கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும்

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை தமிழ்நாடு அரசு தனது அரசு காப்பகங்களில் தங்கவைக்கும் என்றும், அந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆதரவற்ற குழந்தைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில், ''ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா மாவட்டங்களிலும் ஏற்கனவே மாவட்ட சிறப்பு பணிப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகையாக உடனடியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசு ஏற்கும். பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசு ஏற்கும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் உறவினர் இருந்தால் குழந்தையைப் பராமரிக்கும் செலவாக 3,000 ரூபாய் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயதாகும் வரை உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனாவால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைக்கு ஐந்து லட்சம் ரூபாய் அந்த குழந்தையின் பெயரில் வங்கி வைப்பாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஆதரவற்ற குழந்தையாக மாறிவிட்ட குழந்தையின் கல்வி மற்றும் பாதுகாப்பை கண்காணிக்க சிறப்பு பணிப் பிரிவு தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












