்ரோல்‌, டீசல்‌ விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள்‌ கொண்டு வருவது தொடர்பான விவாதம்‌ ஜிஎஸ்டி கவுன்சில்‌ முன்பு இருக்கிறது" என தெரிவித்து உள்ளதாக தினமணி நாளிதழின் செய்தி கூறுகிறது.

பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்து

பட மூலாதாரம், Getty Images

பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தினதந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், இன்று முதல் 16ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களுடைய விண்ணப்ப பதிவினை செய்து கொள்ளலாம்.

தற்போது அறிவித்துள்ள தேதிகளில் விண்ணப்பிக்க தவறுபவர்கள் சிறப்பு அனுமதி (தட்கல்) முறையில் வருகிற 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, கூடுதல் கட்டணமாக மேல்நிலை பொதுத்தேர்வுக்கு 1,000 ரூபாயும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு 500 ரூபாயும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்பது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல், அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக விவரிக்கிறது தினதந்தி செய்தி.

தமிழ்நாடு பட்ஜெட்: 2022-23 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் மார்ச் 18-ஆம் தேதி தாக்கல்

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார் என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியபோது தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது.

அன்று, பேரவையில் அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

2022-23 நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021-22 ஆண்டுக்கான இறுதி துணை நிலை அறிக்கை ஆகியவையும் பேரவையில் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.

வேளாண் பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். துறைரீதியான மானிய கோரிக்கையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டால் அதன்படி தொடர்ந்து நடத்தப்படும். பட்ஜெட் தாக்கல் மற்றும் கேள்வி நேரம் ஆகியவை நேரடியாக ஒளிபரப்பப்படும். அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வது, தொழில்நுட்ப பிரச்னைகளை களைந்த பின் நடைமுறைப்படுத்தப்படும்.

நீட் தொடர்பாக பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரித்து தகவல் அளிக்கப்படும்.

கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதால், பேரவைக்குள் வரும்போது ஏற்கெனவே இருந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: