மமதா பானர்ஜி பயணித்த விமானத்தை நோக்கி மற்றொரு விமானம் வந்ததாக புகார்

பட மூலாதாரம், Getty Images
(இன்றைய (மார்ச் 8) நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம் மோதும் வகையில் பறந்துவந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது விமானம் பறந்துகொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்புமின்றி மற்றொரு விமானம் எதிரே பறந்து வந்தது. இதனால் எனது விமானம் 8 ஆயிரம் அடி கீழே இறங்கியது. விமானியின் நேர்த்தியால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்தோ, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டிலிருந்தோ எந்தவித அறிவிப்பையும் இதுவரை பெறவில்லை," என குறிப்பிடப்பட்டுள்ளது என்று விவரிக்கிறது தினமணியின் அந்த செய்தி.
போருக்கு எதிர்ப்பு; ரஷ்ய சாலட்டை மெனுவில் இருந்து நீக்கிய கேரள உணவு விடுதி

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் உள்ள உணவு விடுதி ஒன்று போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான நடவடிக்கையை எடுத்து உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் கொச்சி நகரில் செயல்பட்டு வரும் உணவு விடுதியில், உள்ளூர் உணவுகளுடன், ஐஸ்கிரீம், சாலட் போன்ற வெளிநாட்டு உணவுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் ரஷ்யாவில் பிரசித்தி பெற்ற சாலட் ஒன்றும் இந்த உணவகத்தில் விற்கப்பட்டு வந்தது.
யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுத்து உள்ள சூழலில், போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த உணவு விடுதி ரஷ்ய சாலட்டை மெனுவில் இருந்து நீக்கி உள்ளது. அதுபற்றிய தகவலை பலகை ஒன்றில் எழுதி, அதனை விடுதியின் வாசலில் வைத்து உள்ளனர்.
இதுபற்றி அதன் உரிமையாளர் எட்கார் பின்டோ கூறும்போது, "இது ஒரு வகையில் போருக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையாகும். இது எந்த வகையிலும் விளம்பரத்திற்காக அல்ல. போர் வேண்டாம் என எளிய முறையில் தெரிவிக்க விரும்பினோம். இது ரஷ்யர்களுக்கு எதிரானது அல்ல. போருக்கு எதிரானது," என தெரிவித்து உள்ளதாக தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண் அதிகாரிகள் தலைமையில் 25 காவல் நிலையங்கள்

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண் அதிகாரிகள் தலைமையில் 25 காவல் நிலையங்கள் செயல்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகம், சீருடை அணிந்த சேவையில், மகளிரின் பங்கை அங்கீகரித்துக் கவுரவிக்கும் விதமாக இன்று, மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட உள்ளது.
இதில், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள 25 காவல் நிலையங்கள், பெண் காவல் அதிகாரிகள் தலைமையில் இன்று செயல்பட உள்ளன. ஒரு காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் பெண் அதிகாரிகள் தலைமைதாங்குவது, இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி காவல் ஆணையரகத்தின் உயர்மட்ட அளவில், தலைமையகம் , போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பா.விஜயகுமாரி, இன்று ஆவடிசட்டம் மற்றும் ஒழுங்கு இணை ஆணையராகக் கூடுதல் பொறுப்புவகிக்க உள்ளார். அதேபோல், தலைமையகம் மற்றும் நிர்வாக காவல் துணை ஆணையர் கோ.உமையாள், ஆவடி, செங்குன்றம் காவல் துணை ஆணையராகச் செயல்பட உள்ளார் என, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், இன்று ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் இணை ஆணையர், துணை ஆணையர் அலுவலகங்களின் செயல்பாடுகளுக்குத் தலைமை தாங்க உள்ள பெண் காவல் அதிகாரிகளை நேற்று மாலை ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், அம்பத்தூரில் செயல்படும் தற்காலிக காவல் ஆணையரக வளாகத்தில் சந்தித்து, வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார் என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












