நிர்மலா சீதாராமன்: ”சரஸ்வதி சிந்து நாகரிகம் என குறிப்பிட்டது ஏன்? விரைவில் விளக்கம் தருகிறேன்”

பட மூலாதாரம், Mint/getty7 images
2020 பட்ஜெட் உரை வாசிக்கும்போது சிந்துசமவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் எனக் குறிப்பிட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் பதிலுரையில் கூறவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிந்து சமவெளி நாகரிகத்தை 'சரஸ்வதி சிந்து நாகரிகம்' என குறிப்பிட்டதற்குக் காரணம் உள்ளது என்றும் விளக்கத்தை பட்ஜெட் உரை வாசித்த நாடாளுமன்றத்தில் கூறவுள்ளதாகத் தெரிவித்தார்.
பட்ஜெட் உரையில், இந்தியாவில் ஐந்து அருங்காட்சியங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக வரலாற்று தகவல்களைக் கூறும்போது, சிந்துசமவெளி நாகரிகம் குறித்த விவரங்களைக் குறிப்பிட்டார். அப்போது சிந்துசமவெளி நாகரிகம் என்பதற்கு பதிலாக சரஸ்வதி சிந்து நாகரிகம் என அவர் குறிப்பிட்டார்.
வேதகாலத்திலிருந்ததாக சொல்லப்படும் சரஸ்வதி நதி இருந்ததற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இன்னும் முழுமையாக அறியப்படாத நிலை உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் என்ற வார்த்தையை பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சரஸ்வதி சிந்து நாகரிகம் என அமைச்சர் குறிப்பிட்டது பலத்த விமர்சனங்களை எழுப்பியது.

பட மூலாதாரம், Hindustan Times/getty images
தமிழகத்திற்காக நிலுவை தொகை எப்போது?
அடுத்ததாக, ஜிஎஸ்டி வரி குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் நிர்மலா மாநில அரசுகள் ஒத்துழைத்தால்தான் பெட்ரோல்,டீசல் எரிவாயுவுக்கு ஜிஎஸ்டி கொண்டுவரப்படும் என்றார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பல மாநிலங்களுக்குத் திருப்பியளிக்கவில்லை என்றும் தமிழகத்திற்கு மட்டும் தரப்படவில்லை என எண்ணுவது தவறு என்றார். மேலும் தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்துத் தர முடிவுசெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில அரசாங்கங்களுக்கு ஒதுக்கியுள்ள நிதியைக் குறைக்கும் திட்டம் இல்லை என குறிப்பிட்ட அவர், நிதி ஒதுக்கீடுகள், நிதி ஆணையத்தில் முன்னர் முடிவுசெய்யப்பட்ட வகையில்தான் அளிக்கப்படுகிறது என்றார்.
தனது பட்ஜெட் உரை இரண்டரை மணிநேரம் வாசிக்கப்பட்டது நீண்ட உரை என்ற சாதனையைப் படைப்பதற்காகப் படிக்கவில்லை என்றும் ஒவ்வொரு துறையிலும் கொண்டுவந்துள்ள மாற்றங்களை தொகுத்து கூற நேரம் தேவைப்பட்டது என்றார்.
பிற செய்திகள்:
- டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?
- கொரோனா வைரஸ்: “எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்” - சீனாவில் சிக்கி தவிக்கும் பெண்
- மாநிலங்களவையில் கர்ஜித்த விப்லவ் தாக்கூர் - யார் இவர்? பேசியவை என்ன? - 5 தகவல்கள்
- விராட் கோலி, தோனி குறித்து கபில் தேவ் கூறுவது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













