தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: "ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பெரிய மாநிலங்களுக்கு கூடுதல் வாக்கு வேண்டும்"

பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதி அமைச்சர்

பட மூலாதாரம், @ptrmadurai, Twitter

தற்போதைய ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டமைப்பை மாற்றாவிட்டால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என முதல் முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றது குறித்தும், மத்திய அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கினார் தியாகராஜன்.

''கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு சில மாதங்களாவது சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு தரவேண்டும் என கோரியிருக்கிறோம். தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு விலக்கு தரமுடியாமல், அந்த வரியை வசூலித்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் ஓர் அரசு இருந்தால், அந்த அரசு திறமையான நிர்வாகமற்ற அரசு என்றுதான் கூற வேண்டும்.

ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று தெரிவித்தோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு என சுட்டிக்காட்டினோம். மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தோம்,'' என்றார் நிதி அமைச்சர்.

''நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநில அரசுகளின்றி ஒன்றிய அரசு இல்லை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினோம்,'' என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி

பட மூலாதாரம், Getty Images

ஜிஎஸ்டி கூட்டத்தில் பெரிய மாநிலங்களில் இருந்து பங்கேற்பவர்கள் பேசுவதற்கு அதிக நேரம் தரவேண்டும் எனவும், கூட்டத்தில் பேசும் விவரங்களை மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் அனைவரும் அறிந்து கொள்ளும்படியான வசதிகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

''வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாநிலத்துக்கு வாக்குகள் இருக்க வேண்டும்; தமிழகத்தை பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.

மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு திருப்பித் தரும் நிதி தமிழகத்திற்கு 30 சதவீதம் அளவுக்கே உள்ளது. ஜிஎஸ்டி வரி முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளது. அது முழு ஆய்வு இல்லாமல் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டு வந்தால்தான் அது நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது,'' என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பற்றிய தனது கருத்துகளை நிதி அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :