திமுக ஐடி அணி: 'பி.டி.ஆர் அமைதியாகவில்லை, பிஸி ஆகி விட்டார்!' - டி.ஆர்.பி. ராஜா பேட்டி

திமுக
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விலகிவிட்டார். அவரது இடத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

`பிடிஆர் ஸ்டைல் வேறு, என்னுடைய ஸ்டைல் வேறு. என்னுடைய அரசியல் என்பது பழையகால தி.மு.கவாக இருக்கும்' என்கிறார் டி.ஆர்.பி.ராஜா.

தமிழ்நாடு நிதியமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கிவந்தார். லக்னெளவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தைப் புறக்கணித்தது, ஈஷா யோகா மையத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்த பி.டி.ஆரின் டுவிட்டர் பதிவுகள் விவாதப் பொருளாக மாறியது.

தொடர்ந்து பி.டி.ஆரின் பதிவுகள் அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தவே, ஒருகட்டத்தில் அரசியல் பதிவுகளை அவர் தவிர்த்து வந்தார். தி.மு.க தலைமையின் அறிவுறுத்தலின்பேரிலேயே அவர் அமைதியாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக கட்சிப் பதவியில் இருந்து அவர் விலகலாம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த 18ஆம் தேதி தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக தலைமைக்குக் கடிதம் கொடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ நியமிக்கப்படுகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய பொறுப்பு குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், `நான் பயணிப்பதற்கு ஒரு புதிய பாதைக்கான விளக்கை தலைவர் ஏற்றி வைத்திருக்கிறார். முதல்வர் மற்றும் உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்

பட மூலாதாரம், @PTRMADURAI, TWITTER

படக்குறிப்பு, பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்

டி.ஆர்.பி.ராஜாவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். அவர் (பி.டி.ஆர்) என்ன செய்துள்ளார் என்பதைப் பார்த்துவிட்டு அடுத்த வாரம் முதல் பொறுப்பை ஏற்க இருக்கிறேன். இதுவரையில் ஐ.டி விங்காக இருந்தது. அவர் இருந்த வரையில் தி.மு.கழகத்தின் உள்விவகாரங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார். பூத் வாரியாக அனைத்தையும் வரைமுறைப்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அணியில் சமூக வலைதளம் என்பது ஒரு பகுதிதான். இங்கு ஐ.டி விங் என்றாலே சமூக வலைதளம் என நினைக்கின்றனர்'' என்கிறார்.

தொடர்ந்து, கட்சிப் பதவியில் இருந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விலகியது குறித்துப் பேசிய ராஜா, `` அவர் நிதியமைச்சரான காலகட்டத்தில் தமிழ்நாடு மோசமான நிலையில் இருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதனை சீரமைப்பதே மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. ஜி.எஸ்.டி விவகாரம், ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெறுவது என அவர் எதிர்பார்த்தது வேறு. ஆனால், நடைமுறையில் உள்ளவை வேறாக உள்ளது. இந்தளவுக்கு வேலை இருக்கும் என அவரும் எதிர்பார்க்கவில்லை. எனவே, நிதித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறார்'' என்கிறார்.

ஸ்டாலின்

மேலும், ``அரசாங்கத்தின் நிதி நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையே முக்கிய இலக்காக வைத்து செயல்பட வேண்டும் என நினைக்கிறார். இதன் காரணமாக, கழகத்தை மட்டும் பார்க்க முடியாது. மக்களையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த அ.தி.மு.க அரசாங்கம் ஒவ்வொரு துறைகளையும் சிதைத்து வைத்திருக்கிறது. அதனை சரிசெய்வது மிக முக்கிய வேலையாக இருப்பதால், தகவல் தொழில்நுட்ப அணியில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை'' என்கிறார்.

``சமூக வலைதளங்களைக் கையாள்வதில் மற்ற கட்சிகளைவிடவும் தி.மு.க பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறதே?'' என்றோம். `` பா.ஜ.க ஆள்கள் படித்த பள்ளியில் நாங்கள் பி.எச்டி முடித்தவர்கள்.

பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் சமூக வலைதளங்களில் அதிகப்படியாக வேலை பார்ப்பதால் எங்களால் சற்று கவனம் செலுத்த முடியவில்லை. இந்த அணியை ஒரு கடல்போல பி.டி.ஆர் வைத்துள்ளார். இதில் அவரது ஸ்டைல் என்பது வேறு, என்னுடைய ஸ்டைல் என்பது வேறு. என்னுடைய அரசியல் என்பது பழையகால தி.மு.கவாக இருக்கும். சமூக வலைதளங்களில் நானும் போராளியாக இருந்ததால், என்னென்ன குறைபாடுகள் இருந்தன என்பது ஓரளவுக்குத் தெரியும். அதில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் உற்சாகமடையும் அளவுக்குச் செயல்படுவேன்'' என்கிறார்.

``ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பி.டி.ஆரின் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதன்பிறகு அவரும் அமைதியாகிவிட்டாரே?'' என்றோம்.

``அவர் அமைதியாகவில்லை. அரசுப் பணிகளில் பிஸியாகிவிட்டார். அவரை யாரும் அமைதிப்படுத்த முடியாது. அது திராவிட ரத்தம். எங்கள் கட்சியின் தலைவர் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வார். அவர் எப்போது எந்தப் பணியைக் கொடுத்தாலும் செய்வோம். இனி வரும் நாள்களில் சமூக வலைதளங்களில் இறங்கி அடிக்கும் அளவுக்கு தி.மு.கவின் பணி இருக்கும்'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: