மு.ஆனந்தகிருஷ்ணன்: அணு கொள்கையில் இந்தியாவுக்கு உதவியது முதல், கணினி தமிழ்ப் பணி வரை

மு.ஆனந்தகிருட்டிணன்

பட மூலாதாரம், @dsureshkumar, Twitter

    • எழுதியவர், மறைமலை இலக்குவனார்
    • பதவி, தமிழறிஞர்

இன்று மறைந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் கல்வி பயின்று இந்திய அளவில், உலக அளவில் முக்கியப் பொறுப்புகளை வகித்துப் புகழ்பெற்றவர்.

கணினித் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர். இவரது தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின்பேரிலேயே அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தார்.

எனவே, பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் வரலாறு இளையதலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டிய ஆவணம். முன்னேறவேண்டும் என்னும் உணர்வளிக்கும் ஊக்க ஊற்று.

1928ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் வாணியம்பாடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆனந்தகிருஷ்ணன். முதல் ஐந்து வகுப்புகளை நகராட்சிப்பள்ளியில் பயின்று பின்னர் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தவர்.

கல்லூரி இடைநிலை வகுப்பு என்னும் இண்டர்மீடியேட் படிப்பை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் பெற்றார் அவர். அதன்பின் கிண்டி அரசினர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்தார். சிவில் இஞ்சினியரிங் பிரிவை விரும்பி எடுத்துப் படித்தார்.

படிப்பை முடித்து நெடுஞ்சாலைத் துறையில் இளநிலைப் பொறியாளராக 1952 ஆம் ஆண்டில் திருச்செந்தூரில் பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னையில் நெடுஞ்சாலை ஆய்வு மையத்திற்கு அவருக்கு மாற்றல் கிடைத்தது.

ஆனந்தகிருஷ்ணனின் அறிவுக்கூர்மையையும் திறமையையும் கண்ட நெருங்கிய நண்பர் ஒருவர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்குமாறு அறிவுரை கூறினார்.

1956ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக் கழக மாணவராக எம்.எஸ் படித்தார். ஆய்வுப் படிப்பும் முடித்து 1960ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அங்கே 'இந்திய மாணவர் பேரவை'த் தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் "அயல்நாட்டு மாணவர் அவை"யின் தலைவராகவும் பொறுப்புகள் வகித்தார்.

கான்பூர் ஐஐடி

பட மூலாதாரம், Getty Images

ஆசிரியர்-மாணவர் உறவு தழைக்கவும் மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அறிவுறுத்தவும் உறுதுணை புரிந்தார். மினசோட்டா பல்கலைக் கழகம் நோபல் பரிசு பெற்ற பலரை உருவாக்கிய பல்கலைக்கழகம். அங்கே ஆசிரியர்களாலும் உடன்பயின்ற மாணவர்களாலும் கொண்டாடப்பெற்றவர் ஆனந்தகிருஷ்ணன்.

1962-இல் தாயகம் திரும்பியதும் தில்லியில் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் அலுவலராகப் பொறுப்பேற்றார்.

எனினும் இவர் தமது பரந்த கல்வியையும் அரிய ஆய்வுகளையும் பகிர்ந்துகொண்டால் எவ்வளவோ பேரை உருவாக்கலாமே என்னும் சிந்தனையை இவருக்கு நண்பர்கள் ஏற்படுத்தினர்.

கான்பூர் ஐஐடி-யில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். ஆசிரியப் பணியில் ஈடுபாடும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆர்வமும் நிரம்பப் பெற்றவராக இவர் இருந்தார். பேராசிரியராக, துறைத்தலைவராக, புலத்தலைவராக, இயக்குநராக மேலும் மேலும் உயர்ந்தார். பல்கலைக்கழக வளர்ச்சிக் குழுவில் ஆய்வுரைஞராக, மத்தியப் பணியாளர் தேர்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாகப் பணியாற்றினார்.

இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை இவரை அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தது. அங்கு இவர் ஆற்றிய பணி என்ன தெரியுமா?

1974-இல் இந்தியா அணுகுண்டு சோதனை நிகழ்த்த முடிவு செய்தது. ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் போக்ரான் என்னுமிடத்தில் இந்தச் சோதனையை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தப் பணியை ஒப்படைத்தார்.

இந்தியா அணு ஆற்றலை ஆக்க வழியில் பயன்படுத்தவே விரும்புகிறது. இந்த அணுகுண்டுச் சோதனை அணுவை அமைதிப்பணிக்குப் பயன்படுத்தவே வழிகாட்டும் என்றும் கூறியது.

இந்தக் கருத்தை விளக்கும் வகையில் இந்தச் சோதனைக்கு "புன்னகைக்கும் புத்தர்" என்று பெயரிட்டது. ஆனால் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் இந்தச் சோதனையை எதிர்த்தன. அமெரிக்காவும், கனடாவும் கடுமையாக எதிர்த்தன. இந்தியாவின் தாராபூர் அணு உலைக்கு அமெரிக்கா எரிபொருள் வழங்கிவந்தது. இந்த சோதனையை ஒட்டி இதனை அமெரிக்கா நிறுத்திவிடும் ஆபத்து நெருக்கியது.

எனவே அமெரிக்க அரசு அலுவலர்களுக்கும் அறிவியல் வல்லுநர்களுக்கும் இந்தியா அமைதியை விரும்புகிறது என்றும், அதன் அணுச்சோதனை அமைதிக்காகவே என்றும் வலியுறுத்த ஓர் அறிவியல் வல்லுநர் வாஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதருக்கு அறிவியல் அலோசகராக இருந்தால் நல்லது என இந்திய அரசு நினைத்தது. அந்த ஆலோசகர் பணிக்கு ஆனந்தகிருஷ்ணனே பொருத்தமானவர் எனவும் கருதியது.

இப்பணிக்கு அமர்த்தப்பெற்ற பின்னர் அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப அறிஞர்களுடன் தொடர்புகொண்டு இந்தியாவின் நிலையை அவர்கள் உணரச்செய்தவர் ஆனந்தகிருஷ்ணன். மாதம்தோறும் தாராபூர் அணு உலைக்கு எரிபொருள் அமெரிக்காவிலிருந்து செல்லவேண்டும். ஒரு மாதம் இது தடைப்பட்டாலும் அணு உலைக்கு சிக்கல்.

தமது மதிநுட்பத்தால் தொடர்ந்து எரிபொருள் செல்ல வழிவகுத்த ஆனந்தகிருஷ்ணனின் திறமை பேசுபொருளானது. அமெரிக்க-இந்திய அரசுகளிடையே நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுத்தார் அவர்.

அணு விஞ்ஞானிகளுள் முன்னோடியாய்த் திகழ்ந்த ஹோமி சேத்னா அவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தமையால் விண்வெளி ஆய்வு முயற்சிகளிலும் அமெரிக்கா-இந்தியா இடையே புதிய உறவுகள் மலர ஆனந்தகிருஷ்ணன் வழிவகுத்தார்.

செயற்கைக்கோள்வழித் தொலைக்காட்சிக் கல்வியை (Satellite Instructional Television Experiment) சோதனை அடிப்படையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் அவரது உழைப்பே காரணம்.

இந்திய அரசு அமெரிக்காவின் நாசாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக 1975 ஆகஸ்டு முதல் நாளிலிருந்து இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் அகில இந்திய வானொலியும் இதற்குக் கூட்டுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டன.

பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் என்னும் நான்கு மாநிலங்களில் இருபது மாவட்டங்களையும் அவற்றுள் 2,400 சிற்றூர்களையும் இதற்காகத் தெரிவு செய்து செயற்கைக்கோள்வழித் தொலைக்காட்சி நிகழ்வு நிகழ்த்தப்பெற்றது.

குடும்ப நலத்திட்டம், உடல் நலம் தொடர்பான அறிவு விளக்க நிகழ்ச்சிகள் இந்தி, ஒரியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வழங்கப்பெற்றன. கல்விவாய்ப்பற்ற நாட்டுப்புற மக்கள் அறிவொளி பெறத் தூண்டுகோலாக அமைந்தது இந்நிகழ்ச்சி. ஆனால் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டுமானால் செயற்கைக்கோள் இந்தியாவுக்கு மேலே தொடர்ந்து நிலைகொண்டிருக்கவேண்டும். அதற்கு இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

அப்போது பிரதமர் இந்திராகாந்தி, அமெரிக்க அதிபர் நிக்சன் இடையே நல்லுறவு இல்லை. குடியரசுத் தலைவரின் துணைவர் கிசிஞ்சர் இந்தியாவை வெளிப்படையாகவே திறனாய்வு செய்பவர். யாரிடம் யார் சொல்வது? இந்தச் சூழலில் கிசிஞ்சரிடம் நட்புப் பூண்டு ஆனந்தகிருஷ்ணன் செயற்கைக்கோள்வழிக் கல்வி நீடிக்கச்செய்தார். இந்நிலையில், அவருடைய பணிக்காலம் நிறைவுற்றது.

அவரை புதிய தொழில்நுட்பத் துறைத்தலைவராக ஐக்கியநாடுகள் நிறுவனம் அமர்த்தியது.

ஐநா-வில் பணியாற்றி, வளரும் நாடுகளில் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்தோங்கச் செய்த பெருமையும் ஆனந்தகிருஷ்ணனின் சிறப்புகளில் ஒன்று. இதற்காகவே பத்தாண்டு காலம் ஐநா-வில் வளரும் நாடுகளின் அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி மையத்தில் துணை இயக்குநராகப் பணியமர்த்தப்பெற்றார் ஆனந்த கிருஷ்ணன். அகில உலகிலும் அறிவியலும் தொழில்நுட்பமும் தழைத்தோங்கப் பாடுபடுவதையே குறிக்கோளாகக் கொண்ட ஆனந்தகிருஷ்ணன் பிரேசில் நாட்டில் இப்பணியில் ஈடுபட்டு அந் நாட்டின் உயர்ந்த விருதைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமைசேர்த்தார்.

மால்கம் ஆதிசேசையா தலைமையில் அமைந்த குழு அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆனந்தகிருஷ்ணன் பெயரைப் பரிந்துரைத்தது. அவர் பதவி ஏற்றது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அகமதிப்பீட்டுத்திட்டம் முதலிய பாடத்திட்ட மாற்றங்களை ஏற்படுத்தினார் அவர். ஏட்டுச் சுரைக்காய்க் கல்விக்கு இடமில்லாமல் செய்தார், மாணவர்களின் படைப்பாற்றலுக்கு ஊக்கம் வழங்கும் கல்வி முறையை அவர் ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் அதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த நுழைவுத்தேர்வு முறையை அகற்றவும், ஒற்றைச் சாளரத் திட்டத்தை அறிமுகம் செய்யவும் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்தார்.

கிராமப்புற மாணவர்களுக்கு பதினைந்து விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தார். பல்கலைக்கழகம்-தொழில்துறை ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தினார். மாணவர்கள் கல்வியை நிறைவுசெய்யும் முன்னரே அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்தார். படிக்கும்போதே பணிவாய்ப்பு (Placement facility) அவர் வகுத்த அருமையான திட்டம்.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இரு முறை துணைவேந்தராகப் பணியாற்றினார். அப் பணிக்காலம் முடிந்ததும் தமிழ்நாடு உயர்கல்வி & ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் பணியமர்த்தப்பெற்றார்.

மின் ஆளுகைக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிலேயே முதல் முறையாக இணைய நிறுவனங்களின் வளர்ச்சிக்காக டைடல் பூங்கா என்னும் அமைப்பை தமிழ்நாடு அரசு நிறுவக் காரணமாக இருந்தார்.

பதினைந்தே மாதங்களில் 1,280,000 சதுர அடியில் 99 கோடி செலவில் உருவானது டைடல் பூங்கா. மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இதனைத் தொடக்கிவைத்தார்.

2003 முதல் 2008 வரை சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். மால்கம் ஆதிசேஷையா நிறுவி வளர்த்த இந் நிறுவனம் ஆனந்தகிருஷ்ணனால் மேலும் வளர்ச்சியடைந்தது.

கான்பூர் ஐஐடியின் ஆளுநர் குழுத்தலைவராக மிக நீண்டகாலம் இவர் பணியாற்றினார். தமிழ்நாட்டின் தலைநகரில் நிறுவப்பட்ட அறிவியல் நகரத்தின் தலைவராகவும் இவர் பணியமர்த்தப்பெற்றார்.

'உத்தமம்' என்றழைக்கப்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்பக்கழகத்தின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் அமைந்து கணினித் தமிழ்வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார் ஆனந்தகிருஷ்ணன். இன்றைய அரசுக்கும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த ஆய்வுரை வழங்கிவந்தார். இந்திய அரசு இவரது கல்விப்பணிக்காகவும் பொதுத்தொண்டுக்காகவும் பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :