தி.மு.க Vs வி.சி.க: "திட்டமிட்டே தோற்கடித்த ஆளும் கட்சி" - தொண்டர்கள் குமுறல்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் விவகாரத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகளின் குமுறல்கள் முடிவுக்கு வரவில்லை. `கூட்டணி என்ற முறையில் பதவிகளை ஒதுக்கினாலும் ஜாதி ரீதியிலான அணுகுமுறையில்தான் தி.மு.கவினர் எங்களைக் கையாண்டனர். சமூகநீதி பேசும் தி.மு.கவில் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில்.
சாலை மறியல் ஏன்?
செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் பேரூராட்சி. 15 வார்டுகள் கொண்ட இந்தப் பேரூராட்சிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவினர் 9 இடங்களில் வென்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஓர் இடத்திலும் ம.தி.மு.க ஓர் இடத்திலும் சுயேட்சை வேட்பாளர் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான பணிகளில் தி.மு.கவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், திருப்போரூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் இதயவர்மன் ஆகியோர் களமிறங்கினர்.
இதில், பேரூராட்சித் தலைவர் பதவி தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது. துணைத் தலைவர் பதவியை வி.சி.கவுக்கு ஒதுக்கி தி.மு.க தலைமைக்கழகம் அறிவிப்பினை வெளியிட்டது. இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சியின் 15ஆவது வார்டில் வெற்றி பெற்ற பாரதி சமரன் துணைத் தலைவர் ஆவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், தி.மு.கவின் பரசுராமன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைக் கண்டித்து வி.சி.க தொண்டர்கள் சாலைமறியல் போராட்டத்திலும் இறங்கினர். ஆனாலும், தி.மு.கவினர் தங்களின் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரவில்லை.

பட மூலாதாரம், VCK
"நிலவரம் தெரியாமல் வாங்கிவிட்டீர்கள்"
``என்ன நடந்தது?'' என பாரதி சமரனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``எங்களுக்கு துணைத் தலைவர் பதவி கிடைக்காததில் எந்தவித வருத்தமும் இல்லை. அதனை எதிர்பார்த்து தேர்தலில் நிற்கவில்லை. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வோர் காலகட்டத்திலும் சாதிரீதியான தாக்குதலை தி.மு.கவினரிடம் இருந்து எதிர்கொண்டோம். சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலேயே இவ்வாறு நடக்கிறது என்றால், பிற கிராமங்களின் நிலைமை என்னவென்று விவரிக்க முடியவில்லை'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய பாரதியின் கணவர் சமரன், `` தி.மு.க கூட்டணியில் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டவுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசனை நேரில் சந்தித்தோம். அவரோ, `கீழே உள்ள நிலவரம் தெரியாமல் தலைமையில் கூறி சீட் வாங்கிவிட்டீர்கள். இங்கு பலரும் ஜாதியாகவே இருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்களோ?'' என வேதனைப்பட்டார். இதன்பின்னர், தி.மு.க ஒன்றிய செயலாளர் இதயவர்மனை பார்த்தோம். அவரும், ` நான் பார்த்துக் கொள்கிறேன்' என உறுதியளித்தார்.

பட மூலாதாரம், VCK
கூவத்தூரில் என்ன நடந்தது?
இந்தத் தேர்தலில் தி.மு.க ஒன்பது இடங்களை வென்றது. சுயேட்சையாக வென்ற ஒருவர் தி.மு.கவில் இணைந்துவிட்டதால் அவர்களின் எண்ணிக்கை 10 ஆக மாறிவிட்டது. ம.தி.மு.க ஓர் இடத்திலும் வி.சி.க ஓர் இடத்திலும் வென்றது. இதன்பின்னர், மறைமுகத் தேர்தலையொட்டி கவுன்சிலர்கள் 11 பேரை மட்டும் அழைத்துக் கொண்டு கூவத்தூர் ரிசார்ட்டுக்கு இதயவர்மன் கூட்டிச் சென்றனர். வி.சி.க கவுன்சிலருக்கு அழைப்பு வரவில்லை. இதே ரிசார்ட்டில்தான் முன்பு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எங்களுக்கு அழைப்பு வராவிட்டாலும், கவுன்சிலர்களின் ஆதரவைப் பெறுவதற்காக கூவத்தூர் சென்றோம்.
அங்கு நீண்டநேரம் காக்க வைக்கப்பட்டோம். பிறகு தி.மு.க நகர செயலாளர் தேவராஜ் வந்ததும், `தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்' என அனைவரும் கூறினர். இதன்பின்னர், இரவு 1 மணியளவில் பட்டியலினத்தவர் அல்லாத கவுன்சிலர்களை வைத்து இதயவர்மன் கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது பேசிய சில கவுன்சிலர்கள், `வி.சி.கவுக்கு துணைத் தலைவர் பதவியை கொடுத்துள்ளனர். தலைவர், துணைத் தலைவர் என இரண்டு பேருமே எஸ்.சி ஆக உள்ளனர். நாம் இவர்களிடம் போய் கையைக் கட்டி நிற்க வேண்டுமா?' எனப் பேசியுள்ளனர்.
இதன்பிறகு எஸ்.சி அல்லாத இரண்டு பேரின் பெயர்களை துணைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளனர். இதற்காக சீட் குலுக்கிப் போட்டு தேர்வு செய்துள்ளனர்'' என்கிறார்.
சர்ச்சை வார்த்தையில் விமர்சித்த ஆளும் கட்சியினர்
தொடர்ந்து பேசிய சமரன், `` தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தபோது தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தோம். பின்னர் மதியம் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடக்க இருந்தது. இதற்காக திருக்கழுகுன்றத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்கு எங்கள் சார்பாக வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு வந்தார். எங்களுக்கு அவர் ஆதரவு கேட்டபோது, `துணைத் தலைவராக எஸ்.சி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது, உங்ககிட்ட வந்து நாங்க நிற்கணுமா?' என கவுன்சிலர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
அவர்களை சமாதானப்படுத்தும்விதமாக, `எங்களை வி.சி.கவாக பாருங்கள், எஸ்.சி சமூகம் என ஏன் பார்க்கிறீர்கள்?' எனக் கேட்டோம். ` நீங்கள் பதவிக்கு வந்துவிட்டால் எங்களால் ஊருக்குள் நடமாட முடியாது' என்றெல்லாம் பேசினார்கள். ஒருகட்டத்தில் நாங்களும் கோபமடைந்து, `தி.மு.க தலைமைக்குக் கட்டுப்படாமல் சாதியாக ஏன் நிற்கிறீர்கள். என் மனைவிக்குத் துணைத் தலைவர் பதவி வேண்டாம். நாளை சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது எங்கள் பகுதிக்கு நீங்கள் வாக்குக் கேட்டு வரத்தானே வேண்டும்?' என்றோம். அங்கிருந்த தி.மு.கவினரை வன்னிஅரசுவும் சமாதானப்படுத்தினார்.

பட மூலாதாரம், VCK
ஆனாலும், துணைத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தபோது, எங்களுக்கு முன்மொழியக் கூட ஆள்கள் இல்லை. திட்டமிட்டே தோற்கடித்தார்கள். இதனைக் கண்டித்து சாலை மறியல் செய்தோம். கூட்டணிக் கட்சிக்கு செய்யப்பட்ட மிகப் பெரிய துரோகமாக இதனைப் பார்க்கிறோம். தி.மு.க தலைமையின் உத்தரவையும் மீறி அக்கட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். சமூகநீதி பேசுகின்ற தி.மு.கவில் சாதி முகத்தோடு இருக்கின்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை'' என்கிறார்.
இதயவர்மன் சொல்வது என்ன?
வி.சி.கவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, திருப்போரூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் இதயவர்மனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 10 வார்டுகளை தி.மு.க வென்றது. ம.தி.மு.க ஓர் இடத்தையும் வி.சி.க ஓர் இடத்திலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க தரப்பில் மூன்று பேர் வெற்றி பெற்றனர். இதில், துணைத் தலைவர் பதவியை வி.சி.கவுக்கு ஒதுக்கினர். ஆனால் கவுன்சிலர்களோ, `தலைவர் பதவியை எஸ்.சி பிரிவுக்கு ஒதுக்கிவிட்டதால் துணைத் தலைவர் பதவியை பி.சி பிரிவுக்குத்தான் ஒதுக்க வேண்டும்' எனக் கூறினர். இவர்களில் ஐந்து கவுன்சிலர்கள் மட்டும்தான் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக வன்னிஅரசுவை வைத்துக் கொண்டு பேசினோம். அப்போது கவுன்சிலர்களும், `நாங்கள் எஸ்.சிக்கு வாக்களிக்க மாட்டோம்' எனக் கூறிவிட்டனர். இதையடுத்து, பரசுராமன் என்பவரும் மீனா குமாரி சந்திரன் என்பவரும் துணைத் தலைவர் பதவிக்கு நிற்பதாக அவர்கள் எதிரிலேயே கூறினர். அப்போது வாக்குவாதமும் நடைபெற்றது.

துணைத் தலைவர் எங்கே போனார்?
இதனையடுத்து, `கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நீங்கள் நின்றால் கட்சியைவிட்டே நீக்கிவிடுவோம்' என நான் மிரட்டினேன். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கேட்கவில்லை. இதில் பரசுராமனுக்கு 3 அ.தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவு கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றுவிட்டார். பாரதி சமரன் 3 வாக்குகளை வாங்கினார். கவுன்சிலர்களின் கையைப் பிடித்து என்னால் வாக்கு போட வைக்க முடியாது. எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை'' என்கிறார்.
மேலும், `` மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசனும் ஒவ்வொரு கவுன்சிலரிடமும் பேசிப் பார்த்தார். யாரும் கேட்கவில்லை. துணைத் தலைவர் பதவிக்குத் தேர்வான பரசுராமனும் வெற்றி பெற்றதோடு வீட்டை பூட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார். அவர் எங்கே போனார் எனவும் தெரியவில்லை'' என்கிறார்.
``சாதிரீதியான தாக்குதலை எதிர்கொண்டதாக வி.சி.க கூறுகிறதே?'' என்றோம். `` அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. தலைவர் எஸ்.சி ஆக இருப்பதால் துணைத் தலைவர் பதவியை பி.சி பிரிவினர் கேட்டனர். வி.சி.கவில் இருந்து வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் வந்தாலும் வாக்களிப்போம் என்றுதான் கவுன்சிலர்கள் கூறினர். மற்றபடி, வேறு எதுவும் நடக்கவில்லை'' என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












