எல்.ஐ.சி பங்கு விற்பனை: தங்க முட்டையிடும் வாத்தை அரசு விற்பதாக விமர்சனம்

LIC

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சல்மான் ராவி
    • பதவி, பிபிசி நிருபர்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் - எல்.ஐ.சி., உலகின் ஐந்தாவது பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். ஆனால், 'எல்.ஐ.சி'யின் சிறப்பு என்னவென்றால், அது முழுக்க முழுக்க அரசு நிறுவனம்.

1956ல் தேசியமயமாக்கப்பட்ட எல்ஐசி, பல தசாப்தங்களாக இந்தியாவின் ஒரே ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருந்தது.

2000 ஆம் ஆண்டில், காப்பீட்டுத் துறை மீண்டும் தனியார் நிறுவனங்களுக்குத் திறக்கப்பட்டது. இருப்பினும், எல்ஐசி இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக உள்ளது.

எல்ஐசி இன்சூரன்ஸ் துறையில் 75 சதவீதத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

எல்ஐசியின் 'சந்தை மதிப்பு, ' பங்குச் சந்தையில் அதன் ஐபிஓவைக் கொண்டு வர, மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'யிடம் அரசாங்கம் தாக்கல் செய்த ஆவணத்திலிருந்து மதிப்பிடப்படுகிறது. அரசாங்கத்தின் வரைவில் அதாவது 'டிஆர்எச்பி'யில், எல்ஐசியின் 'உட்பொதிக்கப்பட்ட மதிப்பு' 71.56 பில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் எண்ணம்

இந்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) செபியிடம் சமர்ப்பித்த வரைவில், 'எல்ஐசி'யின் 'ஐந்து சதவீத' பங்குகளை மட்டுமே, அதாவது 31.6 கோடி மதிப்பிலான பங்குகளை மட்டுமே' அரசு விற்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.63 ஆயிரம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த 'ஈக்விட்டி' பங்குகளில் 10 சதவீதம் காப்பீடு செய்யப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படுவதாக வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, சில பகுதிகள் 'ஆங்கர்' முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டுக்கான பாதுகாப்பை அளிக்கும். ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கும் ஏற்பாடும் இதில் இருக்கும்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், NIRMALA SITARAMAN

'பாலிசி' வைத்திருக்கும் 29 கோடி பேருக்குப் பத்து சதவீத பங்குகளை ஒதுக்குவது 'ஐபிஓ'வின் வெற்றிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.

மேலும், 'சில்லறை' முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடும் உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு எல்ஐசியில் நூறு சதவீத பங்குதாரராக உள்ளது. அதாவது நூறு சதவீத பங்குகளை அரசு கொண்டுள்ளது.

ஐபிஓ வெளியிடப்பட்ட பிறகு, எல்ஐசியில் 95 சதவீத பங்குகள் மட்டுமே அரசிடம் இருக்கும்.

ஐபிஓ வெளியிடப்பட்டதன் மூலம், எல்ஐசியின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை ஏற்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை, எல்ஐசியின் பொறுப்பு இந்திய அரசுக்கு மட்டுமே கட்டுப்படுவதாக இருந்தது. ஆனால் 'ஐபிஓ' வெளியிடப்பட்ட பிறகு, எல்ஐசி அதன் முதலீட்டாளர்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும்.

ஐபிஓ மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக அரசாங்கத்தின் கணக்கிற்குச் சென்றுவிடும், எல்ஐசிக்கு அதில் எந்தப் பயனும் இல்லை.

இந்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் (DIPAM) செயலர், துஹின் காந்த் பாண்டே, ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேசுகையில், மார்ச் 31, 2021 வரை அதாவது கடந்த நிதியாண்டின் இறுதி வரை எல்ஐசி 28.3 கோடி காப்பீடும் 10.35 லட்சம் முகவர்ளுடன் புதிய வணிக பிரீமியத்தில் 66% சந்தைப் பங்கையும் கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.

எல்ஐசி தொழிலாளர் கூட்டமைப்பின் எதிர்ப்பு

எல்ஐசி

பட மூலாதாரம், Ani

அரசின் இந்த முடிவுக்கு எல்ஐசி தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஏ.கே.பட்நாகர் பிபிசியிடம் பேசுகையில், எல்ஐசி 'தங்க முட்டையிடும் வாத்து' என்றும் பணம் காய்ச்சி மரம் என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த முடிவு, காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட அடிப்படை உணர்விற்கும் எதிரானது என்று பட்நாகர் கூறுகிறார். 1956ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், நிதியமைச்சர் சி.வி.தேஷ்முக்கும் நாட்டுடைமையாக்கும் போது, காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்குவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் இது பெரும் பங்காற்றும் என்று குறிப்பிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வங்கிகளுடன் ஒப்பிடும்போது அரசு காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி முற்றிலும் 'ஊழல் இல்லாத' நிறுவனமாக இருப்பதாகத் தொழிற் சங்கங்கள் கூறுகின்றன.

இது வரை எல்ஐசி இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர்களின் 99 சதவீத வழக்குகளில் 'செட்டில்மென்ட்' செய்து வருவதாகவும், அதேசமயம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் இந்தச் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அந்த அமைப்புகள் அளித்துள்ள விண்ணப்பத்தில், எல்ஐசியின் 'ஐபிஓ'வை பங்குச் சந்தையில் கொண்டு வர அரசு முன்வந்திருப்பது, நாட்டின் வலிமையான நிறுவனத்தை நிதி ரீதியாக அழிப்பது போன்றது என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கம் 5 சதவீத பங்குகளை அல்லது பங்குகளை மட்டுமே விற்பனை செய்வதாகத் தான் கூறிவருகிறது என்றும் ஆனால் செபியின் விதிமுறைப்படி, மூன்றாண்டுகளில் ஒரு நிறுவனத்தின் 25% பங்குகள் விற்பனைக்கு வர வேண்டும் என்று இருப்பதாகவும் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, ஐபிஓ வெளியிடப்பட்ட மூன்று ஆண்டுகளில் 25 சதவீத பங்குகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பட்நாகர் கூறுகிறார்.

தனியார் மயமாக்கலுக்கான தொடக்கமா?

பல்வேறு நிறுவனங்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு எல்ஐசியின் பணம் பயன்படுத்தப்பட்டதைத் தவிர, கடந்த நிதியாண்டில் அரசுக்கு வரி மூலம் மட்டும் ரூ.10,500 கோடி கிடைத்துள்ளதாகவும், 'டிவிடென்ட்' மூலம் ரூ.2889 கோடி கிடைத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

LIC IPO

பட மூலாதாரம், LIC INDIA/BBC

இது தவிர பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 36 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எல்ஐசியின் சொந்த சொத்து மதிப்பு சுமார் 38 லட்சம் கோடி ரூபாய் எனவும் அந்த அமைப்புகள் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, 2015 இல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) அதன் பங்குகளை விற்ற போது, எல் ஐ சியின் 1.4 பில்லியன் டாலர் அதில் முதலீடு செய்யப்பட்டது.

இதேபோல், கடனில் மூழ்கியிருந்த 'ஐடிபிஐ வங்கி'யை மீட்டெடுப்பதிலும் எல்ஐசி முக்கியப் பங்காற்றியது.

2020 மார்ச் மாதம் வரை எல்ஐசி பல்வேறு மின் திட்டங்களில் ரூ.24,803 கோடியும், குடியிருப்புத் திட்டங்களில் ரூ.9,241 கோடியும், பல்வேறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களில் ரூ.18,253 கோடியும் முதலீடு செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

பட்நாகர் கூறுகையில், முன்பு எல்ஐசி இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டது, இப்போது அந்த நிலை மாறி, முதலீட்டாளர்களுக்கு நன்மை செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார்.

எல்.ஐ.சி. தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, காப்பீட்டுத் துறையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக அழுத்தம் இது வரை இல்லாததற்குக் காரணம் இது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் என்றும் இப்போது காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும் என்றும் தன் தரப்பு வாதத்தை முன்வைக்கிறது.

அரசாங்கம் இப்போது எடுத்துள்ள முன்னெடுப்பு, எல்.ஐ.சி-யை 'தனியார்மயமாக்குவதற்கு வழி வகுக்கிறது' என்கிறார்.

'பொன் முட்டை இடும் வாத்தைக் காப்பாற்றுங்கள்' என, அரசுக்கு தொழிற்சங்கங்கள் பரிந்துரை செய்துள்ளன.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: