கேட் தேர்வில் வெற்றி கண்ட 67 வயது தமிழ் மாணவர்: ஐஐடி-ல் சேரவும் திட்டம்

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையை சேர்ந்த 67 வயதான சங்கர நாராயணன், பொறியியல் துறையில் மேற்படிப்பிற்கான கேட் நுழைவுத் தேர்வில், இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அளவில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 17 சதவீத மாணவர்களில் இவரும் அடங்குவார்.
வயதை கணக்கில் கொள்ளவில்லை, கொரோனா பயத்தையும் பொருட்படுத்தவில்லை என்று கூறும் சங்கரநாராயணன், தனக்கு விருப்பமான ஆகுமென்ட் ரியாலிட்டி (Augument Reality) புலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக கேட் தேர்வை எழுதியாக கூறுகிறார். தற்போது சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி)ஆய்வு படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளதாக கூறுகிறார்.
கேட் தேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தேர்வு செய்த சங்கர நாராயணன், கணிதத்தில் 338 மதிப்பெண்களும், அறிவியலில் 482 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். 1987ல் முதல்முறை கேட் தேர்வை எழுதியதாகவும், அப்போது தேர்ச்சி பெற்று ஐஐடி காரக்பூரில் எம்.டெக் படித்ததாகவும் தெரிவித்தார்.
''ஐஐடி காரக்பூரில் படிப்பை முடித்துவிட்டு, சொந்த ஊரான திருநெல்வேலியில் இந்து கல்லூரியில் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றினேன். கணினி துறையில் ஈடுபாடு அதிகம் இருந்ததால், அமெரிக்கா மற்றும் சௌதியில் அந்த துறையில் பணியாற்ற வாய்ப்புகள் வந்தபோது ஏற்றேன். என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா திரும்பினேன். ஆனாலும் தொடர்ந்து கணினி துறையில் பணியாற்றுவதை ஈடுபாட்டுடன் செய்துவந்தேன். தற்போது அந்த ஈடுபாடுதான் என்னை கேட் தேர்வை மீண்டும் எழுதவேண்டும் என என்னை தூண்டியது,''என்கிறார் சங்கரநாராயணன்.
தனது பேரப்பிள்ளைகளை கோச்சிங் கிளாஸ் கூட்டிச்செல்லும் வேளையில் படிக்கும் ஆர்வம் அதிகரித்தது என்றும் தனது குடும்பத்தினரை ஊக்குவிக்க தேர்வுக்கு தயாரானதாக கூறுகிறார்.
''எனது மருமகள் கேட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தார். அவருக்கு சில சந்தேகங்கள் இருப்பதாக கூறினார். அந்த விண்ணப்பம் எப்படி உள்ளது என பார்த்த எனக்கு, நானும் தேர்வு எழுதவேண்டும் என தோன்றியது. முதலில் என் குடும்பத்தாருக்கு வியப்பாக இருந்தது. ஆனால் தேர்வுக்காக ஒரு மாத காலம் தீவிரமாக நான் பயிற்சிகளை மேற்கொண்டபோது அவர்களும் ஊக்கமளித்தார்கள். என் மருமகளுடன் நானும் தேர்வு கூடத்திற்கு சென்றேன்,''என்கிறார் நகைப்புடன்.

பட மூலாதாரம், sankara narayanan
தேர்வு கூடத்திற்கு செல்லும்போது, பாதுகாப்பு அலுவலர் ஒருவர், பெற்றோர் தேர்வு அறைக்கு வரக்கூடாது என கூறியதாகவும், பின்னர் தனது அடையாள அட்டையை காண்பித்து தேர்வுக்குச் சென்றதாகவும் கூறுகிறார்.
''வயதை ஒரு அளவுகோலாக நாம் கருதக்கூடாது. விருப்பமான துறையில் நாம் தொடர்ந்து நம்மை ஈடுபடுத்திக்கொண்டால், வயதை பற்றி கவலைப்படமாட்டோம். முதலில் என் மனைவி குழல் வாய்மொழி என் ஆரோக்கியம் பற்றி யோசித்தார். கொரோனா காலத்தில் ஏன் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடவேண்டும் என கேட்டார். பின்னர், என் விருப்பத்திற்கு உதவினார்,''என்கிறார்.
கேட் தேர்வு எழுதுவதற்கும், ஐஐடியில் ஆய்வு படிப்பில் சேருவதற்கும் வயதுவரம்பு இல்லை என்பது சங்கர நாராயணனுக்கு பெரும் நம்பிக்கையாக அமைந்ததாக கூறுகிறார்.
விரைவில் சென்னை ஐஐடியில் நடைபெறவுள்ள நேர்முகதேர்வுக்காக சங்கரநாராயணன் தயாராகிக்கொண்டிருக்கிறார். ''நான் பெற்றுள்ள மதிப்பெண்களை பார்க்கையில், நிச்சயம் நான் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்போதும், மனதை இளமையாக வைத்துக்கொள்ள படிப்பு உதவுகிறது,''என்கிறார்.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- "அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்" - விவேக் மனைவி அருட்செல்வி
- இந்தியாவில் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று: பிரசாரத்தை ரத்து செய்த ராகுல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












