உணவு, சமையல், உடல்நலம்: மகிழ்ச்சியான உணவில் ஊட்டச்சத்து அதிகம் - நோபல் பரிசு வென்றவரின் சமையல் குறிப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபர்ணா அல்லூரி
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
அபிஜித் பானர்ஜி முதன்முதலில் உணவை சமைத்தபோது அவருக்கு வயது 15.
அவரது பெயரைத் தெரிந்தவர்கள், அது பெரிய சமையல் கலைஞர் ஆவதற்கான தொடக்கம் அல்ல என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர் சமையல் வழியில் செல்லாமல், ஒரு புகழ்பெற்ற பொருளாதார நிபுணரானார் . 2019-ஆம் ஆண்டில் பெருமதிப்புக்குரிய நோபல் பரிசை வென்றார்.
ஆயினும், முதல் சமையலுக்கு அடுத்த நான்கு தசாப்தங்களில் தாம் சமைத்த "பல ஆயிரம் உணவுகளில்" அதுவே முதன்மையானது என்கிறார் அவர். சமையலறையில் அவரின் பரிசோதனைகள் இப்போது ஓர் ஆச்சரியமான சமையல் புத்தகத்தையே உருவாக்கியிருக்கின்றன.
"இதில் முரண்நகை என்னவென்றால், அபிஜித் ஒரு பொருளாதார நிபுணர் என்பதைவிட சிறந்த சமையல்காரர்" என்று அவரது புத்தகத்தை வெளியிடும் சிகி சர்க்கார் கூறுகிறார்.
"உங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கான சமையல்" என்று தலைப்பிடப்பட்ட அவரது புத்தகம் வசீகரமாக இருக்கிறது. ராஸ்பெர்ரி கூட்டு அல்லது ஒரு பருப்புக் குழம்பு எதுவானலும் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது மாத்திரமல்ல, நீங்கள் எப்போது அதைச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறது. உள்நாக்கை எட்டும் உங்களது சுவையால் மற்றவர்களைக் கவர ராஸ்பெர்ரி கூட்டு இருக்கிறது; "குளிர்கால நாளில் மென்மையான சால்வையைப் போல உங்களைச் சுற்றிக் கொள்வதற்கு" பருப்பு இருக்கிறது என்று எழுதுகிறார் அபிஜித்.
தனது மைத்துனருக்கு கிறிஸ்துமஸுக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருந்த சமையல் குறிப்புகளின் தொகுப்பாகத்தான் இந்தப் புத்தகத்தை தயாரிக்கும் பணி தொடங்கியது. ஆனால் சமையல் குறிப்புகளை ஒன்றாக இணைத்த போது, ஒரு சமையல் கலைஞராக மேலும் ஏதாவது இருக்கலாம் என்று அவரது உள்ளுணர்வு கூறியிருக்கிறது.
"சமைப்பது ஒரு சமூக நடவடிக்கை" என்று அவர் கூறுகிறார். "உணவு ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சில சமயங்களில், உணவு உங்கள் குடும்பத்திற்கு ஒரு பரிசு, சில நேரங்களில் அது ஒரு மயக்கும் செயல், சில நேரங்களில் அது சுய உணர்வின் வெளிப்பாடு." என்கிறார்.
அந்தந்தத் தருணங்களுக்கான சமையல் குறிப்புகள் அவரது புத்தகத்தில் உள்ளன. ஸ்பெயினின் ஒரு உணவை மாதிரியாகக் கொண்டு செய்யப்பட்ட கொண்டைக்கடலை சூப் காதலைச் சொல்ல பயன்படும்; ஒரு "முழு ருசியான" மற்றும் எளிதான பெங்காலி மீன் தொக்கு, இது உங்கள் நண்பரை ஆச்சரியப்படுத்த உதவும்; மொராக்கோ சாலட், உங்கள் துணைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் "உரையாடலுக்கு" பயன்படும். மது அருந்திய நாளில் சுவையான பிரியாணி உங்களது வயிற்றைக் காப்பாற்றுவதற்கு உதவும்.

பட மூலாதாரம், Juggernaut Books
வழக்கமாக சமையல் புத்தகங்களில் உள்ள உணவுகளின் புகைப்படங்களுக்குப் பதிலாக, அபிஜித் பானர்ஜியின் புத்தகங்களில் விளக்கப்படங்கள் நிறைந்திருக்கின்றன. சேயென்னி ஓலிவர் இந்தப் படங்களை உருவாக்கியிருக்கிறார்.
"என்ன உணவு என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்களின் மாறுபட்ட சுவை விருப்பங்களில் கவனம் செலுத்தியிருக்கிறோம்" என்கிறார் ஓலிவர்.
சமையல் என்பது ஒரு தாராளத்தன்மையுடன் செய்யப்படும் ஒரு செயல் என்பதைவிட, தேவை, பெருமை, பொறாமை போன்ற பல மனநிலைகளும் அழுத்தங்களும் நம்மைச் செய்யத் தூண்டும் நடவடிக்கை எனலாம். தனது புத்தகம் சமையலில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பெரிதும் உதவாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் அபிஜித். எனினும் வெறுமனே சமையல் செய்வது எப்படி என்பதைத் தாண்டிய பாடத்தை அது வழங்கும் என்கிறார்.
ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி தங்களது விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வுகளைச் செய்வதிலேயே தன்னுடைய பணிக்காலத்தின் பெரும்பகுதியைச் செலவு செய்தவர் அபிஜித் பானர்ஜி. அதுவே அவருக்கும் அவரது சகாக்களுக்கும் நோபல் பரிசைப்பெற்றுத் தந்தது. நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, சுவையான உணவின் மகிழ்ச்சி ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது என்று வழக்கமான நம்பிக்கைக்கு மாறான ஒன்றை அவர் கண்டுபிடித்தார்.
அதையே அவர் தனது புத்தகத்திலும் வழங்குகிறார். பெரும் செலவிலான பொருள்கள் ஏதும் இல்லாத எளிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் கட்டமைக்கப்பட்ட மகிழ்ச்சியான, சுலபமான சமையல் வகைகள் அவருடையவை. அவர் கூறும் யோசனை, உங்களுக்கு போதுமான நேரமோ, பொருள்களோ, அல்லது இரண்டுமோ இல்லாவிட்டாலும்கூட சரியான உணவைச் செய்வதற்கு உதவுகிறது.
உதாரணத்துக்கு, காய்கறிகள் பிரதானமாகவும், இறைச்சி அதில் இரண்டாம்பட்சமாகவும் இருக்கும் உணவை எப்படித் தயாரிப்பது? கோழி இறைச்சியை காய்கறி போல் சமைப்பது எப்படி? சர்க்கரை தீர்ந்துவிட்ட நேரத்தில், 15 நிமிடங்களுக்குள் ஒரு இனிப்பைத் தட்டுக்குக் கொண்டுவருவது எப்படி? என்பனவற்றையெல்லாம் விளக்குகிறது அவரது புத்தகம்.

பட மூலாதாரம், Getty Images
பானர்ஜியின் புத்தகம் குறிப்பாக பூமியில் குறிப்பிட்ட பகுதிக்கு என்று பொருத்திவிட இயலாத ஒன்று. நேபாளத்திலிருந்து சிசிலி வரையிலான சமையல் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது. ஆயினும் இந்திய, குறிப்பாக வங்காள சமையல் வாசனை ஆங்காங்கே வீசுகிறது. தேங்காய்ப் பாலில் வேகவைத்த இறால்கள் முதல் உள்ளூர் கிச்சடி வரை இதில் ஏராளமான பெங்காலி உணவுகள் உள்ளன.
மசாலா கலந்த கடலை முதல் காரமான புளிப்பு உருளைக்கிழங்கு வரையிலான இந்திய சாலை உணவுகளைக் கொண்டு ஒரு அத்தியாயமே நிரம்பியிருக்கிறது. மாம்பழ செவிச் எனப்படும் மாழம்பழக் கூட்டைச் செய்வதற்கு, தென் அமெரிக்க உணவிலேயே இல்லாத இந்தியாவின் பங்கனபள்ளி மாம்பழத்தைக் குறிப்பிடுகிறார் பானர்ஜி.
"மனித நாகரிகத்திற்கு இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பு" என்று பருப்புகளுக்கான மூன்று வெவ்வேறு சமையல் குறிப்புகளை அவர் கூறுகிறார். பருப்புகளைக் கொண்டு இன்னும் 20 சமையல் குறிப்புகளைக் கூற முடியும் என்றாலும், இந்த மூன்றுமே அந்த வேலையைச் செய்யும் என்று அவர் நம்பிக்கையுடன் எழுதியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
- இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
- 'கடன் பொறியில் சிக்கிய' இலங்கைக்கு 'நச்சு' உரத்தை அனுப்பிய சீனா - பின்னணி என்ன?
- ரூ.300 கோடி அறிவிப்பு: இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்வினை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












