சர்வதேச பெண்கள் தின வரலாறு: போராட்டத்தில் தோன்றி கொண்டாட்டத்தில் தொடர்கிற கதை

பெண்

பட மூலாதாரம், Getty Images

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது.

அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு.

1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.

எப்படித் தொடங்கியது?

வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.

இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 108-வது பெண்கள் தினம்.

கிளாரா ஜெட்கின்

பட மூலாதாரம், TOPICAL PRESS AGENCY

படக்குறிப்பு, கிளாரா ஜெட்கின்

எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது ஐ.நா. இதன்படி ஐ.நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் "சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும்.

உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளார்கள் என்கின்றன ஐ.நா. புள்ளி விவரங்கள்.

சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில்தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன.

வடிவம் பெற்றது எப்போது?

கிளாரா ஜெட்கின் ஒரு சர்வதேசப் பெண்கள் தினம் வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தபோது எந்த நாளில் அதைக் கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டு எந்த தேதியையும் கூறவில்லை.

முகமலை

பட மூலாதாரம், Allison Joyce/Getty Images

படக்குறிப்பு, இலங்கை முகமலையில் உள்ள மிகப்பெரிய கண்ணி வெடிக் களத்தில் புதைந்துகிடக்கும் வெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், "அமைதியும் ரொட்டியும்"தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நான்கு நாள்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாள்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய முடி மன்னரான ஜார் அரியணையை விட்டிறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.

இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் தினம் உண்டா?

பெண்கள் தினம் போல ஆண்களுக்கும் தினம் உண்டா?

ஆம். உண்டு. நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், 1990களில் இருந்துதான் இந்த வழக்கம் தொடங்கியது. ஆனால் இதனை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உள்பட 60 நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்கள், சிறுவர்கள் உடல் நலம், பாலினங்களிடையிலான உறவுகள், பாலின சமத்துவம் ஆகிய நோக்கங்களுக்காகவும், நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை முன்னிறுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

எப்படி கொண்டாடப்படுகிறது?

சர்வதேச பெண்கள் தினம் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாடுகளில் பெண்கள் தினத்தை ஒட்டி 3-4 நாள்களுக்கு பூக்கள் விற்பனை இருமடங்காகிறது. சீனாவில் அரசு கவுன்சில் அளித்த அறிவுரைப்படி பல இடங்களில் மார்ச் 8 அன்று பெண் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், எல்லா இடங்களிலும், நிறுவனங்கள் இந்த விடுமுறையை நடைமுறையில் தருவதில்லை.

A woman receives mimosa flowers at a vaccination hub in Rome, Italy on International Women's Day 2021.

பட மூலாதாரம், Getty Images

இத்தாலியில் பெண்கள் தினத்தில் மிமோசா பூக்களை வழங்கும் வழக்கம் உள்ளது. அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்கப் பெண்களின் சாதனையை கௌரவப்படுத்தி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் இந்த மாதத்தில் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்.

இந்த ஆண்டின் கருப்பொருள் என்ன?

Abortion rights activists celebrated Colombia decriminalising abortion up to 24 weeks of pregnancy

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டின் கருப்பொருள் "நிலையான நாளைக்காக, இன்றைய பாலின சமத்துவம்" என ஐநா அறிவித்துள்ளது. ஐநாவின் நிகழ்வுகள் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பருவநிலை மாற்றத்திற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர் என்பதை பொருத்து இருக்கும்.

இதுமட்டுமல்ல உலகளவில் வேறு சில கருப்பொருள்களும் உண்டு. சர்வதேச பெண்கள் தினத்திற்கான வலைத்தளம் - பெண்களுக்கான நேர்மறையான மாற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது #BreakTheBias, (வேறுபாடுகளை தவிர்ப்போம்) என்பதை கருப்பொருளாக தேர்வு செய்துள்ளது. மேலும் இதன்மூலம் "இந்த வேறுபாடுகளையும், குறிப்பிட்ட, குறுகிய பார்வைகளை" அற்ற உலகத்தை உருவாக்க முயற்சி செய்வோம் என அந்த வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :